
பிளாரன்ஸ் அம்மா,
எட்டாம் வகுப்பு மாணவன் நான். சரியாக சாப்பிட்டு, துாங்கி மூன்று நாளாகிறது. அழுதழுது ஓய்ந்து, இப்போது உள்ளுக்குள்ளேயே அழுகிறேன். தாங்க முடியாததால், இதை எழுதுகிறேன்.
என் வீடு, ஓட்டு வீடு தான். ஆனால், வீட்டின் முன்னால் நிறைய இடம் உண்டு. அங்கு வேலி ஓரத்தில், ஒரு பெரிய மரம் இருந்தது. அது, என்ன மரம் என்று எனக்கு தெரியாது. கிளைகளுடன், நீண்டு அடர்ந்து இருக்கும். அதனுள் நிறைய கிளிகள் வாசம் செய்தன. அதிகாலையில் அவற்றின், 'கீச்...கீச்' என்ற சத்தம் தான், என்னை எழுப்பும். வாசலில் உட்கார்ந்து, அவை எழுப்பும் ஒலியையும், பறக்கும் அழகையும் ரசிப்பேன்.
'காலையில் எழுந்ததும் வாசலில் என்ன வேலை... பல் தேய்த்து, காபி குடிச்சுட்டு. படிடா...' என்று, அப்பா சத்தம் போடுவார். ஆனால், 6:30 மணி வாக்கில் மொத்த கிளிகளும் பறந்து சென்ற பிறகே, நான் வீட்டிற்குள் செல்வேன். மாலை 6:30 மணி வாக்கில், இருட்டுவதற்கு முன், அதே 'கீச்... கீச்' சத்தத்துடன், எல்லா கிளிகளும் அந்த மரத்தை வந்து அடையும்.
வீட்டின் முன் உள்ள இடத்தில், தளம் போட்டு மாடி வீடு கட்ட ஏற்பாடு செய்தார், அப்பா. அதற்காக கிளிகள் வசித்த அந்த மரத்தை, வெட்ட சொன்னார். நான் அதிர்ந்து போனேன். அந்த மரத்தை வெட்ட வேண்டாம் என்று, அப்பாவிடம் கெஞ்சினேன். 'ஏன்...' என, கேட்டார். அதில் நிறைய கிளிகள் வசிப்பதை சொன்னேன். 'இங்கு மனுஷங்கள் வாழ்வதற்கே இடமில்லை; கிளிகளுக்காக பரிஞ்சுக்கிட்டு வர்றியா...' என்று, அதட்டினார் அப்பா.
அம்மாவிடம் அழுது முறையிட்டும், அப்பாவின் சொல்லை மீற முடியவில்லை. ஒருநாள், நான் பள்ளிக்கூடம் சென்று மாலை வீடு திரும்புவதற்குள், மரம் வெட்டப்பட்டு, அந்த இடம் வெறிச்சோடிக் கிடந்தது. அதைப் பார்த்ததும், என் அடிவயிறு கலங்கியது. மாலையில் திரும்பிய கிளிகள், தாங்கள் வசித்த மரத்தைக் காணாமல், சுற்றி சுற்றி வந்து கீச்சிட்டு கதறிய சத்தமும், காட்சியும் என்னை அழவைத்தது.
அம்மாவிடம் இதை சொல்லி அழுதேன். இன்னும், இந்த நிகழ்வை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மனிதன் வாழ்வதற்கு மட்டும் தானா, இந்த பூமி...
- இப்படிக்கு,
ராகவேந்தர்.
அன்பு மகனே,
உன் கடிதம் படித்து, கொஞ்சநேரம் அப்படியே உட்கார்ந்திருந்தேன்; மனம் பாரமாகி விட்டது. அதுவும், உன் கடைசி கேள்வி, என்னை உலுக்கி விட்டது. ஆம், மகனே... மனிதர்களில் கூட, வலுவானவர்கள் வாழ்வதற்கான பூமி தான் இது.
கன்பூஷியஸ் என்ற சீன தத்துவவாதி, இதைத்தான், 'மைட்டியஸ்ட் வின்ஸ்' என்றார். அதாவது, 'பலசாலி வெற்றி பெறுவான்' என்றார்.
நம்மை போல உணர்ச்சி பூர்வமானோரும், இளகிய மனது உடையோரும், இயற்கையை ஆராதிப்போரும் மட்டுமே படும் சங்கடம் இது. அறிவார்ந்தோரும், அறிவுப்பூர்வமாக சிந்திப்போரும், இது போன்ற சங்கடங்களை அனுபவிப்பதில்லை.
அதுபோன்ற, நடைமுறை மனிதர் தான் உன் அப்பா. அவர் மீது தவறு ஒன்றுமில்லை. வீடு கட்ட வேண்டுமென்றால், அந்த மரத்தை அகற்றி தானே ஆக வேண்டும். நீயே யோசித்துப்பார்... இது, அவர் வேண்டுமென்றே செய்ததில்லை என்பது, உனக்கே புரியவரும்.
மனிதர்களுக்கு தான் இயற்கையை அழித்து, கட்டடங்கள் கட்ட வேண்டும். இயற்கையோடு இசைந்து வாழும் பறவைகளுக்கும், விலங்குகளுக்கும், இப்படிப்பட்ட தேவைகளுமில்லை; அவை கவலைப்படுவதுமில்லை. இரை தேடுவதும், தான் ஈன்றவற்றை பராமரிப்பதும் மட்டும் அவற்றின் வாழ்க்கை. இந்த மரமில்லை என்றால், வேறு மரத்தை அந்த கிளிகள் தேடிக் கொள்ளும்.
'இந்த மனிதர்களே இப்படித்தான்... மரங்கள், காடுகளை அழிப்பர். விளைநிலங்கள், ஏரிகள், குளங்களில் வீடுகள், அடுக்குமாடி கட்டடங்கள் கட்டுவர். யானைகளின் வழி தடங்களில் விடுதிகள் அமைப்பர்' என்று, மனித சுயநலத்தை புரிந்து, தங்களுக்கான மாற்று இடங்களை நாடி, பறவைகளும், விலங்குகளும் புலம் பெயர்ந்துவிடும்.
ஆகவே, அழுவதை நிறுத்தி, கவலைப்படுவதை விட்டு, படிப்பதை கவனி.
- இப்படிக்கு, பிளாரன்ஸ்.

