
உலகெங்கும் பரவலாக காணப்படுகிறது மல்லிகை. ஓலியேசி தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. இதில், 200க்கும் அதிக வகைகள் உள்ளன. இந்தியாவில், கலாசார, அழகியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இதன் மணம், மனதை அமைதிப்படுத்தி அழுத்தத்தை குறைக்கிறது. அழற்சி எதிர்ப்பு, கிருமி நாசினி பண்புகளை கொண்டுள்ளது. முடி அலங்காரத்தில் பயன்படுகிறது. வாசனை திரவியங்கள், அத்தியாவசிய எண்ணெய் தயாரிப்பில் உதவுகிறது. இந்திய பொருளாதாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது.
மல்லிகையின் வகைகளை பார்ப்போம்...
முல்லை: தென் மாநிலங்களில் பரவலாக வளர்க்கப்படுகிறது. வெண்மையான பூக்கள், அற்புத மணமுள்ளது. திருமண நிகழ்வுகளில் அதிகம் பயன்படுகிறது. மாலை அலங்காரம், வாசனைத் திரவியங்கள் தயாரிக்க உதவுகிறது. இது, 'அரேபியன் ஜாஸ்மின்' என்றும் அழைக்கப்படுகிறது. பழந்தமிழரின் சங்க இலக்கிய நுால்களில் இந்த மலர் பற்றிய குறிப்புகள் உள்ளன.
குண்டு மல்லி: இது, 'அரபியன் ஜாஸ்மின்' என்றும் அழைக்கப்படுகிறது. பெரிய, அழகிய வட்ட வடிவ பூக்களை உடையது குண்டு மல்லி தாவரம். வாசனைத் திரவியம் தயாரிப்பில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்தியாவில் தோட்டங்களில் வணிக ரீதியாக வளர்க்கப்படுகிறது.
ஜாதிமல்லி: இது, 'பொதுமல்லி' என்றும் அழைக்கப்படுகிறது. வெள்ளை நிற பூக்கள், மென்மையான மணம் உடையது. மருத்துவத்தில், குறிப்பாக மன அழுத்தத்தைக் குறைக்க பயன்படுகிறது. தோல் பராமரிப்பிலும் உபயோகப்படுகிறது.
புஷ்ப மல்லி: சிறிய, அடர்ந்த பூக்களை உடையது. மணம், மற்ற வகைகளை விட தனித்துவமானது. தமிழக, கேரளா உட்பட தென் மாநிலங்களில் மணப்பெண் அலங்காரத்தில் பிரபலமாக உள்ளது.
- வ.முருகன்