
அன்பு மிக்க அம்மா...
என் வயது, 17; தனியார் பள்ளியில், பிளஸ் 2 படிக்கும் மாணவி. வீட்டிலும் சரி, பள்ளியிலும் சரி எதாவது அற்ப, சொற்ப காரணங்களுக்காக மனப்பதற்றம் அடைகிறேன். சோகத்தில் ஆழ்கிறேன். என்னை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வழி வகை சொல்லுங்கள்.
இப்படிக்கு,
ஆர்.எம்.ஆர்.பாலசரஸ்வதி.
அன்பு மகளுக்கு...
மகிழ்ச்சியை, உவகை, ஆனந்தம், சந்தோஷம், குதுாகலம், களி என்ற சொற்களாலும் கூறலாம்.
மகிழ்ச்சிக்கு எதிர்மறையாக, சோகம், அதிருப்தி, துக்கம், வருத்தம், இருள், ஏமாற்றம், மனச்சோர்வு போன்ற சொற்களை கூறுவர்.
மகிழ்ச்சி என்பது, வாழ்வின் முதன்மை குறிக்கோள்களில் ஒன்று. வாழ்வில் இன்பத்திற்கு புறக்காரணிகள் முக்கிய கூறுகளாக இருந்தாலும், மகிழ்ச்சி என்பது முதன்மையாக அகத்தின் உறுதிப்பொருளாகவே உள்ளது.
இன்பம் என்பது உன்னத மகிழ்ச்சியும், மனநிறைவும் உடைய ஒரு உணர்ச்சி.
மகிழ்ச்சி என்பது, நீண்ட நாட்கள் நல்வாழ்க்கைக்கான உணர்வு.
உலகில் மகிழ்ச்சி நிறைந்தோர் அதிகம் வாழும் நாடுகளில் முதன்மையிடம் பெறுவது வடக்கு ஐரோப்பிய நாடான பின்லாந்து. அடுத்து, அதே கண்ட பகுதி நாடான டென்மார்க் உள்ளது. மூன்றாம் இடத்தில் வட அட்லாண்டிக் கடல் பகுதி நாடான ஐஸ்லாந்து உள்ளது.
சர்வதேச அளவில் மகிழ்ச்சி நாள் மார்ச் 20ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.
மகிழ்ச்சியாக இருப்போருக்கு, டோபமைன், செரோடோனின், எண்டார்பின், ஆக்சிடோசின் போன்ற ஹார்மோன்கள் சுரக்கின்றன.
மகிழ்ச்சியாக வாழ்பவருக்கு, ஆரோக்கியமான இதயத்துடிப்பு இருக்கும்.
நீ சதா சோகத்தில் மூழ்குவதற்கான காரணங்கள் இதோ...
* பேராசையுடன் கூடிய எதிர்பார்பு
* அடைய முடியாத இலக்கை நோக்கி ஓடுவது
* பிறர் மீது போட்டி பொறாமை கொள்வது
* பொருட்கள், பணத்தின் மீதும் அசுர வேட்கை
* திருப்தி இல்லாத மைதாஸ் பாணி தேடுதல்.
மகிழ்ச்சியாக இருக்க சில உபாயங்கள் கூறுகிறேன். கேள்...
யதார்த்தத்தையும், எதிர்பார்ப்பையும் ஒரு புள்ளியில் இணைய வைக்கவும்.
வாழ்க்கையின் அர்த்தத்தை சரியாக உணர்ந்து கொள்ளவும்.
நிகழ்காலத்தில் வாழ். மிதமான உணவு உண்ணவும்; உடற்பயிற்சி, தியானம் செய்யவும்.
அன்புக்குரியவர்களுடன் நேரத்தை செலவிடவும். புதிய இடங்களுக்கு செல்லவும். வளர்ப்பு பிராணிகளுடன் விளையாடவும். நேர்மறை உணர்வுகளை தக்க வைத்து, எதிர்மறை உணர்வுகளை துாக்கி எறியவும்.
கிடைத்ததில் திருப்தி படவும்; மலர்களின் நறுமணத்தை நுகர்ந்து அனுபவிக்கவும்.
உறவுகளையும், நட்புகளையும் சீரான விகிதத்தில் பேணவும்; வண்ணமயமான ஆடைகளை அணியவும்.
பள்ளி சென்று வந்த பின் குளிக்கவும்; சத்துள்ள உணவுகளை சாப்பிடவும்; புன்னகை முகத்துடன் கனிவாய் இருக்கவும்.
முதியோர் இல்லம், ஆதரவற்றோர் இல்லங்களுக்கு அடிக்கடி சென்று முடிந்த உதவிகளை செய்யவும்.
எதிலும் அவநம்பிக்கை கொள்ளாதே; மனமே ராஜா; உயிரணுக்கள் குடிமக்கள். ஆகவே, மனதை மகிழ்ச்சியாக வைத்தால் உடலும் மகிழ்ச்சி பெறும்; பிறரை குற்றம் சாட்டாமல் உன்னை உள்ளும் புறமும் மேம்படுத்தவும்.
அற்ப விஷயங்களிலிருந்து விட்டு விடுதலையாகவும். நல்லதை பார்த்து, நல்லதை கேட்டு, நல்லதை பேசவும்.
மகிழ்ச்சி ஒரு தொற்றுநோய். அது உன்னை சுற்றியுள்ளவரையும் தொற்றட்டும்.
ஒவ்வொரு நாளும் அதிகாலையில்...
* இன்று நான் சந்திக்கும் அனைவரிடமும் என் உற்சாகத்தை வெளிப்படுத்துவேன்
* என்னை கடக்கும் அனைவருக்கும் அகசூரிய ஒளியாய் இருப்பேன்
* எல்லா இடங்களிலும் நல்லவற்றை பார்ப்பேன்
* நான் மகிழ்ச்சியாக இருக்க முடிவு செய்துள்ளேன்.
இது போல் உறுதி ஏற்றுக் கொள்ளவும். அதுவே அகத்தில் மலர்ச்சியை தரும்.
- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.