
திருப்பத்துார், கல்யாணராம ஆரம்பப் பாடசாலையில், 1965ல், 4ம் வகுப்பு படித்தேன். பள்ளி வளாகத்துக்கு வெளியே, சாலை ஓரம் இலந்தை, கொய்யா பழம், வறுத்த வேர்க்கடலை என, தின்பண்டங்களை குவியலாக வைத்து விற்று வந்தார் ஒரு மூதாட்டி.
முதிர்வால், தோல் சுருங்கி, பொக்கை வாயோடு காணப்பட்டார். அவரது மூன்று பிள்ளைகள் நல்ல பொருளாதார நிலையில் அருகே தான் வசித்து வந்தனர். அவர்களிடம் எதுவும் கேட்க மாட்டார்.வகுப்பாசிரியர் கணேசன், என் தந்தையுடன் படித்தவர். கனிவுடன் பழகுபவர். இதனால், அந்த மூதாட்டியின் சிரம உழைப்பு பற்றி அவரிடம் தெரிவித்தேன். கவனமுடன் கேட்டவர், 'தம்பி... வயல்வெளியில் கூலி வேலை செய்து, பிள்ளைகளை படிக்க வைத்து நல்ல நிலைக்கு கொண்டு வந்திருக்கிறார் இந்த மூதாட்டி...
'எப்போதும் உழைத்து பழகியவர் என்பதால், சும்மா உட்கார்ந்து சாப்பிட விரும்பவில்லை. அதனால் தான், இந்த வயதிலும் உழைக்கிறார். அதற்கு தடை போட அவசியமில்லை...' என்று தெளிவுபடுத்தினார்.வியப்புடன் கவனித்த எனக்கு அறிவுரைக்கும் வகையில், 'பெரியவன் ஆனதும், அந்த மூதாட்டி போல் உழைக்க கற்று கொள். ஓய்வு பெற்ற பின்னும், வீட்டில் முடங்கி கிடக்காதே...' என்றார். அதை மனம் ஏற்றது.தற்போது, என் வயது, 66; கூட்டுறவு வங்கி மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றேன். அன்று பள்ளியில் வகுப்பாசிரியர் அறிவுரைத்ததை, தெய்வ வாக்காக கடைபிடித்து சுறுசுறுப்புடன் வாழ்கிறேன்.
- டி.கே.சுகுமார், கோவை.