தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/இளஸ் மனஸ்!

இளஸ் மனஸ்!

இளஸ் மனஸ்!


PUBLISHED ON : மே 09, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 09, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள இந்துமதி,

நான் உங்கள் வாசகி. என் மகன், பிளஸ் 2 முடித்து, இப்போது தான் கல்லுாரியில், பி.காம்., சேர்ந்திருக்கிறான்.

பள்ளியிலேயே முதலாவதாக வந்த மாணவன்; புத்திசாலி, பொது அறிவும் அதிகம். அவனை, பள்ளி ஆசிரியைகள், 'நடமாடும் என்சைக்ளோபீடியா' என்பர். அவன் படிக்கின்ற புத்தகங்கள், உலக அளவில் பாராட்டு பெற்ற எழுத்தாளர்கள் எழுதியவை.

அவன் படித்த பள்ளியும், சேர்ந்திருக்கும் கல்லுாரியும் மிகச் சிறந்தவை. பள்ளியில் படித்த வரை அமைதியாக இருந்தவன், இப்போது திடீர் திடீரென்று கோபப்படுகிறான்.

ஏதாவது அவன் விருப்பத்திற்கு மாறுபட்டு சொன்னால், பற்களை 'நறநற'வென கடிக்கிறான். பெற்றோர் என்றும் பார்க்காமல் கை ஓங்குகிறான், அடிக்கிறான். மிகவும் வன்முறையாக நடந்து கொள்கிறான்.

கோபம் வந்து, கண்களை உருட்டி, பற்களைக் கடிக்கும் போது, அவன் முகம் ஓநாயை நினைவூட்டுகிறது. ஒரு மணி நேரம் பேயாட்டம் போட்ட பின் அமைதியாகி, ஒன்றுமே நடக்காதது மாதிரி, 'அம்மா பசிக்கிறது. சாப்பாடு போடு...' என்கிறான். அப்போது, அவனது முகம் சாந்தமாக மாறிப் போகிறது.

இப்பிரச்னைகளால், ஒவ்வொரு இரவும், சிவராத்திரியாகிறது. இரவு வந்தாலே பயம் வயிற்றைக் கவ்வுகிறது. இது என்ன சகோதரி... வேப்பிலை அடித்து, விபூதி மந்திரித்து, எல்லாம் பார்த்தாகி விட்டது.

எனக்கு ஒரு வழி கூறுங்கள், பிளீஸ்...

- இப்படிக்கு,

சுமதி சுரேஷ், பெங்களூரு.



அன்பு சுமதி,

நீங்கள், உங்கள் மகனை புரிந்து கொள்ள வேண்டும். அவன் கோபப்படுகிற போது, நீங்கள் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும். பதிலுக்கு நீங்கள் கோபப்படக் கூடாது.

பொறுமையாக, நிதானமாக, முக்கியமாக அன்போடு அருகில் சென்று அரவணைத்து, ஒரு குழந்தையிடம் பேசுகிற மாதிரி, பேச வேண்டும்.

'என்னடா கண்ணா ஆச்சு... ஏன் இப்படி நடந்துக்குறே, எதுக்கு கோபப்படுறே, எதுவானாலும் என் கிட்ட சொல்லு... நான் இருக்கேன் உனக்கு...' என்று, அன்புடன் பேசிப் பாருங்கள்.

பால் பொங்கி வரும் போது, அடுப்பை தணிக்கத்தானே வேண்டும்; மேலும் பெரிதாக எரிய விடவா செய்வீர்கள்... அதே தத்துவத்தை தான், இங்கும் பயன்படுத்த வேண்டும்.

உங்கள் மகன், வேண்டுமென்றே இதைச் செய்யவில்லை. வேப்பிலை அடிக்கவும், விபூதி மந்திரிக்கவும் அவனுக்கு பேயோ, பிசாசோ பிடிக்கவில்லை. பாவம் அவன்; ஒரு வகை மனநோயால் கஷ்டப்படுகிறான்.

அனேகமாக அது, 'பைபோலார் டிசார்டர்' ஆகக் கூட இருக்கலாம். அதற்கு வைத்தியம் பார்க்க வேண்டுமே தவிர, மூட நம்பிக்கைகளில் இறங்கி விடக் கூடாது. அது இன்னும் வன்முறையாக மாற்றி விடவும் வாய்ப்பு உண்டு. அவனுடைய நிலைமை இன்னும் மோசமாகும்.

ஒரு புத்திசாலி இளைஞனின் அறிவும், சாமர்த்தியமும், சமூக முன்னேற்றத்திற்கு உதவ வேண்டுமே தவிர, வீணாய் போய் விடக் கூடாது. நல்ல இளைஞனின் வாழ்க்கை, பாழாகக் கூடாது.

உடனடியாக உங்கள் மகனை, ஒரு நல்ல மனநல மருத்துவரிடம் அழைத்து செல்லுங்கள். அவனது பிரச்னை என்ன என்பதை, அவர் கண்டு பிடித்து சிகிச்சை மேற்கொள்வார்.

பெங்களூரில், ஜெயநகர் முதல் பிளாக்கில், 1847ல் ஆரம்பிக்கப்பட்ட மத்திய அரசு மருத்துவமனையான, 'நிமான்ஸ்' என அழைக்கப்படும், 'நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் மென்டல் ஹெல்த் அண்டு நியூரோ சயன்ஸ்' மருத்துவமனை இருக்கிறது. அது இந்தியாவின், 'நம்பர் 1' மனநல மருத்துவமனை. அங்கு, மிகச் சிறந்த மருத்துவர்கள் உள்ளனர். உலகத்தரமான மருத்துவம், இலவசமாக அளிக்கப்படுகிறது.

அங்கு அழைத்து சென்றால், குணமாவது நிச்சயம். மிகச் சிறந்த மாணவனாக மட்டுமின்றி, சிறந்த மனிதனாகவும் உங்கள் மகன் உருவாவது திண்ணம்.

- அன்புடன், இந்துமதி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us