
அன்புள்ள அம்மா...
என் வயது, 38; இல்லத்தரசியாக இருக்கிறேன். மகளுக்கு, 14 வயதாகிறது. பிரபல தனியார் பள்ளியில், 9ம் வகுப்பு படிக்கிறாள். கற்பதில் மகாகெட்டிக்காரி. கிழக்காசிய நாடான ஜப்பானில் தயாராகும் கார்ட்டூன் படங்கள் தான் பார்ப்பாள். காலை, மதிய நேர சாப்பாட்டை மிக கொஞ்சமாகவும், இரவில், 'கடோர்கஜன்' மாதிரி அதிகமாகவும் சாப்பிடுவாள்.
அன்றாடம் குளிக்க மாட்டாள். குளிக்கும்படி கெஞ்சினால், 'குளியல் எவ்வளவு கெட்டதுன்னு உனக்கு தெரியாதும்மா... லீவ் மீ அலோன்...' என கத்தி விடுவாள். உண்மையில், உடலுக்கு குளிப்பது நல்லதா, கெட்டதா... ஒன்றும் புரியவில்லை.
குளியல் பற்றி என் மகளுக்கு தகுந்த அறிவுரை கூறுங்கள்.
இப்படிக்கு,
விஜி ராமநாதன், கோவை.
அன்புள்ள சகோதரிக்கு...
மனித உடலில் பலகோடி பாக்டீரியா என்ற நுண் உயிரினங்கள் உள்ளன. மனிதனின் உடல் செல்லுக்கு சமமாக பாக்டீரியா 1:1 என்ற விகிதத்தில் பின்னி பிணைந்துள்ளது.
மனித உடலில் பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை காளான், ஆர்க்கியா ஒற்றை செல் உயிரி மற்றும் யூகாரியோட் எனப்படும் மெய்க்கருவுயிரி வசிக்கின்றன. மனித உடலை நுண்ணுயிர்களின் சூழலகம் எனலாம்.
குளிப்பது பற்றி உன் மகள் சொன்னதில் பாதி உண்மை உள்ளது.
தினமும் குளிப்பதால் பல தீமைகள் ஏற்படுகின்றன.
அவை...
* மேற்தோல் உலர்ந்து போதல்
* தோல் எரிச்சல் மற்றும் அரிப்பு
* எக்ஸிமா இருந்தால் அதிகரிக்கும்
* தோல் நோய் தொற்று ஏற்படும்.
உடலில் நன்மை தரும் இயற்கை எண்ணெய், பாக்டீரியாக்களை தினக்குளியல் அகற்றுகிறது. சூடான நீர் குளியல் மேற்தோலின் உணர்ச்சியை பெருக்கும்.
குளியலால் கிடைக்கும் நன்மைகளை பார்ப்போம்...
* உடலின் மேற்தோலை ஆரோக்கியமாக வைக்கிறது
* அழுக்கையும் தீங்கு தரும் பாக்டீரியாக்களையும் போக்குகிறது
* உடல் துர்நாற்றத்தை விரட்டுகிறது
* ரத்த ஓட்டத்தை சமன்படுத்துகிறது
* வெம்புண் தசைகளை குணபடுத்துகிறது
* புத்துணர்ச்சி பெருகி மனம் குதுாகலிக்க வைக்கிறது.
மனித உடலில் மிக துர்நாற்றமான பகுதி அக்குள்தான். பின் காதுமடல், தொடை இடுக்கு, பின்னங்கால் மடிப்பு போன்ற பகுதிகள் தினக்குளியலால் சுத்தமடைகின்றன. குளிப்பதற்கு வெதுவெதுப்பான நீர் நல்லது. குளியல் சோப் பயன்படுத்தலாம். குளியலை 3-4 நிமிடங்கள் நிகழ்த்தினால் போதும். தலைக்கு, வாரத்தில் ஒரு முறை குளித்தால் போதும்.
இரவில் குளிப்பது நல்லதா என கேட்டால் இல்லை என கூறுவேன். மாலையில் குளியல் நல்லது. குளியலை கழுத்து மற்றும் தோள்பட்டையில் ஆரம்பிப்பது உத்தமம். குளிப்பது மனம் சார்ந்த விஷயமும் கூட. குளித்துவிட்டு புத்துணர்ச்சியாய் வெளியிடங்களுக்கு செல்வதற்கும், அழுக்கு மூட்டையாய் செல்வதற்கும் மாபெரும் வித்தியாசம் உள்ளது.
குளிக்காமல் செல்லும்போது தாழ்வு மற்றும் தோல்வி மனப்பான்மை சூழ்ந்து கொள்ளும். எல்லாரும் உடல் துர்நாற்றத்தை முகர்ந்து பார்ப்பது போல ஒரு மனப்பிரமை தோன்றும். உன் மகளை ஒரு தோல்நோய் சிறப்பு மருத்துவரிடம் அழைத்து சென்று தகுந்த ஆலோசனை வழங்கவும்.
-- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.