
அன்புள்ள அம்மா...
என் வயது, 32; தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பெண். எனக்கு, ஆறு வயதில் மகனும், நான்கு வயதில் மகளும் இருக்கின்றனர். என் மகன் ஆங்கில பயிற்று மொழி பள்ளியில், 1ம் வகுப்பு படிக்கிறான்.
ஒருநாள் பள்ளி முடிந்து வீடு திரும்பியதும், 'அம்மா உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லி ஆகணும். என் கூட படிக்கும் பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்...' என்றான். இதைக் கேட்டதும் செய்வதறியாது விக்கித்துப் போனேன். மகனின் மனநிலையை புரிந்து கொள்ள இயலவில்லை. இந்த விஷயத்தை எப்படி கையாள வேண்டும் என்று தெரியாமல் தவிக்கிறேன். நல்ல வழி காட்டுங்கள்.
இப்படிக்கு,
வி.பாக்கியலட்சுமி நரசிம்மன்.
அன்பு சகோதரிக்கு...
சட்டத்தின் துணையுடன் ஆணும், பெண்ணும் வாழ்க்கை ஒப்பந்தம் சார்ந்த உறவு முறைக்குள் புகுவதே திருமணம். கலாசாரம், மதம், பூகோள அமைப்பு சார்ந்து திருமண நிகழ்வு முறைகள் பலவிதமாக இருப்பதை காணலாம்.
உண்மையில் உன் மகனுக்கு திருமணத்தின் தாத்பர்யம் இப்போது புரியாது. பதிலாக அவன் அன்பு, போற்றுதல் மற்றும் பற்றுதல் உணர்வுகளை திருமணம் என்ற வார்த்தை பிரதிபலிப்பதாக நம்புகிறான். கற்பனை மற்றும் விளையாட்டு நிலையில் நின்று திருமணம் என்ற வார்த்தையை பயன்படுத்துகிறான்.
நீ ஒன்று செய்... உன் மகனுக்கு தெரியாமல் அவன் படிக்கும் பள்ளிக்கு போ... வகுப்பறையில் அவன் திருமணம் செய்து கொள்வதாக சொன்ன சிறுமியின் அருகே அமர்ந்திருக்கிறானா... அவர்கள் என்ன பேசுகின்றனர்... சிறுமியின் புறதோற்றம் எப்படி இருக்கிறது... வகுப்பில் எத்தனை சிறுவர், சிறுமியர் படிக்கின்றனர்... மற்ற சிறுமியருடன் உன் மகன் எப்படி பழகுகிறான்... மதிய உணவை எந்த சிறுமியுடன் பகிர்ந்து கொள்கிறான் போன்றவற்றை அறிய முயற்சி செய்.
அவன் குறிப்பிடும் சிறுமி வீட்டுக்கு, பரிசு பொருளுடன் சென்று நட்பு பாராட்டு. அதேபோல அந்த குடும்பத்தினரையும் வீட்டுக்கு அழைத்து உபசரிக்கவும்.
உன் மகனுக்கு பிடித்தமான சிற்றுண்டியை பரிமாறிக் கொண்டே, 'செல்லக்குட்டி... ஒரு ஆணோ, பெண்ணோ படித்து வேலைக்கு போன பின் தான் திருமணம் செய்து கொள்வர். திருமணம் என்பது வாழ்க்கையில் ஒருமுறை தான் நடக்கும். மனதிற்கு பிடித்தவர்களை எல்லாம் திருமணம் செய்து கொள்ள முடியாது...
'அம்மாவும் அப்பாவும் திருமணம் செய்து தான் உன்னை பெற்றோம். திருமணம் என்பது பெரியவர்களுக்கான வார்த்தை. சிறுவர், சிறுமியருக்கு செல்லாது. வருடா வருடம் உன் நட்பு வட்டம் விரிவடையும். புதுபுது சிறுவர், சிறுமியர் உன் நட்புவட்டத்தில் இணைவர். மிகவும் பிடித்த கூட்டாளியை சிறந்த தோழி, தோழனாக வரித்துக்கொள்...' என்று எடுத்துரைக்கவும்.
திருமணம் என்பது சமூகப் பொறுப்புகள் அதிகம் வாய்ந்த ஒரு ஒப்பந்தம். அந்த சொல்லை சிறுவனுக்கு அறிமுகப்படுத்தியது யார் என்பது தெரியவில்லை. அதை புரிந்து தெளிந்து கொள்ள கற்றுக்கொடுக்கவும். நீ சொல்வதில், 20 சதவீதம் உன் மகன் புரிந்து கொண்டாலே போதும்... தெளிவு பெறுவான்.
- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.