PUBLISHED ON : ஆக 09, 2025

ஆகஸ்ட் 15 - இந்திய சுதந்திர தினம்
தேசியக்கொடியில் மூன்று நிறங்கள் உள்ளன. அதில், குங்குமப்பூ நிறமான இளஞ்சிவப்பு, நாட்டின் வலிமை மற்றும் தைரியத்தை குறிக்கிறது. கொடியின் மையத்தில் உள்ள வெண்மை, அமைதி மற்றும் உண்மையை காட்டுகிறது. அடுத்து, நிலையான வளம், வளர்ச்சியை காட்டுகிறது பச்சை.
இத்தனை பொருள்களை உணர்த்தும் தேசியக்கொடி, பலமுறை மாறுதல்கள் செய்த பின்பே உருவாக்கப்பட்டது. அது பற்றி பார்ப்போம்...
ஆந்திர மாநிலம், மஞ்சிலிப்பட்டியை சேர்ந்தவர் பிங்கலி வெங்கையா. தேசியக் கொடியை, 1921ல் உருவாக்கினார். இது ஜூன் 22, 1947ல் தற்போதைய வடிவில் ஏற்கப்பட்டது. சுதந்திரம் பெற்றதும், செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றுவோம் என பிரகடனம் செய்தவர் சுதந்திர போராட் ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.
சுதந்திரம் கிடைத்தவுடன், நாடு முழுதும் தேசியக்கொடி பறக்க விட முடிவு செய்யப்பட்டது. அதற்காக கொடி தயாரிக்கும் நிறுவனங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வேலுார், குடியாத்தம் வெங்கடாசலம் என்பவருக்கு சொந்தமான, இந்துஸ்தான் பேப்ரிக்ஸ் நிறுவனம் தயாரித்து அனுப்பியதில் ஒரு கொடி, டில்லி செங்கோட்டையில் ஏற்ற தேர்வு செய்யப்பட்டது.
தமிழகத்தில் முதன்முதலாக ஆகஸ்ட் 15, 1947 அதிகாலை 5:05 மணிக்கு சென்னை, புனித ஜார்ஜ் கோட்டையில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. அன்று, 150 அடி உயர கம்பத்தில் பறந்தது. இதுவும், குடியாத்தத்தில் தயாரிக்கப்பட்டது தான். இந்த கொடி, சென்னை, கோட்டை அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக தற்போது வைக்கப்பட்டு உள்ளது.
நம் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, முதல் தேசியக்கொடியை, ஆகஸ்ட் 15, 1947 அன்று டில்லி, செங்கோட்டை, 'லா கோரி' வாசலில் ஏற்றினார். அது, 21 குண்டுகளை வெடித்து பறக்கவிடப்பட்டது. பின், ஒவ்வொரு ஆண்டும் தேசியக் கொடியை ஏற்றி, பிரதமர் நாட்டு மக்களுக்கு உரையாற்றும் நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இந்தியா, குடியரசு நாடான பின், 1951ல் இந்திய தரக்கட்டுப்பாட்டு துறை தேசியக்கொடியை வடிவமைத்தது. கொடியின் நீளம், அகலம், நிறங்களின் அளவு, அடர்த்தி, பரப்பளவு, துணியின் தரம், கொடிக்கயிற்றின் தரம் போன்றவை நிர்ணயிக்கப்பட்டன. சுதந்திர போராட்ட தியாகிகளால் உருவாக்கப்பட்ட கர்நாடக கைத்தறி மற்றும் கிராமோதயா சம்யுக்தா சங்கத்திற்கு, தேசியக்கொடியை தயாரிக்கும் உரிமை வழங்கப்பட்டது. தயாரிப்பதை விற்கும் உரிமை, காதி மற்றும் கிராம தொழில் வாரிய கட்டுப்பாட்டில் உள்ளது.
தேசியக்கொடிக்கு மூன்று வண்ண துணிகளை தனித்தனியாக தயாரித்து பின், ஒன்றாக சேர்த்து முழு வடிவம் தருவர். ஆனால், ஒரே துணியில் நெய்த மூன்று வண்ணங்களிலான கொடியை, 2018ல் உருவாக்கினார் ஆந்திர மாநில நெசவாளர் ஆர்.சத்தியநாராயணன்.
தேசியக்கொடியை மாலை 6:00 மணிக்கு பின் பறக்க விட கூடாது என்பது விதியாக இருந்தது. அதை மாற்றும் அறிவிப்பு, 75ம் சுதந்திர தினத்தை ஒட்டி வந்தது. தேசியக் கொடியை இரவிலும் பறக்க விடலாம் என, 2022ல் அறிவித்தது மத்திய அரசு.
தமிழத்தில், டிச., 7, 2014ல் நடந்த நிகழ்வில் ஒரு சாதனை நிகழ்த்தப்பட்டது. சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், 50,000 பேரை இணைத்து தேசியக்கொடி போல் அணிவகுப்பு நடத்தப்பட்டது. இந்த அணிவகுப்பின் நீளம், 480 அடி; அகலம் 320 அடி. இது தேசியக்கொடிக்கு மரியாதை செய்யும் வகையில் கின்னஸ் சாதனை புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
- கோவீ.ராஜேந்திரன்

