
அன்புள்ள அம்மா...
என் வயது, 32; தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் பெண். என் மகனுக்கு, 3 வயதாகிறது. காலையிலும், மாலையிலும் தலா ஒரு கப் காப்பி குடிப்பான். சில நேரம் காப்பிக்கு மாற்றாக தேநீர் குடிப்பான்.
என் மாமியார், 'பொடியனுக்கு காபி, டீ கொடுத்து பழக்காதே.... உடல் ஆரோக்கியம் கெட்டுவிடும்...' என தலையில் அடித்துக் கொள்வார். இது, சிலநேரம் பெரும் சண்டையாக மாறிவிடுகிறது. மாமியாரை சமாதானப்படுத்த பெரும் முயற்சி எடுப்பேன்.
விஞ்ஞானிகளும், எழுத்தாளர்களும் அதிகம் காபி, டீ குடிப்பதாக புத்தகங்களில் படித்திருக்கிறேன். அதன் அடிப்படையில், 'என் மகனும் அதிகம் காபி, டீ குடித்து பெரிய விஞ்ஞானி ஆவான்...' என சமாதானம் கூறுவேன். அது பிடிக்காமல் சற்று ஏளனமாக நகைத்து இழிவு படுத்துவார் மாமியார்.
என் மகனுக்கு காபி, டீ கொடுப்பது பெரும் குற்றமா... தெளிவாக பதில் சொல்லுங்கள்.
இப்படிக்கு,
கதீஜா ஷேக்.
அன்பு சகோதரிக்கு,
உலக அளவில், 2 வயது குழந்தைகளில், 14 சதவீதம் பேருக்கு, காபி அருந்த கொடுப்பதாக ஒரு புள்ளி விபரம் உள்ளது. உலகில் 1 வயது குழந்தைகளில் 2.5 சதவீதம் பேர், தாய் உதவியால் காபி குடிக்கின்றனர்.
அமெரிக்க குழந்தைகள் நல அகாடமி, குழந்தைகள், 12 வயது வரை காபியோ, டீயோ அருந்தக்கூடாது என எச்சரிக்கிறது.
வயதுக்கு வந்த ஆணும், பெண்ணும் ஒரு நாளில், 400 மில்லி அளவு காபி எடுத்துக் கொள்ளலாம். கர்ப்பிணியரும், தாய்ப்பால் கொடுப்போரும் காபியை தவிர்ப்பது நல்லது.
குழந்தைகளின் சிறுநீரகமும், ஈரலும் காபியை செரிக்க பல மணி நேரம் எடுத்துக் கொள்வதாக, மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சிறுவர், சிறுமியரில், 12 வயது முதல், 18 வயதுக்கு உட்பட்டோர் அன்றாடம், 100 மில்லி காபி எடுத்துக் கொள்ளலாம். அது பாதிப்பை ஏற்படுத்தாது.
சரி... காபியில் அப்படி என்ன தான் இருக்கிறது என்று பார்ப்போம்...
காபியில், காபின், டேனின், கார்போஹைட்ரேட்ஸ், புரதம், குளோரோஜெனிக், மாலிக், அசிடிக் அமிலங்கள், ரிப்போப்ளாவின், நியாசின், மெக்னீஷியம், பொட்டாஷியம், உயிர் வளியேற்ற எதிர்ப்பொருள் ஆகியவை உள்ளன.
தேநீரில் என்ன இருக்கிறது என்று பார்ப்போம்...
இதிலும் காபின், அமினோ அமிலம், கார்போஹைட்ரேட்ஸ், தாதுஉப்புகள், குளோரோபில், புரதம், ரியோபைலின், தியோபுரோமின் ஆகியவை உள்ளன.
குழந்தைகள் காபி, டீ குடிப்பதால் அமைதி இன்மை, துாக்கமின்மை, நீர்சத்து குறைபாடு, ரத்தசோகை, செரிமானக் கோளாறு, ஒவ்வாமை, எதுக்களிப்பு, இருதய படபடப்பு, மனநல பாதிப்பு போன்றவை ஏற்படக்கூடும்.
இனி நீ என்ன செய்ய வேண்டும் என்பதை புரிந்து கொள்.
காபி, தேநீர் என இரண்டுமே உளச்செயல்பாடு ஊக்கிகளாக உள்ளன. விளையாட்டு போக்காக, உன் குழந்தைக்கு நீயே நஞ்சை புகட்டாதே. காபி, தேநீருக்கு பதில் பால், மூலிகை தேநீர், எலுமிச்சை கலந்த வெதுவெதுப்பான நீர், இனிப்பு கலவாத பழச்சாறு இதில் எதாவது ஒன்றை காபி மக்கில் கொடு. குடிக்கட்டும்.
சிலவகை சோடா மற்றும் எனர்ஜி பானங்களில் காபின் கலந்திருக்கும். பாட்டிலின் உள்ளடக்கத்தை வாசித்து காபின் குறிப்பிடப்பட்டிருந்தால் அப்பானத்தை தவிர்க்கவும். காபி, தேநீர் அருந்துவோர் அனைவரும் விஞ்ஞானி, எழுத்தாளராவர் என எண்ணினால், நாட்டில் கோடிக்கணக்கில் இருக்க வேண்டுமே... நிலைமை அப்படியா இருக்கிறது. காபி, தேநீருக்கும் மேதைமை தனத்துக்கும் துளியும் சம்பந்தம் இல்லை. உன் மாமியார் சொல் கேட்டு அதன்படி செயல்படு.
- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.