தொடர்கதை-கி.பி.3003-(அறிவியல் துப்பறியும் தொடர்)-பகுதி-(2)-பூரணி
தொடர்கதை-கி.பி.3003-(அறிவியல் துப்பறியும் தொடர்)-பகுதி-(2)-பூரணி
PUBLISHED ON : ஆக 20, 2010

இதுவரை: உலகையே ஆட்டிப்படைத்த போதை சாம்ராஜ்யத்தை அழிக்க, உலக நாடுகள் அனுப்பிய ஏவுகணையை, போதை சாம்ராஜ்ஜிய மன்னர்கள் அழித்தனர்.
இனி —
இந்திய விஞ்ஞான தலைமை ஆராய்ச்சிக் கூடத்தில், தலைமை விஞ்ஞானி பிரகடீஸ்வர் மிகவும் சோகமாக இருந்தார். அதே சமயம் இந்திய விண் கோபுரங்கள் அனுப்பிய அமெரிக்க வேவுகணை வெடித்து சிதறியதன் காரணங்களையும், புகைப்படங்களையும் பார்த்து குறிப்பெடுத்தப்படி இருந்தார். எப்பவும் சிரித்த முகத்துடன் எதிலும் இயல்பாக பழகி, நுணுக்கமான விஷயங்களை கூட சர்வ சாதாரணமாக கையாளும் திறமை கொண்ட பிரகடீஸ்வர் சோகத்துடன் இருப்பதைக் கண்ட இந்திய துணை விஞ்ஞானி சகாணி அவரின் கவனத்தை மாற்றும் வகையில் பேச்சை ஆரம்பித்தார்.
''மிஸ்டர் பிரகடீஸ்வர்... தாங்கள் இன்னும் சோகத்தில் இருந்து மீளவில்லையா?''
''யெஸ் மிஸ்டர் சகாணி. ஒரு நல்ல சந்தர்ப்பம் வீணாகி விட்டதே. நம் விண் கோபுரங்கள் பல அற்புதங்கள் புரிந்து, நம் திறமையை உலகுக்கு வெளிக்காட்ட இருக்கும் என்று நாம் நம்பிய சமயம், அந்த அமெரிக்க வேவுகணை வெடித்து சிதறியது நம் துரதிருஷ்டம் அல்லவா? அத்துடன் அந்த போதை சாம்ராஜ்ஜியத்தின் செயல்திறன் எந்த அளவுக்கு நம் எல்லாரையும் விட மேலோங்கி இருக்கிறது என்றும் ஊகிக்க முடிகிறது அல்லவா? இது கவலைப்படக்கூடிய விஷயம் தானே. அந்த சாம்ராஜ்ஜியத்தை அழிக்காத வரையில் இந்த உலக மக்களுக்கு நல்ல விடிவு இல்லையே...?'' பிரகடீஸ்வர் பெருமூச்சு விட்டார்.
''சரி. அதற்கான மாற்று வழி?'' கேள்விக்குறியோடு தலைமை விஞ்ஞானியை பார்த்தார் சகாணி.
''இருக்கிறது. இன்று என் வாழ்நாளில் ஒரு முக்கிய திருப்பம் காண இருக்கிறேன். ஆம். இந்திய அரசாங்கம் எனக்கு கொடுத்த முக்கிய பொறுப்புக்கு இன்று பதில் கூறப் போகிறேன்.''
''ஓ... அமெரிக்க வேவுகணை வெடித்து சிதறியதற்கான காரணங்களை கூறப் போகிறீர்கள் என்று சொல்லுங்கள். சரிதானே...?''
''இல்லை. அது மட்டும் அல்ல. போதை பொருள் உற்பத்தி செய்யும் மன்னர்களின் கண்களில் மிளகாய் தூவி, அவர்களின் கட்டுக்கடங்கா அதிநவீன சாம்ராஜ்ஜியத்தை பூண்டோடு அழிக்கவும் வழி சொல்லப் போகிறேன்.''
''அது எப்படி?'' தலையை தடவிக் கொண்டே கேட்டான் சகாணி.
''அதற்கான வரைபடம் தயார்!'' என்றார் பெருமிதத்துடன் பிரகடீஸ்வர்.
''வரைபடமா? என்ன அது?'' ஆச்சர்யத்துடன் கேட்ட சகாணி, மீண்டும் தலையை தடவிக் கொண்டான்.
''ஆம். போதை சாம்ராஜ்ஜியத்தை தாக்கி அழிக்கும் அதிநவீன விஞ்ஞான உத்தி கொண்ட ராக்கெட் வரைப்படத்துடன், உலக விஞ்ஞானிகளின் சிற்பியும், நம் இந்தியாவுக்கு பல பெருமைகளை சேர்த்தவருமான விஞ்ஞானி பவிஷ்கோஷ்தான் அந்த வரைபடத்துடன் வந்து கொண்டிருக்கிறார்.''
''ஆகா. அருமையாக வேலையை முடித்திருக்கிறீர்கள். மதிப்பிற்குரிய பெரிய விஞ்ஞானி பவிஷ்கோஷிடம் எந்த காரியம் கொடுத்தாலும் அது மாபெரும் வெற்றிதான். அதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. ஆனால்...?''
''என்ன சகாணி, ஏன் குழப்பம்? கேளுங்கள்!''
''இல்லை. அவர் எங்கிருக்கிறார். அவருக்கு உள்ள பாதுகாப்புகள் என்ன?'' என்று தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
''இல்லை. அது அவரை 'யார்' என்று உலகுக்கு அனாவசியமாக காட்டிக் கொடுத்துவிடும். எனவே, எந்த பாதுகாப்பும் இல்லாமல் தனித்து வரவே ஆலோசனை கூறியிருக்கிறேன்!''
''இதுவும் நல்ல யோசனைதான். ஆனால், அவரின் செயல்பாடுகளை எப்படி கண்காணிப்பீர்கள்?''
''இதோ பாருங்கள்!'' என்றபடி பிரகடீஸ்வர் தன் மேஜையின் மேல் இருந்த ஒரு சிறு மின் திரையை காட்டினார். அதில் பவிஷ்கோஷ் கார் வருவது தெரிந்தது.''
''ஆம் சகாணி. இந்த மின் திரைக்கும் அவர் காருக்கும் ஒரு சிறு மின் இணைப்பு உள்ளது. அதுவும் பவிஷ்கோஷ் வடிவமைத்ததுதான்.''
''ஆகா. அருமையான முன் யோசனையுடன் தான் காரியங்களை செய்திருக்கிறீர்கள். சரி. அவர் வர இன்னும் எத்தனை நாழிகை ஆகும்?''
''அதோ பாருங்கள். அவர் பார்லிமென்டின் பின் பகுதி வழியாக அதிக போக்குவரத்து இல்லாத வழியில் வந்து கொண்டிருக்கிறார். அநேகமாக இன்னும் கால் மணித்துளிகளில் அவர் இங்கு வந்து சேரக்கூடும்.''
அப்போது சகாணி தலையை மீண்டும் தடவிக் கொண்டே இருக்க அவர் தலையில் இருந்து ஒரு வளையம் உருண்டு ஓடியது. மிகவும் பரபரப்புடன் காணப்பட்ட பிரகடீஸ்வர் அதை எடுக்க போகவும், வானில் ஒரு பெரும் சப்தம். அவசரத்துடன் பிரகடீஸ்வர் தன் அறையின் திரைச்சீலையை தூக்கி வானை பார்த்தார். அவருக்கு உடம்பெல்லாம் நடுங்க ஆரம்பித்தது. மீண்டும் வானை பார்த்துக் கொண்டே இருந்தார்.
காந்த விசையால் இயங்கும் ஒரு பெரும் ஹெலிக்காப்டர், பவிஷ்கோஷ் பயணம் செய்த காருடன் அவரை காந்த விசையால் ஈர்த்துக் கொண்டு அதிவேகமாக வானில் பறந்து சென்று கொண்டிருந்தது.
இந்த சோக நிகழ்வுகளை கண்ட பிரகடீஸ்வர் கண்கள் குளமாயின. தன் கையில் வளையம் இருந்ததை உணர்ந்ததும், அப்படி என்றால், இந்த துரோக செயலுக்கு துணை போனவன் நிச்சயம் துரோகி சகாணியாகத்தான் இருக்க முடியும் என்று கோபத்துடன் தனக்குத்தானே பேசிக் கொண்டு 'டேய் சகாணி' என்று வேகத்துடன் அழைத்தபடி திரும்பிப் பார்த்தார். சகாணியை காணவில்லை. ஆனால், சகாணியின் கார் விஞ்ஞான ஆராய்ச்சிக் கூடத்திலிருந்து மிக வேகமாக வெளியேறிக் கொண்டிருந்தது.
( — 2 தொடரும்)
