
தேனி மாவட்டம், பெரியகுளம், வடுகப்பட்டி ஸ்ரீ மார்க்கண்டேயா நெசவாளர் நடுநிலைப் பள்ளியில், 2004ல், 6ம் வகுப்பு படித்த போது வகுப்பாசிரியராக இருந்தார், சு.தங்கவேல். எல்லா வகையிலும் முன்னேற பயிற்சியளிப்பார்.
வகுப்பில், நன்கு படிப்பவன் நான். ஆனால், கையெழுத்து தெளிவாக இருக்காது. அதை பொருட்படுத்தாமல் அலட்சியமாக இருந்தேன்.
அன்று பாடக்குறிப்பு நோட்டை ஆய்வு செய்த வகுப்பாசிரியர், 'கையெழுத்து தெளிவற்று மிக மோசமாக உள்ளதே...' என்று கேட்டபடியே எழுதியிருந்த பக்கங்களை கிழித்து எறிந்தார்.
இதை எதிர்பார்க்காததால் அதிர்ச்சியடைந்தேன்; இயலாமையால் கண்களில் நீர் திரண்டது. செய்வதறியாது நின்றிருந்தேன். என் நிலைமையைப் புரிந்து, 'இதுபோல் கிறுக்கலாக எழுதினால் தேர்வில் மதிப்பெண் கிடைக்காது... இப்போ திருந்தா விட்டால், எப்போதும் வாய்ப்பில்லை. கையெழுத்தை வடிவமாக்க முயற்சி செய்...' என அறிவுரை கூறினார்.
பின், இரட்டை வரியிட்ட பயிற்சி நோட்டைப் பயன்படுத்தி, எழுதி பழக கற்பித்தார். தீவிரமாக முயன்று வெற்றி பெற்றேன்.
தற்போது, என் வயது, 30; அரசு மருத்துவராக பணிபுரிகிறேன். வாழ்வில் ஏற்பட்டு வரும் எல்லா உயர்வுகளுக்கும், அந்த ஆசிரியரின் நம்பிக்கை மிக்க அணுகுமுறையும், கண்டிப்பான பயிற்சி முறையுமே அடிப்படையாக அமைந்துள்ளதாக கருதுகிறேன். அதே பள்ளியில் பணிபுரிந்து வரும் அவரை நன்றியுடன் போற்றி வாழ்கிறேன்!
- சி.பாலமுருகன், விருதுநகர்.
தொடர்புக்கு: 74186 12926