
அன்பு அம்மா...
என் வயது, 25; தெற்கு ரயில்வேயில் பணி செய்யும் பெண். திருமணமாகி இரண்டரை வயதில், ஆண் குழந்தை இருக்கிறது. மகனுக்கு, இன்னும் பேச்சு வரவில்லை. இது பெரும் கவலை தருகிறது.
சமீபத்தில் தான், நாங்கள் கட்டிய புது வீட்டில் குடியேறினோம். அங்கு அதிகாலை, 5:30 மணிக்கே எழுந்து விடுகிறான் மகன். விலை உயர்ந்த பெயின்ட் அடிக்கப்பட்ட சுவர் முழுக்க, பென்சில், கிராயான்ஸ், மார்க்கர் பேனாக்கள், கலர் பென்சில் மற்றும் கரித்துண்டால் கிறுக்குகிறான்.
எவ்வளவு தடுத்தும் கேட்க மாட்டேன் என்கிறான். நள்ளிரவு வரை இதையே திரும்ப திரும்ப செய்கிறான்; அந்த செயல் கடும் கோபத்தை தருகிறது; கட்டுப்படுத்த முடியவில்லை. என் மகனை வழிக்கு கொண்டு வர என்ன செய்யலாம். நல்ல ஆலோசனை தாருங்கள்.
இப்படிக்கு,
என்.விண்ணரசி.
அன்பு மகளுக்கு...
ஆதிமனிதர் வரைந்துள்ள குகைச் சித்திரங்கள், மொழி தோன்றுவதற்கு முந்தியவை. உன் மகனுக்கும், அந்த ஆதியுணர்வு துாண்டப்பட்டு இருக்கிறது.
சுவரில் கிறுக்குவதால், ஒரு சுதந்திர உணர்ச்சி, மகிழ்ச்சி, தன்னம்பிக்கை பீரிடுகிறது. உன் மகன் மூளையில் சிந்தனாசக்தியின் துவக்கமாக இதை எடுத்துக் கொள்; அவனுக்குள் ஒருமையுணர்வு பொங்கி வழிகிறது. அவன் ஆளுமைத்திறன் பெற்று பிரகாசிக்கிறான்.
வாய் விட்டு பேச முடியாத குழந்தைகள், கிறுக்கல் வழியாக தகவல் தொடர்பு கொள்ள முயற்சிக்கின்றன.
மொழி இல்லாத தகவல் தொடர்பில் மனித உணர்வுகள், பயம், நம்பிக்கை காட்டாறாய் ஓடும். சுவரில் கிறுக்கல்களை வைத்தே சிறுவர், சிறுமியரின் உணர்வு நிலையை கணித்து விடலாம். யாருடைய உதவியும், வழிகாட்டலும் இல்லாத சுதந்திர வெளிப்பாடே கிறுக்கல்கள்.
சிறுவர், சிறுமியரின் கிறுக்கல்களில் கலவையான மன உணர்வுகள் வெளிப்படும்.
அவை...
* மனக்கிளர்ச்சி -- நீளமான கழுத்தில்லாத உருவம் கிறுக்கலாய் இருக்கும்
* பதற்றமும், சங்கடமும் -- கண் இல்லாத உருவம், மேகம், மழை, பறவை கிறுக்கல்கள்
* வெட்கம் -- மூக்கும், வாயும் இல்லாத குள்ள உருவங்கள் கிறுக்கலாய்
* கோபம் - பெரிய பெரிய கைகளுடன் உருவங்கள்
* பாதுகாப்பின்மை -- குட்டி தலை கையில்லாத உருவம்
* கையறுநிலை -- சிறு சிறு கைகள் உடைய உருவம்.
அடுத்து, நீ என்ன செய்ய வேண்டும் தெரியுமா...
உன் மகன் கிறுக்க, புது புது வண்ண கிராயான்கள் வாங்கிக் கொடு. மகனின் கிறுக்கல்களை சலனப்படம், ஒளிப்படம் எடுத்து முகநுாலில் போடு.
தினமும் காலையில், இரண்டு மணி நேரம் மட்டும் உன் மகனை ப்ளே ஸ்கூலில் விடு. அவனுடைய கிறுக்கலை பாராட்டு. கலை சிகிச்சையாளர் மற்றும் குழந்தைகள் மனநல நிபுணரிடம், உன் மகனை காட்டி, கிறுக்கல்களை கலை வடிவாக்கு.
உன் மகனின் கிறுக்கல்கள் பல கோடி ரூபாய் மதிப்பு பெறும். சில ஆயிரம் ரூபாய் செலவு செய்து, பெயின்ட் செய்த சுவரை பற்றி கவலைப்படாதே...
மகனின் கிறுக்கல்கள் உனக்கு முக்கியமில்லை என்றால், பற்பசை, வினிகர் அல்லது வாஷிங்சோடா வைத்து கிறுக்கல்களை அழித்து விடலாம்.
கிறுக்கலிஸ்ட்டுக்கு அன்பு முத்தங்கள்.
- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.