
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம், சோழபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில், 1965ல், 9ம் வகுப்பு படித்தபோது வகுப்பாசிரியராக இருந்தார் என்.கிருஷ்ணமூர்த்தி. கணித பாடமும் நடத்துவார். கனிவு பொங்க பண்புடன் பழகுவார். என் வீடிருந்த பகுதியில் தான் அவரும் வசித்து வந்தார்.
ஒவ்வொரு நாளும் காலை பசும்பால் எடுத்து சென்று அவரது வீட்டில் கொடுப்பேன். பின், அதிவேகமாக வீடு திரும்பி அவசரமாக புறப்பட்டு பள்ளி செல்வேன்.
ஒருநாள் அவரது மனைவி, திண்பண்டம் கொடுத்தார்; மற்றொருமுறை வினோதமான பழம் ஒன்றை கொடுத்தார். எடுத்து வந்து என் அம்மாவிடம் தந்தேன். அதை வியப்புடன் பார்த்தபடி பங்கிட்டு சாப்பிட்டோம். அது, ஆப்பிள் என என் குடும்பத்தில் எல்லாரும் அப்போது தான் அறிந்துகொண்டோம்.
அன்று கணக்கு பாட வேளையில் ஒரு கேள்வியை கேட்டார் வகுப்பாசிரியர். விடை தெரியாமல் விழித்ததால், 'இது கூடவா தெரியவில்லை...' என்றவாறு கன்னத்தில் அறைந்தார். தலை கிறக்கத்துடன் மயங்கி சாய்ந்தேன். கண் விழித்தபோது பள்ளி ஓய்வு அறையில் படுத்திருந்தேன்.
மதிய உணவுக்காக மணி ஒலித்தபோது அங்கு வந்த வகுப்பாசிரியர், 'என்னடா... இவ்வளவு பலவீனமாய் இருக்கிறாய்...' என அக்கறையுடன் விசாரித்தார்.
'காலையில் உணவு சாப்பிடாமல் வந்து விட்டேன் ஐயா...' என்றேன். கனிவு பொங்க சாப்பிட அனுப்பி வைத்தார். அன்றே என் தந்தையிடம் விசாரித்து, குடும்ப நிலையை அறிந்து கொண்டார்.
மறுநாள் முதல் காலை உணவாக இட்லி, பூரி, பொங்கல் என எடுத்து வந்து தந்தார். பள்ளி இறுதி வகுப்பை முடிக்கும் வரை அது தொடர்ந்தது. அப்படித்தான் எனக்கு காலை உணவு பழக்கத்துக்கு வந்தது. கல்லுாரியில் படித்த போது விடுமுறையில் ஊருக்கு வருவேன். அப்போது அந்த ஆசிரியரை சந்திக்காமல் தவிர்த்ததில்லை. அவர் விரும்பாத போதும் பரிசு பொருட்கள் தர தவறியதில்லை. ஒருமுறை கைக்கடிகாரம் வழங்கி மகிழ்ந்தேன்.
என் வயது, 72; சென்னை, அசோக் லேலண்டு நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றேன். கன்னத்தில் அறைந்து அறியாமையை அகற்றிய வகுப்பாசிரியர் என்.கிருஷ்ணமூர்த்தியை வணங்கி வாழ்கிறேன்.
- எஸ்.ஜெகமதி, மயிலாடுதுறை.
தொடர்புக்கு: 97913 46983