
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே, திரும்பும்வரம் அரசு நடுநிலைப்பள்ளியில், 1977ல், 7ம் வகுப்பு படித்தபோது, ஆசிரியராக இருந்தார் நீலமேகம். மிக கண்டிப்பானவர். தவறு செய்தால் வித்தியாசமாக தண்டனை தருவார். 
பென்சில் நீளமுள்ள பிரம்பால் கைமுட்டிகளில் அடிப்பார். வலி சகிக்க முடியாது. இப்படி அடிவாங்கினான் வகுப்பு நண்பன் சக்கரவர்த்தி. தேம்பி அழுதபடி கடும் கோபத்தில், 'சரியான பாடம் கற்பிக்க வேண்டும்...' என்றான். 
அந்த ஆசிரியர் தினமும் மிதிவண்டியில், 7 கி.மீ., வந்து செல்வார். வகுப்பு இடைவேளையில், காம்பஸ் கருவியின் முள் முனையால், அவரது மிதிவண்டி டயரில் ஒரு குத்து விட்டான். அடுத்த நொடி காற்று முழுதும் இறங்கியது. குரூர மகிழ்ச்சியில் இருந்தோம். மாலையில் அது கண்டு நொந்தவர், வேறு ஒருவர் துணையுடன் ஊருக்கு சென்றார்.
அன்று சிரமப்பட்டதை மறுநாள் வகுப்பில் பகிர்ந்தார். மனதில் சஞ்சலம் ஏற்பட்டது. மதிய உணவு இடைவேளையின் போது, 'இன்னிக்கு யார் வண்டியை குறி வெச்சிருக்கீங்க...' என்று கேட்டார்.  அதிர்ச்சியுடன், 'தெரியாமல் செய்துட்டோம்... மன்னிச்சிடுங்க...' என்றோம். பெருந்தன்மையுடன், 'உங்க மனதே தண்டனை கொடுத்து விட்டது. இனி, தவறு செய்யாதீங்க...' என அறிவுரைத்தார்.
என் வயது, 58; விற்பனை துறையில் பிரதிநிதியாக பணியாற்றி வருகிறேன். அறியாமையால் செய்த தவறை மன்னித்து அந்த ஆசிரியர் தந்த அறிவுரை வாழ்க்கையில் முன்னேற உதவுகிறது. 
- எஸ்.ரவீந்திரன், சென்னை.
தொடர்புக்கு: 97869 98585

