
அன்புள்ள பிளாரன்ஸ் அம்மா,
நான் இந்த ஆண்டு தான் கல்லுாரியில் சேர்ந்திருக்கிறேன். அப்பா மதுக்கடையே கதி என்று டாஸ்மாக்கில் கிடப்பவர். காலையில் கண் விழிப்பதே பாட்டிலில் தான். குடித்து படுப்பார்; தெளிந்து எழுந்தால் மீண்டும் குடிப்பார். எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து அப்பா இதையே தான் செய்கிறார்.
என் அம்மா பிள்ளையார் கோவில் வாசலில் பூ விற்பவர். எனக்கு ஒரு தம்பி; 10ம் வகுப்பு படிக்கிறான்.
பாவம், என் அம்மா. காலை எழுந்ததும் தண்ணீர் பிடித்து டிரம்மில் சேகரித்து, சாப்பாடு கட்டி எங்களை பள்ளி, கல்லுாரிக்கு அனுப்பிவிட்டு வேலைக்கு செல்வார். இரவு கோவில் மூடிய பின், பூ வியாபாரத்தை முடித்து வீடு திரும்புவார். வியாபாரத்தில் கிடைக்கும் பணத்தை பொறுத்து, வரும் போதே தோசை மாவு வாங்கி வந்து, சட்னி அரைத்து டிபன் செய்து தருவார். தெருவில் உள்ள முக்கால்வாசி வீடுகளில், அப்பாக்கள் குடிகாரர்கள்; அம்மாக்கள் உழைப்பாளிகள்.
இயந்திரமாக எங்கள் வாழ்க்கை ஓடிக் கொண்டு இருக்கிறது. ஓயாத குடியின் காரணமாக அப்பாவின், கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு நாள் இரவு ரத்த வாந்தி எடுத்தார். ஆட்டோவில் ஏற்றி, மருத்துவமனைக்கு சென்றோம். அப்பாவை பரிசோதித்த டாக்டர்கள், 'அவருக்கு கல்லீரல் மாற்று ஆப்ரேஷன் செய்ய வேண்டும்' என்றனர்.
'டோனர் கிடைக்கும் வரை காத்திருக்க முடியாது. ரத்த சம்பந்தமுள்ள குடும்பத்தினர் எவரும் கொடுத்து உதவலாம்' என்றனர்.
நான் முன் வந்தேன். ஆனால், அம்மா மறுக்கிறார். 'உனக்கு எதிர்காலம் இருக்கிறது. மூன்று மாதம் ஓய்வு எடுக்க வேண்டும்; கல்லுாரி செல்ல முடியாது. படிப்பு பாதிக்கும்' என்கிறார். அதனால், அம்மா தருகிறேன் என்கிறார். குடும்பம் நடப்பதே அம்மாவால் தான். அவரும் படுத்துவிட்டால் என்ன செய்ய முடியும்... நீங்கள் அறிவுரை சொல்லுங்கள், பிளீஸ்...
- இப்படிக்கு
குணசேகரன்.
அன்பு குணசேகரன்,
'கல்லீரல்' தானம் என்பது முற்றிலுமாய், ஒருவர் உடலில் எடுத்து நோயாளிக்கு பொருத்துவது அல்ல என்பது, கல்லுாரி மாணவரான உனக்கும் தெரிந்திருக்கும். சிறு பகுதியை எடுத்து நோயாளிக்கு பாதிக்கப்பட்ட இடத்தில் பொருத்துவர். இதனால் தானம் கொடுப்பவருக்கு பாதிப்பு ஏற்படாது.
நீ உறுப்பு தானம் கொடுப்பதால், உன் அம்மா பயப்படுகிற மாதிரி, கல்லுாரிக்கு செல்வது தடைபடுமே தவிர, உன் எதிர்கால வாழ்கையில் சிறிதளவும் பாதிப்பு ஏற்படாது. உன் அம்மா தானம் கொடுத்து ஓய்வெடுத்தால், குடும்ப சக்கரம் ஓடாது. அவர் தான் உங்கள் குடும்பத்தின் முதுகெலும்பு, சுவாசப்பை.
ஆகவே, உன் அப்பாவிற்கு நீ உதவுவது தான் சரி. அதுதான் நடைமுறைக்கு சரிப்பட்டு வரும். இதை உன் அம்மாவுக்கு விளக்கி சொல். பயமோ, கவலையோ வேண்டாமென்று கூறு.
நீங்கள் படும் அனைத்து கஷ்டங்களையும் காணும் உன் 'டாஸ்மாக்' அப்பா, இதற்கு மேலாவது மதுக்கடை பக்கம் போகாமல் இருப்பாரா என்பதை, கேட்டு உறுதிபடுத்திக் கொள். உன் அப்பா மட்டுமல்ல; டாஸ்மாக் கடையே கதி என்று கிடக்கிற அத்தனை குடும்ப தலைவர்கள் நிலையும் இதுதான். குடும்பத் தலைவிகளுக்கு உழைப்பே கதி. இதை குடிப்பவர் மட்டுமின்றி, அரசும் என்று உணருகிறதோ, அன்று தான் இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படும்.
- அன்புடன், பிளாரன்ஸ்.

