PUBLISHED ON : ஏப் 18, 2026

பாளையங்கோட்டை, புனித சவேரியார் உயர்நிலைப் பள்ளியில், 1966ல், ஆங்கில வழி கல்வியில், 6ம் வகுப்பு சேர்ந்தேன். 6 முதல் 8ம் வகுப்பு வரை, எங்கள் வகுப்பாசிரியராக இருந்தவர், சுப்பிரமணிய அய்யர். ஆங்கிலம், கணித பாடங்களை மிக சிறப்பாகவும், எளிமையாகவும் நடத்தினார்.
ஆங்கிலத்தில் ஒரு பாடம் நடத்தி முடித்தவுடன், அதை அவரவர் பாணியில் கட்டுரையாக எழுதி வரச் சொல்லி, திருத்தித் தருவார். அப்போது, 'நோட்ஸ்' புத்தகங்கள், மாணவர்களிடையே பிரபலமாக இருந்தது. 'அது தேவையில்லை. உங்கள் சுய அறிவை பயன்படுத்துங்கள்; அது தனித்துவம் வாய்ந்ததாக இருக்கும்' என்பார்.
கல்வியறிவுடன், வாழ்க்கைக்கு முக்கியமான நல்லொழுக்கம், உண்மை, நேர்மை, நேரம் தவறாமை போன்றவற்றை, இளம் வயதிலேயே எங்களுக்குள் விதைத்தார். அதன் பலனாக, எங்கள் வகுப்பு தோழர்களில் மூவர், சென்னை ஐ.டி.ஐ.,யிலும்; ஒருவர், எம்.ஐ.டி.,யிலும் படித்து முடித்தனர்.
மருத்துவர், பொறியாளர், ஆடிட்டர், வங்கி, ஆயுள் காப்பீடு துறை என, மத்திய, மாநில அரசு துறைகளிலும், தனியார் பெருங்குழுமங்களில் பேராசிரியர், கல்லுாரி முதல்வர் பொறுப்பு வகித்து, பணி நிறைவுக்கு பிறகும், மகிழ்ச்சியாக உள்ளோம்.
தற்போது என் வயது, 71. இந்துஸ்தான் லீவர் லிமிடெட் நிறுவனத்தில், விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி ஓய்வு பெற்றேன்.
கடந்த, 2012 முதல், இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை, கூடுகை - சந்திப்பு நிகழ்ச்சியில், வகுப்பாசிரியர்களை அழைத்துப் பேசி, அவர்களிடம் ஆசி பெற்று மகிழ்கிறோம். எங்கள் ஆசிரியரின் மகனும், அதே பள்ளியில் ஆசிரியராக சேர்ந்து, உதவி தலைமை ஆசிரியராக ஓய்வு பெற்றார்.
மறைந்த எங்கள் வகுப்பாசிரியர் சுப்பிரமணிய அய்யர் நினைவாக, 2014 முதல், 6 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும், பொருளாதாரத்தில் பின்தங்கிய ஐந்து மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறோம்.
- ஆர்.கிருஷ்ணகுமார், சென்னை. தொடர்புக்கு: 94440 14957
