
திருப்பூர் மாவட்டம், பூளவாடி கிராம பஞ்சாயத்து துவக்கப் பள்ளியில், 1966ல், 5ம் வகுப்பு படித்த போது வகுப்பாசிரியையாக இருந்தார் ராஜம்மாள்.
கண்டிப்பு மிக்கவர். பொறுமையுடன் பாடம் நடத்துவார். படிப்பில் ஈடுபாடு இன்றி இருந்த எனக்கு கல்வியின் உயர்வை உணர்த்தும் வகையில், 'எண்ணத்தை ஒழுங்கு படுத்தினால் பல மொழிகளை சுலபமாக கற்க முடியும்...' என ஆர்வம் ஊட்டினார்.
அதை மனதில் பதித்து, அக்கறையுடன் படித்தேன். நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றேன். பின், ஹிந்தி கற்கும் ஆர்வம் ஏற்பட்டது. அக்கறையுடன் படித்து பிராத்மிக், மத்யமா தேர்வுகளில், 45ம் வயதில் வென்றேன். குடும்பச் சூழலால் படிப்பை தொடர போதிய நேரம் கிடைக்கவில்லை.
நீண்ட இடைவேளைக்கு பின், 64ம் வயதில் மீண்டும் ஹிந்தி மொழி கற்று வருகிறேன். டில்லி, பத்ரிநாத், கேதார்நாத் என, வடமாநில சுற்றுலாக்களில் உதவுகிறது.
எனக்கு, 69 வயதாகிறது; இல்லத்தரசியாக இருக்கிறேன். என் பேத்தியர் பாடங்கள் படிக்க உதவும் போது கிடைக்கும் புகழுரையால் கூடுதல் மகிழ்ச்சி அடைகிறேன். இது போன்ற பெருமைகள் அடைய ஊக்குவித்த ஆசிரியையை போற்றி வணங்குகிறேன்.
- எஸ்.லலிதா, கோவை.