தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/இளஸ் மனஸ்! (345)

இளஸ் மனஸ்! (345)

இளஸ் மனஸ்! (345)


PUBLISHED ON : மார் 14, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 14, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள இந்துமதி அக்காவுக்கு,

எனக்கு ஒரே மகன். அதி புத்திசாலி. நுாலகத்தில் இருந்து நிறைய புத்தகங்களை தேடித் தேடி படிப்பவன். பிறந்தநாள், தீபாவளி என, எந்த விசேஷங்களுக்கும் புது உடை வேண்டாம் எனக் கூறி, அதற்கு பதிலாக புத்தகங்கள் வாங்கி தரும்படி கேட்பான்.

ஆனால், மற்ற சிறுவர்களைப் போல் வேகமோ, சுறுசுறுப்போ இல்லை. மிகவும் நிதானம். குளிக்க, பல் தேய்க்க, சாப்பிட என, ஒவ்வொரு செயலுக்கும் ஒரு மணி நேரம் ஆகும். மற்ற சிறுவர்கள் போல், 'இது வேண்டும்... அது வேண்டும்' என, கேட்டதில்லை.

இவ்வாறு மாறுபட்டவனாக இருக்கும் அவனை, இந்த உலகத்துடன் ஒட்ட வைக்க, என்ன செய்ய வேண்டும், சகோதரி...

- இப்படிக்கு,

நித்யா மூர்த்தி.



அன்பு சகோதரி நித்யாவுக்கு,

நீயும், உன் கணவரும் உங்கள் மகனின் குறையை புரிந்து கொண்டு விட்டீர்கள் அல்லவா... பின் என்ன பிரச்னை...

ஒருமுறை ரயில் பயணத்தில் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை சொல்கிறேன்...

அது, முதல் வகுப்பு, 'ஏசி' பெட்டி. நானும், வேறொரு நாகரிக பெண்மணியும் கீழ் பர்த்; ஒரு அம்மா, பையன் மேல் பர்த். அது, இரவு நேர பயணம். மேல் பர்த் அம்மாவின், 11 வயது மகன், நாகரிக பெண்மணி படுக்க வேண்டிய இருக்கையில், தான் எடுத்து வந்திருந்த பெட்டியை திறந்து வைத்திருந்தான். தன் பொருட்களை எடுத்து வெளியே வைப்பதும், மீண்டும் பெட்டியினுள் அடுக்குவதுமாக இருந்தான்.

அந்த நாகரிகப் பெண்மணி, தன் இருக்கையின் ஓரத்தில் அமைதியாக அமர்ந்து, புன்சிரிப்புடன் அந்த சிறுவனை பார்த்துக் கொண்டிருந்தார். அரை மணி நேரமாயிற்று; சிறுவன், தன் பெட்டியிலிருந்த பொருட்களை எடுப்பதும், வைப்பதுமாகவே இருந்தான்.

மேல் பர்த்தில் படுத்திருந்த அவனது அம்மா, பரபரவென்று கீழே இறங்கினாள். மகனின் தலையில் ஒரு குட்டு வைத்து, 'எத்தனை நேரம்டா பெட்டியை இப்படி அடுக்குவே. வீட்ல தான் இப்படி செய்யறேன்னா, ரயிலிலுமா... இந்த ஆன்ட்டி எவ்வளவு நேரமாக காத்திருக்காங்க. அவங்க இருக்கையை காலி செய்...' என, அதட்டினாள்.

உடனே, அந்த நாகரிகப் பெண்மணி, அவனது அம்மாவை கடிந்து கொண்டார்.

'தயவுசெய்து, அவனிடம் இப்படி சத்தம் போடாதீங்க. அடிப்பது, தலையில் குட்டுவதெல்லாம் செய்யாதீங்க. இவன், 'ஸ்பெஷல் சைல்ட்' எனப்படும், சிறப்பு குழந்தை. இவனிடம் நீங்கள் மிகவும் பொறுமை காட்ட வேண்டும்...

'இவனுக்கு நம் அவசர உலகம் புரியாது. இவனைத் தான் நாம் புரிந்து கொள்ள வேண்டுமே தவிர, இவனால் நம்மை புரிந்து கொள்ள முடியாது...

'நான், அமெரிக்காவில் வசிப்பவள். நீங்கள் இவனை கடிந்து கொண்ட மாதிரியோ, தலையில் குட்டியது போன்றோ அமெரிக்காவில் செய்திருந்தால், உடனே போலீஸ் வந்து உங்களை கைது செய்திருக்கும். சிறுவர்களை துன்புறுத்தும் சட்டத்தின் கீழ், நீங்கள் தண்டிக்கப் பட்டிருப்பீர்கள். அங்கு குழந்தைகள் நலனும், பாதுகாப்பு விதிகளும் அதிகம்...

'மேலும், இவனை போன்ற தனிப்பட்ட வித்தியாசமான சிறுவர், சிறுமியருக்கான கவனிப்புகளும், அவர்கள் தரும் முக்கியத்துவமும் சிறப்பானவை...

'இனிமேல், இவனிடம் அதிக அக்கறையும், அன்பும் காட்டுங்கள். நீங்கள் அவனை நேசிக்கிறீர்கள் என்பதை, உங்களது ஒவ்வொரு சின்னச் சின்ன செயலிலும் தெரியப்படுத்துங்கள். இவை தான் அவர்களின் தேவையே தவிர, உங்கள் எதிர்ப்பு அல்ல...' என, நாகரிகப் பெண்மணி கூற, சிறுவனின் அம்மா பேசாமல் இருந்து விட்டாள்.

இதையே உனக்கும், உன் போன்ற அத்தனை தாய்மார்களுக்கும் சொல்கிறேன்.. .

அன்பையும், பாசத்தையும் தவிர, சிறந்த மருந்து இந்த உலகத்தில் வேறு எதுவும் இல்லை. 'அடுத்தவர் மாற வேண்டும்; அடுத்தவரை மாற்ற வேண்டும்' என்று நினைக்கிறோமே தவிர, 'நாம் மாற வேண்டும்; நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும்' என, நினைப்பதில்லை.

உங்கள் மகனிடம் அன்பு செலுத்தி, தனிப்பட்ட திறமையை வெளிக் கொண்டு வர பாருங்கள். உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.

-- பிரியமுடன், இந்துமதி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us