
அன்புள்ள அம்மா...
என் வயது 16; தனியார் பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் மாணவன். குளிப்பது பற்றி என் மனதில் அடிக்கடி கேள்வி எழுகிறது. இதை உங்களிடம் தெரிவிக்கிறேன்.
கடலில் குளியல், கிணற்று குளியல், குளியல் தொட்டி குளியல், துாம்பு தாரை குளியல், நீர்வீழ்ச்சி குளியல், ஆற்றுக்குளியல்...
இவற்றில் எந்த குளியல் பாதுகாப்பானது. எந்த வகை ஆரோக்கியமானது.
எந்த குளியலில் சுகம் மிக அதிகம் என்பது குறித்து சொல்லுங்கள்.
இப்படிக்கு
ஆர்.நல்லாயன்.
அன்பு மகனே...
குளியல் பற்றிய சுவாரசியங்களை கேட்டிருக்கிறாய்.
கடல் குளியல் என்றால் நீ கடல் இருக்கும் ஊரில் வசிக்க வேண்டும். அல்லது கடல் உள்ள ஊருக்கு சுற்றுலா செல்ல வேண்டும்.
கடலில் குளிப்பவருக்கு தோல் நோயோ, திறந்த காயங்களோ, உப்பு ஒவ்வாமையோ இருக்க கூடாது. குளிக்கும் போது கடல் நீரை குடித்து விட கூடாது. நீரலைகளில் சிக்கி கொள்ள கூடாது. இடுப்பளவு நீரை தாண்ட கூடாது. கடல் குளியலுக்கு பின், நன்னீர் குளியல் கட்டாயம் தேவை.
கிணற்றில் குளிக்க, நீச்சல் தெரிந்திருப்பது கட்டாயம். கிணற்று நீரில் கால்ஷியம், மெக்னீஷியம், சோடியம் பைகார்பனேட், கார்பன் டை ஆக்சைடு, ஆக்சிஜன், நைட்ரஜன், ஆர்செனிக், காரீயம், இரும்பு, போரான், ரேடான் மற்றும் பூச்சிகொல்லி சாரங்கள் கலந்திருக்கும்.
கிணற்று நீரை ஆண்டுக்கு ஒருமுறை சோதிக்க வேண்டும்.
கிணற்று நீரை குடிப்பது ஆபத்தானது.
நீச்சல் தெரியாதோர் பம்புசெட் தொட்டியில் குளிக்கலாம்.
கிணற்று நீர் குளியலுக்கு பின், அசைவ சமையல் செய்து, நண்பர்களுடன் சாப்பிடுவது தேவாமிர்தம்.
குளியல் தொட்டிகளில் நீர் நிரப்பியும் குளிக்கலாம்.
இது போர்சலின், இரும்பு மற்றும் பைபர் கிளாஸ், பாலியெஸ்டர் இழைகளால் தயாரிக்கப்படுகிறது.
குளியல் தொட்டி நீரில் திரவசோப், வாசனை திரவியங்கள், ரோஜா இதழ்கள் துாவி குளிக்கலாம்.
இது தவிர இன்னும் சில குளியல் முறைகள் உள்ளன.
அவை குறித்து பார்ப்போம்...
துாம்புதாரை குளியல்: இதை ஷவர் குளியல் என்பர். ஷவர் குளியலால் மன அழுத்தம் குறையும். நல்ல துாக்கம் வரும். ரத்த ஓட்டம் சீர்படும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகபடும். தோல் ஆரோக்கியம் கூடும்.
நீர்வீழ்ச்சி குளியல்: தமிழகத்தில் குற்றாலம், கேரளாவில் அதிரபள்ளி, கோவாவில் துாத்சாகர் மற்றும் மேகாலயா, கர்நாடகா மாநிலங்களில் புகழ்பெற்ற நீர்வீழ்ச்சிகள் உள்ளன.
நீர்வீழ்ச்சி நீரில் மூலிகை கலந்திருப்பதாக கூறுவர். இவற்றில் பாதுகாப்பாய் குளிக்க வேண்டும்.
குரட்டை ஊரணி: காரைக்குடி, கானாடுகாத்தன் போன்ற பகுதிகளில் இது போன்ற குளியல் முறை உண்டு.
கை பம்ப் குளியல்: குதித்து குதித்து தண்ணீர் அடித்து குளிக்க வேண்டும்
ஆற்றுக்குளியல்: நீச்சல் தெரிந்திருந்தால் நலம். ஆறுகளில் குதித்து நீந்தி குளிப்பது தனி சுகம்.
மழைக்குளியல்: கற்பனையில் இனிக்கும்; யதார்த்தத்தில் ஜலதோஷம் பிடிக்கும்.
நீச்சல் குள குளியல்: நீரில் குளிப்பவர் சிறுநீர் கலந்திருக்கும். குளிக்கும் விஷயத்தில் பெனடிசம் எதற்கு...
பாதுகாக்கப்பட்ட நீரில் வாரம் இரண்டு அல்லது மூன்று முறை குளித்தால் போதுமானது. நீரை ஊதாரி போல செலவு செய்ய கூடாது.
- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.