
நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை, துாய சவேரியார் மேல்நிலைப் பள்ளியில், 1988ல், 10ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்.
தமிழாசிரியர் சிவசுப்பிரமணியன் அருமையாக போதிப்பார்; குறவஞ்சி எழுதிய திரிகூட ராசப்பர் வழி வந்தவர். அன்று என்னிடம், 'பத்தாம் வகுப்பு, 'பி' பிரிவு மாணவன் முருகனை அழைத்து வா...' என்றார்.
உடனே அவ்வகுப்பிற்குச் சென்று, வாசலில் தயங்கி நின்றேன். அங்கு தமிழாசிரியர் புலவர் மி.சே.கிரகோரி, அருவி போல ஒரு செய்யுளை முழங்கிக் கொண்டிருந்தார். என்னை பார்த்ததும், 'உள்ளே போ' என, கையால் சைகைக் காட்டினார். எதுவும் பேசாமல், அந்த வகுப்பு மாணவர்களுடன் அமர்ந்தேன். மிகச் சிறந்த சொற்பொழிவாளர் என்பதால், அவர் நடத்திய பாடத்தை ரசித்து கவனித்தேன்.
பாடம் முடிந்ததும், 'என்ன விஷயம்...' என கேட்டார். பயந்தபடியே விஷயத்தைக் கூறினேன். சிரித்தபடி, 'உனக்கு நல்ல தமிழ்ப் பெயர்; முருகனை அழைத்துச் செல்...' என்றார். நிம்மதி பெருமூச்சு விட்டேன்.
இப்போது என் வயது, 53; ஆசிரியராகப் பணியாற்றுகிறேன். எழுத்திலும், பேச்சிலும் சிறந்து விளங்க உதவிய, அந்த ஆசிரிய பெருமக்களை நன்றியுடன் நினைவில் கொண்டுள்ளேன்.
- கா.பசும்பொன் இளங்கோ, மதுரை.

