
கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டை, அரசு மேல்நிலைப் பள்ளியில், 1997ல், 12ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்!
பள்ளியில், 11ம் வகுப்பு வரை, பாடங்களை நடத்த தனித்தனி ஆசிரியர்கள் இருந்தனர். எந்த சிரமமும் இன்றி படிப்பை நிறைவு செய்தோம்.
கல்வி ஆண்டின் துவக்கத்தில், ஒவ்வொரு ஆசிரியரும் பணி இடமாற்றம் பெற்று வெவ்வேறு பள்ளிகளுக்கு சென்று விட்டனர்.
முறையாக பாடம் நடத்த போதிய ஆசிரியர்கள் இல்லை. பொதுத்தேர்வை எண்ணி பயத்துடன் இருந்தோம்.
தமிழ் பாடம் நடத்திய தலைமையாசிரியர் வரதராசுலு, அச்சத்தை போக்கும் வகையில் செயல்பட்டார். ஒவ்வொரு வார இறுதியிலும் சிறப்பு வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்தார். பக்கத்து ஊர் பள்ளிகளில் இருந்து, ஆசிரியர்களை வரவழைத்து கற்பிக்க வகை செய்து நம்பிக்கையை விதைத்தார்.
பெற்றோர் - ஆசிரியர் கழகம் சார்பாக, வேதியியல் பாடத்துக்கு தற்காலிக ஆசிரியராக திருமால் முருகனை நியமித்தார். அவர் வார நாட்களில், பிற்பகலில் பாடங்களை நடத்தி செய்முறை பயிற்சி தந்தார். தவறாமல் பலக்கட்டங்களாக தேர்வுகள் நடத்தி உதவினார். புரிந்து படித்து பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றேன்.
கல்லுாரியில் இளங்கலை வேதியியல் பயின்று, பின், முதுகலை, ஆய்வியல் நிறைஞர், கல்வியியல் பட்டங்கள் பெற்றேன்.
எனக்கு, 42 வயதாகிறது. கூடுவாஞ்சேரி, வித்யா மந்திர் எஸ்டான்சியா பள்ளியில், முதுகலை வேதியியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். பள்ளி நாட்களில் படிக்கல்லாக அமர்ந்து, கற்பித்த வேதியியல் ஆசிரியரையும், அர்ப்பணிப்புள்ள தலைமையாசிரியரையும் நன்றியுடன் வணங்கி பெருமிதம் கொள்கிறேன்.
- சீ.பாஸ்கர், செங்கல்பட்டு.
தொடர்புக்கு: 99411 47699