
வாழை இலையில், உணவு பரிமாறும் வழக்கம் பல இன பாரம்பரியங்களில் இருக்கிறது. இது தவிர வேறெந்த இலைகள் உணவு பரிமாற பயன்படுகிறது என்பதை பார்ப்போம்...
வாழை இலை: விருந்துகளில் அதிகம் பயன்படுவது வாழை இலை தான். பரந்து, விரிந்த அமைப்பில், எத்தனை வகை உணவுகளையும் அடுக்கலாம்.அவற்றுக்கு தக்க இடமுண்டு. வாழை இலையில் பாக்டீரியாவை எதிர்க்கும் பண்பு உள்ளது. சூடான உணவை, வாழை இலையில் பரிமாறி சாப்பிடுவது, குடல் நலனுக்கு உகந்தது. பசுமையான இலையில், சூடான உணவை பரிமாறும் போது, பச்சையம், சத்துக்கள் உணவுடன் சேர்ந்து கிடைக்கும்.
தாமரை இலை: குளம், கண்மாய்களில் படர்ந்து கிடக்கும். இலை வடிவமே ஒரு தட்டு போல இருக்கும். இதில் நீர் ஒட்டாது. இலை சுத்தமாக இருக்கும். உணவை பார்சல் கட்டுவதற்கு பயன்படும். இதில், அழற்சிக்கு எதிரான பண்புகளும், ஆன்டி- ஆக்சிடன்ட்களும் நிறைந்து உள்ளன.
தேக்கு இலை: நீடித்து உழைக்கும். இதில், பாக்டீரியாக்களுக்கு எதிரான பண்புகள் உள்ளன. கோவில்களில் பிரசாதம் வழங்க பயன்படுத்தப்படுகிறது. இதில், பரிமாறப்படும் உணவுகளின் சுவை அதிகரிக்கும்.
பலா இலை: பார்க்க சிறிதாக இருந்தாலும், மெல்லிய குச்சிகளால் தைத்து உண்ணும் தட்டு போல உருவாக்கப்படுகிறது. சில இடங்களில் இதில் உண்கின்றனர். குங்கிலிய இலை, மந்தார இலை, மாவிலை, ஆல இலையையும் தைப்பர். வீடுகளில், பொங்கல் வைத்து வழிபாடு நடத்தும் போது, இந்த இலைகளில் படைக்கும் வழக்கம் உள்ளது. இதில் பரிமாறப்படும் உணவுகளில், லேசான இனிப்பு தன்மை சேரும்.
- வ.முருகன்