
அன்புள்ள அம்மா...
என் வயது, 27; தனியார் பள்ளியில், ஆசிரியையாக பணியாற்றுகிறேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன், என் அத்தை மகனை திருமணம் செய்தேன். கணவருக்கும், எனக்கும் கிட்டப்பார்வை பிரச்னை உண்டு; அதனால், கண்ணாடி அணிந்திருக்கிறோம்.
இப்போது, ஏழு மாத கர்ப்பிணியாக உள்ளேன்; சமீபத்தில் தான் வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. எங்களுக்கு பிறக்கும் குழந்தைக்கும், கண்பார்வையில் குறைபாடு வருமோ என பயப்படுகிறேன்; இதில், விஞ்ஞானப் பூர்வமாக உள்ள உண்மையை கூறி, தெளிவு ஏற்படுத்துங்கள் அம்மா.
இப்படிக்கு,
ஆர்.கீர்த்தனா சீனிவாசன்.
அன்பு சகோதரி...
இந்திய குழந்தைகளில் ஆயிரத்தில், 1.06 பேர் வரை முழு அளவில் பார்வை திறனின்றி பிறக்கின்றனர். ஆயிரத்தில், 13.6 பேர் வரை பார்வைக் கோளாறுடன் பிறக்கின்றனர். பிறவியிலே பார்வைக் கோளாறு உள்ள குழந்தைகளுக்கு, மாறுகண் பிரச்னையும் வருகிறது.
உன் பயத்தில் நியாயம் இருக்கிறது.
உனக்கு, பிறக்கவுள்ள குழந்தைக்கு, கண்பார்வைக் கோளாறு ஏற்பட வாய்ப்புள்ளது.
நாம் பார்க்கும் பொருட்களின் பிம்பங்கள், விழித்திரை என்ற மெல்லிய திசுவில் சரியாக குவிந்தால், பொருட்களை தெளிவாக பார்க்க முடியும்.
ஒளி விலகல் பிழை என்ற பார்வை குறைபாடு உள்ள கண் விழித்திரையில், ஒளி சரியாக குவியாது. இதனால், பார்க்கும் பொருட்கள் மங்கலாக தெரியும்.
அருகில் இருக்கும் பொருள் தெளிவாகவும், துாரத்தில் இருக்கும் பொருள் மங்கலாகவும் தெரிந்தால், அதை கிட்டப்பார்வை பிரச்னை என்பர். இதை குழிலென்சு அல்லது கான்கேவ் கண்ணாடி அணிந்து நிவர்த்தி செய்யலாம்.
துாரத்தில் தெளிவாகவும், அருகில் உள்ள பொருட்கள் மங்கலாகவும் தெரிவதை துாரப்பார்வை பிரச்னை என்பர். இதையும் கண்ணாடி அணிந்து சரி செய்யலாம். சமச்சீரற்ற பார்வை என்ற குறைபாடும் ஒரு பாதிப்பாகவே உள்ளது.
ஒரு குழந்தை கருவில் இருக்கும் போது...
மூன்று வாரம் முதல், 9 வார காலத்தில் கண்கள் வளர்ச்சி அடையும். அந்த கால இடைவெளியில் குழந்தைக்கு கண் தொடர்பாக என்ன பிரச்னை ஏற்பட்டது என்பது தெரிவதில்லை.
ஒரு வகுப்பில், 40 மாணவர்கள் இருந்தால், ஐந்து பேராவது இப்போது கண்ணாடி அணிந்திருக்கின்றனர்.
உனக்கு குழந்தை பிறந்தவுடன்...
* முதல், இரண்டு ஆண்டுகள் வரை கண் மருத்துவரிடம் தகுந்த மருத்துவம் செய்யலாம்
* சற்று வளர்ந்த பின், உணவாக, கேரட், பச்சைக் காய்கறி, ஆட்டிறைச்சி, கீரை, மீன், ஆரஞ்சு பழம், மீன் எண்ணெய் கொடுக்கலாம்
* சூரிய ஒளியில் விளையாட வைத்து வைட்டமின் - ஏ, டி சத்துக்கள் கிடைக்கச் செய்யலாம்
* கணினி, அலைபேசி, 'டிவி' போன்ற தொடர்பு கருவிகளை கண்ணில் காட்டாமல் வளர்க்கலாம்
* கண்களை சிமிட்டும் பயிற்சி கொடுக்கலாம்
* கண் மருத்துவர் ஆலோசனைப்படி, குழந்தைக்கு கண்ணாடி மாட்டலாம்.
இப்போது, குழந்தைகள் அணியும் கண்ணாடிகள் பல வண்ணங்களில் கிடைக்கின்றன. குழந்தைக்கு பக்குவமும், வயதும் வந்த பின், 'கான்டாக்ட் லென்சு' அணிந்து கொள்ள செய்யலாம்.
எந்த பிரச்னையாக இருந்தாலும் நல்லதே நடக்கும் என நம்பு; இயற்கை, அதி அற்புத ஆற்றல் நிறைந்தது. அது தீமையை விலக்கி, நல்லதையே செய்யும். இதை நம்பி உறுதியுடன் வாழ்க்கை பயணத்தை தொடர வாழ்த்துகிறேன்.
-- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.