
அன்புள்ள ஆன்டி...
பிரபல தனியார் பள்ளியில், 10ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியர் நாங்கள். குழுவாக செயல்பட்டு, படிப்பில் ஆர்வம் காட்டி வருகிறோம். இதில், ஆறு மாணவர்களும், நான்கு மாணவியரும் உண்டு. மிகவும் நட்புடன் பழகி, கற்பதை பகிர்ந்து கொள்கிறோம்.
கூட்டாக சேர்ந்து கற்பதால், பல விஷயங்களையும் அறிய முடிகிறது. பொதுஅறிவை பெருக்க உகந்த தகவல்கள் கிடைக்கின்றன. எங்களை, 'போட்டோகிராபிக் மெமரி இல்லாதோர்' என திட்டுகிறார் விஞ்ஞான ஆசிரியை. அவர் பயன்படுத்தும் அந்த வார்த்தைக்கு அர்த்தம் தெரியவில்லை.
போட்டோகிராபிக் மெமரி என்றால் என்ன... அதை, அடைய நாங்கள் என்ன செய்ய வேண்டும்; தெளிவாக விளக்கம் தாருங்கள்.
இப்படிக்கு,
ஆர்.கணேஷ்குமாரன், எஸ்.மகிழினி குழுவினர்.
அன்பு செல்லங்களுக்கு...
நடந்த ஒரு காட்சியை எவ்வித விவரணையும் விட்டுப் போகாமல், துல்லியமாய் நினைவு கூறும் திறனை, 'ஒளிப்பட நினைவு திறன்' என கூறுவர். அதை தான் ஆங்கிலத்தில், 'போட்டோகிராபிக் மெமரி' என்று குறிப்பிட்டுள்ளீர்.
உலகில், இரண்டில் இருந்து, 10 சதவீத குழந்தைகளுக்கு, ஒளிப்பட நினைவு திறன் இருப்பதாய் கூறுகின்றனர். இவர்களின் நுண்ணறிவு எண் உயர்ந்திருக்கும்.
ஆறு வயது நிரம்பியவுடன், இக்குழந்தைகளின் ஒளிப்பட நினைவு திறன் அகன்று விடும்.
ஒளிப்பட நினைவு திறன் என்ற ஒன்று இருப்பதாக விஞ்ஞானம், இதுவரை உறுதிப்படுத்தவில்லை.
பிரமாதமான நினைவு திறனுக்கு மரபியல் தொடர்ச்சி, மூளை வளர்ச்சி, அனுபவம் மற்றும் பயிற்சி காரணமாய் இருக்கலாம்.
ஒருவரின் பெயரை விட முகத்தை மறக்காமல் நினைவில் வைத்துக் கொள்வது எளிது.
அதீத நினைவு திறனுக்காக இருமுறை கின்னஸ் சாதனை புரிந்தவர் டேவ் பாரோ.
ஒரு விஷயத்தில், புதுமையும், விந்தையும் இருந்தால், அது நினைவில், எளிதில் பதியும் என அவர் கூறுகிறார்.
இந்த திறனை அதிகரிக்கும் வழிமுறைகள் பல உள்ளன.
அது பற்றி பார்ப்போம்...
* சிறு ஓய்வுடன் நினைவு கொள்ள வேண்டிய விஷயத்தை நுண்ணிப்பாய் கவனிக்கவும்
* புதுப்புது நபர்களுடன் சுவாரசியமாக உரையாடவும்
* அயராமல் உடற்பயிற்சி செய்யவும்
* சவால்களை விரும்பி சந்திக்கவும்
* புதிய விஷயங்கள் மற்றும் சாகசங்களை நேர் கொள்ளவும்
* சுற்றி நடப்பதை ஆழ்ந்து கவனிக்கவும்
* ஆழமாய் மூச்சு விடலாம்
* அடிக்கடி ஒற்றைக்காலில் நின்று பழகலாம்
* வழக்கமான கையை தவிர்த்து, எதிர் கையால் பல் துலக்கலாம்
* ஆழ்ந்த துாக்கம் கொள்ளலாம்
* பொழுதுபோக்க எதிராளி முகங்களையும், பெயர்களையும் வைத்து விளையாடலாம்
* நினைவு கூர வேண்டியதை பாடலாக்கி பயிற்சி செய்யலாம்
* மனவரைபடம் வரையலாம்
* போஸ்டர்கள் டிசைன் செய்யலாம்
* நினைவு கூற வேண்டிய, 10 விஷயங்களை வண்ணங்களில் குறிக்கலாம்.
மனித மூளை, 2.5 ஜிகா பைட்ஸ் அளவு நினைவுகளை சேமிக்கும் திறன் உடையது.
குறுகிய கால நினைவு திறன் சில நொடிகள்; பணி செய்யும் நினைவு திறன், 20 நிமிடங்கள்.
நீண்ட நாள் நினைவு திறன், 47 ஆண்டுகள்.
தினமும், ஐந்து மணி நேரம் உரிய பயிற்சி, இடைவெளி, உணவு, துாக்கத்துடன் கல்வி கற்று, அதை நீண்ட கால நினைவு திறனாக மாற்றுங்கள் செல்லுாஸ். வெற்றி நமதே!
- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.