
அன்புள்ள அம்மா...
என் வயது, 17; தனியார் பள்ளியில், பிளஸ் 2 படிக்கும் மாணவி. என் ஆங்கில ஆசிரியை பாடம் நடத்தும் போது காந்திஜியை, 'கரிஷ்மாட்டிக் லீடர்' என வர்ணித்தார்; கரிஷ்மா பற்றியும், அதன் அர்த்தம் குறித்தும் அவரிடம் வினவினேன். புன்னகைத்தபடி, 'நீயே தேடி தெரிந்து கொள்...' என பதில் அளித்தார்.
எங்கள் அருஞ்சொற்பொருள் அகராதியே நீங்கள் தான்... கரிஷ்மா பற்றி விரிவாக கூறுங்கள்.
இப்படிக்கு,
இ.செந்தாழினி.
அன்பு செல்லம்...
நம் நாட்டில், மாநிலங்களில் ஆயிரம் பிரபலங்கள் இருக்கின்றனர். அரசியலில், இலக்கியத்தில், ஓவியத்தில், விளையாட்டில் என, பலதுறைகளில் சாதனை படைத்தவர்கள். அதில் ஒரு சிலர் மீது தான், இனம் புரியாத ஈர்ப்பும், அபிமானமும் பலருக்கும் இருக்கும்.
அவர்களை புகழ்ந்து தனி மனித துதி பாடுவோம். பெயரை மார்பு பகுதியில் பச்சை குத்தி கொள்வோம். உலகின் அனைத்து உறவினரையும், நண்பர்களையும் விட அந்த பிரபலத்தை அதிகம் நேசிப்போம்.
அது, ஆணாக, பெண்ணாக, இளைஞராக, வயோதிகராக, படித்தவராக, படிக்காதவராக, பணக்காரராக, வறியவராக என, எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். மொழி, இனம், நிறம், மதம், நாடு, அரசியல் அனைத்துக்கும் அப்பாற்பட்ட பேரன்பு அவர் மீது இருக்கும். அப்படிப்பட்டவர் இறந்து, சில, பல நுாற்றாண்டுகள் கடந்து இருந்தாலும் நினைவை போற்றிக் கொண்டிருப்போம்.
அவரை தெய்வப் பிறவியாக, அழகிய முன் மாதிரியாக கொள்வோம். அவர் பெயரை பேரன், பேத்தியருக்கு சூட்டி கூப்பிட்டு மகிழ்வோம். அவரின் தாசன், ப்ரியன் என, பெயரை மாற்றிக் கொள்வோம். அவர் இறந்து அரை நுாற்றாண்டு ஆனாலும், பெயர் சொல்லும் கட்சி, ஓட்டுக்கள் வாங்கும். அவருக்கு சிலை, நினைவுச் சின்னம் வைக்கப்படும்; அவரது இல்லம் அருங்காட்சியகம் ஆகும்.
அரசு அவரது உருவப் படத்தை பொறித்து, தபால் தலை வெளியிடும்.
அப்படி கரிஷ்மா உள்ள பிரபலங்களில் சிலரது பெயரை கூறுகிறேன்...
தென் ஆப்ரிக்க தலைவர் நெல்சன் மண்டேலா, அமெரிக்க, 'டிவி' நிகழ்ச்சி தொகுப்பாளர் ஓபரா வின்ப்ரி, கால்பந்தாட்ட வீரர் டீகோ மரடோனா, இளவரசி டயானா பிரான்சிஸ் ஸ்பென்சர், நடிகை மர்லின் மன்றோ, அமெரிக்க அதிபராக பதவி வகித்த ஜான் கென்னடி, திரைப்பட இயக்குநர் ஆல்பர்ட் ஹிட்ச்சாக், குத்துச்சண்டை வீரர் முகமது அலி, இசைக்கலைஞர் எம்.எஸ்.சுப்புலட்சுமி, நகைச்சுவை நடிகர் என்.எஸ்.கிருஷ்ணன், பெருந்தலைவர் காமராஜர், விஞ்ஞானி ஏ.பி.ஜே.அப்துல் கலாம், விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின், சேவையால் சிறந்த அன்னை தெரசா இப்படி பலரை சொல்லிக் கொண்டே போகலாம்.
கரிஷ்மா என்றால், கவர்ச்சிகரமான, உற்சாகமான, வசியம் செய்யக் கூடிய, கண்கவர் வெற்றிகள் குவிக்கக் கூடிய அன்புருவமான, தாய்மையான, ஆயிரம் வோல்ட் கனிவுள்ள மின்சாரம் என்று பொருள் கொள்ளலாம். இதுபோன்று, 'லாஜிக்' மீறிய வாஞ்சை, பேரன்பு, அபிமானம் ஏற்படுவது தெய்வ அனுகூலம் என்று தான் கொள்ள வேண்டும். எழுத்து துறையிலும் கரிஷ்மாட்டிக் எழுத்தாளர்கள் பலர் உண்டு.
இதுபோன்று உருவாவதற்கு உழைப்போம்; தொடர்ந்து ஓடுவோம். தனித்துவம் காப்போம். மக்களுக்கும், மனசாட்சிக்கும் உண்மையாக இருப்போம்; பிரபலம் ஆவோம். எல்லாம் வல்ல பரம்பொருள் அருள் பாலிக்கட்டும்.
- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.