
அன்புள்ள அம்மா...
என் வயது, 17; மேல்நிலை இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி. வீட்டில் கோழி இறைச்சி சமைக்கும் நாட்களில், நல்லி எலும்பை, என் தம்பிக் கடித்து சுவைப்பது சற்று வித்தியாசமாக இருக்கும்.
கல்யாண நிகழ்வுகளில் நடக்கும் விருந்துகளில், வாயெல்லாம் இழுவியபடி சிலர் சாப்பிடுவதை பார்த்திருக்கிறேன்; ஐஸ்கிரீமோ, பழச்சாறோ குடிக்கும் போது உதட்டை சுற்றி, சிலர் திரவ மீசை அமைத்திருப்பதையும் கண்டிருக்கிறேன். அவற்றை காணும் போது, எனக்குள் வெறி எழும். அதை கட்டுப்படுத்த பெரும் முயற்சி செய்ய வேண்டியுள்ளது.
பொது விருந்துகளில் பங்கேற்கும் போது...
'கர்ச்... முர்ச்...'
'சவுக்... சவுக்...'
'ஸ்சூஸ்... சூ...'
இப்படி, எந்த சத்தமும் இல்லாமல், சாப்பிட்டு தொலையுங்களேன் என கத்த தோன்றுகிறது.
இதுபோன்ற செயல் வியாதியா... பொறாமையால் இதை சொல்கிறேனா... என தெரியவில்லை. தயவுசெய்து விளக்கம் தாருங்கள்.
இப்படிக்கு,
ஆர்.நித்திலா.
அன்பு மகளுக்கு...
-சிலருக்கு கீழ்க்கண்ட சத்தங்களை கேட்க பிடிக்காது; அது தொடர்ந்தால், மனதில் ஒவ்வாமை பூக்கும்.
* குடிநீர் குழாயில் இருந்து நீர் கொட்டுவது
* சூயிங்கம் மெல்வது
|* முறுக்கு, அப்பளம் போன்றவற்றை கடுக் முடுக் சத்தத்துடன் தின்பது
* பல் துலக்கும் போது, நாக்கு தொண்டையை சுத்தம் செய்வது
* பெரிதாய் மூச்சு விடுதலும், குறட்டையும்
* பலப்பம் கடித்தல்
* பென்சிலை தொடர்ந்து மேஜையில் தட்டுதல்
* மீண்டும், மீண்டும் ஒரே விதமாக ஒலிக்கும் சத்தங்கள்
* நள்ளிரவில் சில்வண்டின் ரீங்காரம்
* போராடியபடி, அசைவ உணவு சாப்பிடுவது...
இவற்றை வெறுப்பது ஒருவகை மன ஒவ்வாமை. இதை, 'மிசோபோனியா' என்பர்.
இந்தியாவில், ஆண்டுக்கு, 10 லட்சம் பேர் இவ்வகை மனநோயாளிகளாக வெளிப்படுகின்றனர்.
இந்நோய்க்கு நெருங்கிய தொடர்பு உள்ளவை, சோனோபோபியா, ைஹப்பர் அக்குசிஸ், போனோபோபியா என்ற மனநோய்கள்.
இந்த நோய் பெரும்பாலும், பெண்களை தான் அதிகம் தாக்கும். பதின்ம வயதில் தோன்றி ஆயுளுக்கும் தொடரும்; ஜனத்தொகையில், ஐவரில் ஒருவருக்கு, இந்த மனநோய் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
அசாதாரண மூளை அமைப்பு மற்றும் குடும்ப பின்னணியால் இந்நோய் வரலாம்.
இப்பிரச்னையை உளவியல் ரீதியாக பார்ப்போம்...
வயிறார சாப்பிட்டு இருந்தாலும், அடுத்தவர் சாப்பிடுவதை எரிச்சல் கலந்த பொறாமையுடன் வெறித்து பார்ப்பது ஒருவகை மனநிலை.
ஒரு ஆண் அல்லது பெண் தனிமையில் சாப்பிடுவதற்கும், பொது விருந்தில் சாப்பிடுவதற்கும், பெரிய வித்தியாசம் இருக்கிறது. தனிமையில் சாப்பிடும் போது சிங்கம் ஒன்று, இரையைக் குதறுவது போல கடித்து, உறிஞ்சி, துப்பி, மென்று, ரண களப்படுத்துவோம்; பொது விருந்தில், வாய்க்கும் வலிக்காமல், விரலுக்கும் வலிக்காமல் நளினமாய் நடிப்போம்.
என் உறவுக்காரப் பெண் ஒருவர் மிகவும் வித்தியாசமான செயல்பாடு உடையவர். அவர் வீட்டில் விருந்துக்கு சென்றால் சாப்பிட்டு முடித்ததும், எத்தனை கறித்துண்டு சாப்பிட்டோம் என, கணக்குப் போட்டு சொல்வார்.
நீ கூறும் பிரச்னையை தீர்க்க, கீழ்க்கண்ட உபாயங்களை பட்டியலிடுகிறேன்...
* விருந்தோம்பலை வளர்க்கலாம்
* பிறர் உண்பதை ரசிக்கும் மனோபாவத்தை இயல்பாக்கிக் கொள்ளலாம்
* எரிச்சல் மூட்டும் சத்தங்களில் இருந்து விலகி நிற்கலாம்
* உடற்பயிற்சி, இசை சிகிச்சையால் தெளிவு பெறலாம்
* அறிவாற்றல் நடத்தை சிகிச்சை மற்றும் உளவியல் சிகிச்சை பெறலாம்
* காதுகளில் சத்தம் தவிர்க்கும் ெஹட்போன் பொருத்திக் கொள்ளலாம்.
உனக்கு ஒரு கசப்பான ரகசியம் கூறுகிறேன். நீ சாப்பிடும் போது மறைந்திருந்து, உன் அம்மாவை வீடியோ எடுக்கச் சொல்.
அந்த காட்சியை பார். கோழி குப்பை மேட்டை சீய்ப்பது போல, உணவை கடித்து, விழுங்கி கொண்டிருப்பாய்.
மிசோபோனியா என்பது உயிர் போகும் பிரச்னை அல்ல; பொறாமை இல்லாத மனோபாவத்தை வளர்த்துக் கொண்டால் இந்த மனநோயை அடக்கி ஆளலாம்.
-- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.