PUBLISHED ON : ஜூலை 16, 2010

ராமானந்தர் தம் குருகுலத்தை ஒரு அமைதியான இடத்தில் ஒரு ஆற்றின் கரையின் பக்கம் அமைத்திருந்தார். அக்குருகுலம் சிறந்த முறையில் கல்வி அளிக்கிறது என்றும், அதில் பயின்று வந்தவர்களுக்கு எந்த நாட்டு மன்னரும் தயங்காமல் தம் தர்பாரில் வேலை போட்டுக் கொடுத்து விடுவார் என்றும் பெயர் பெற்றிருந்தது. அதனால், அந்த குருகுலத்தில் சேரப் பல நாடுகளிலிருந்தும் மாணவர்கள் முயல்வர். அவர்களுக்கு அங்கு எளிதில் இடம் கிடைத்துவிடாது. ராமானந்தர் குருகுலத்தில் சேர விரும்புபவர்களை நன்கு பரீட்சித்துப் பார்த்து திருப்தி அடைந்தாலே சேர்த்துக் கொள்வார்.
ஒருநாள் மாலையில், ராமானந்தரைக் காண பதினாறு வயது இளைஞன் ஒருவன் வந்தான். அவன் அவரது கால்களில் விழுந்து வணங்கி, ''குருதேவரே! தங்களது குருகுலத்தைப் பற்றி கேட்டு அதில் சேர்ந்து கல்வி பெற நான் வெகு தொலைவிலிருந்து வந்திருக்கிறேன். உங்களிடம் பயின்று எல்லா சாஸ்திரங்களிலும் நல்ல தேர்ச்சி பெற விரும்புகிறேன். அதனால், என்னைத் தங்கள் சீடனாக ஏற்றுக் கொள்ளும்படி வேண்டிக் கொள்கிறேன்!'' என்று பணிவுடன் கூறினான்.
அந்த இளைஞனை இரண்டொரு நிமிடங்கள் உற்றுப் பார்த்தார் ராமானந்தர். அந்த இளைஞனின் முகத்தில் அலாதியான ஒரு ஒளி வீசித் தம்மை வசீகரிப்பதை அவர் உணர்ந்தார். உடனே, ''என் குருகுலத்தில் யாரையும் சேர்த்துக் கொள்வதற்கு முன் அவனை நன்கு பரீட்சித்துப் பார்ப்பேன் என்பது உனக்குத் தெரியுமல்லவா? நான் இப்போது உனக்கு ஒரு சிறு பரீட்சை வைக்கப்போகிறேன். நான் கேட்கும் கேள்விகளுக்கு, நான் திருப்தி அடையும் விதத்தில் நீ விடைகூறினாலே, நீ அந்தப் பரீட்சையில் தேர்ந்து விட்டாய் எனக் கருதுவேன்!'' என்றார் ராமானந்தர்.
''குருதேவரே! கேள்விகளைக் கேளுங்கள்... நான் விடைகளைக் கூறுகிறேன்,'' என்று சற்றும் தயங்காமல் கூறினான் இளைஞன்.
''சரி! சாதாரணக் கேள்விகளாக பத்து கேட்கட்டுமா அல்லது கடினமான ஒரு கேள்வியை மட்டும் கேட்கட்டுமா?'' என வினவினார். ''கடினமான ஒரே கேள்வியை மட்டும் கேளுங்கள். அதற்கு நான் விடை அளித்து வெற்றி பெறுகிறேன்! உங்களைப் பத்து கேள்விகள் கேட்கச் சொல்லி அதற்கு விடை அளித்து உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறே பதம் பார்க்கப்போதும் என்பதுபோல, ஒரு கேள்வியின் பதிலை கொண்டு என் திறமையைத் தாங்கள் அறிந்துகொண்டு விடலாம்,'' என்றான் இளைஞன்.
அப்போது, ''நான் கேட்கும் அந்த ஒரே கேள்விக்கு, உடனே பதில் சொல்ல வேண்டும். கேள்வி இதுதான்... விதை முதலில் வந்ததா அல்லது மரம் முதலில் வந்ததா?'' என்று கேட்டார் ராமானந்தர். இளைஞன் சற்றும் தயங்காமல், ''மரமே முதலில் வந்தது!'' என்று விடை கூறினான். அதைக் கேட்ட ராமானந்தர், ''இது தான் சரியான விடை என்பதை நீ எந்தக் காரணத்தைக் கொண்டு கூறினாய்?'' என்று கேட்டார். அப்போது, ''மன்னிக்க வேண்டும் குருதேவரே! இப்போது தாங்கள் கேட்பது இரண்டாவது கேள்வி. தாங்கள் ஒரு கேள்வியை மட்டுமே கேட்பதாகக் கூறினீர்கள். அதனால், இந்த இரண்டாவது கேள்விக்கு நான் விடை அளிப்பது முறையல்ல என்பதைப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்,'' என்றான் இளைஞன். அதைக் கேட்டுத் திகைப்பும், ஆச்சரியமும் அடைந்த ராமானந்தர், புன்னகை புரிந்து அந்த இளைஞனின் கூரிய அறிவைப் பாராட்டி அவனை உடனேயே குருகுலத்தில் சேர்த்துக் கொண்டார்.
