PUBLISHED ON : ஜூன் 14, 2019

வேலுார் மாவட்டம், திருப்பத்துார், அறிஞர் அண்ணா தொடக்கப் பள்ளியில், 1964ல், 3ம் வகுப்பு படித்த போது, நடந்த சம்பவம்!
வகுப்பு ஆசிரியர், குப்புசாமி நாயுடு, எப்போதும் கையில் பிரம்புடன் இருப்பார். அவரை, 'புலி வாத்தியார்...' என்போம். தலைப்பாகைக் கட்டி, கண்ணாடி அணிந்திருப்பார்.
வாரத்தில், நான்கு நாட்கள் தான் வகுப்பு நடத்துவார். மற்ற நாட்களில், மூக்குப் பொடி போட்டு நன்றாக துாங்குவார். துாங்கும் போது, 'யாரும் தொந்தரவு செய்ய கூடாது...' என, உத்தரவு போடுவார்.
ஒரு நாள், கையில் பிரம்பை பிடித்தபடி, துாங்கிக் கொண்டிருந்தார். ஆய்வுக்கு வந்த தலைமை ஆசிரியர், அவர் அருகே சென்று, அந்த பிரம்பை எடுத்தார். அப்போது, 'யார்ரா... என் துாக்கத்தை கெடுத்தது...' என, கோபத்தில் எழுந்தார்.
எதிரில், தலைமை ஆசிரியரைக் கண்டதும், 'சார்... நீங்களா, உடம்பு சரி இல்லாததால ராத்திரி துாங்கல; லேசா கண்ணயந்துட்டேன்...' என்று பதறினார்.
தலைமை ஆசிரியர் எச்சரித்து சென்றதும், 'ஏண்டா பசங்களா... அவர் வந்த போதே, எழுப்ப கூடாதா...' என்றார்.
'துாங்கும் போது, தெந்தரவு செய்ய கூடாதுன்னு சொன்னீங்களே... உங்க பேச்சை மீறுவோமா சார்...' என, கோரசாக கூறினோம். அவர் முகத்தில் ஈயாடவில்லை.
இப்போது, எனக்கு, 60 வயதாகிறது. அந்த சம்பவத்தை நினைத்தால், சிரித்து விடுவேன்.
- டி.கே.சுகுமார், கோவை.
தொடர்புக்கு: 81244 07390
