
புதுச்சேரி, சுப்பிரமணிய பாரதியார் உயர்நிலைப் பள்ளியில், 1975ல், 9ம் வகுப்பு படித்தபோது வகுப்பாசிரியையாக இருந்தார் பச்சையம்மாள். கண்டிப்பு மிக்கவர். கம்பீர குரலில் பாடம் சொல்லித் தருவார். அது பசுமரத்தாணி போல மனதில் பதியும். முதல்நாள் நடத்திய பாடத்தில் மறுநாள் கேள்விகள் கேட்பார். ஐயங்களை போக்கிய பின், அடுத்த பாடத்தை துவங்குவார். அதை பின்பற்றி பள்ளிக் கல்வியை சிறப்பாக முடித்தேன்.
அரசு பணிக்கு செல்லும் வகையில் திட்டமிட்டு மேற்படிப்பை தேர்ந்தெடுத்தேன். ஆசிரியை பயிற்சியையும் முடித்தேன். புதுச்சேரி கல்வித்துறையில் பணி கிடைத்தது. அந்த வகுப்பாசிரியை கற்பித்த வழிமுறையை பின்பற்றி பதவி உயர்வுகள் பெற்றேன். என் கணவரும் அதே பாணியை கடைபிடிப்பதாக கூறியது பெரும் நிறைவு தந்தது. இருவரும் வீடு தேடி சென்று என் ஆசிரியை பச்சையம்மாளை சந்தித்து மகிழ்ச்சியை சமர்ப்பித்தோம். மேலும், ஓய்வூதியம் பெறுவதில் அவருக்கு ஏற்பட்டிருந்த சிக்கலை சரிசெய்து நன்றிக்கடனை செலுத்தினேன்.
எனக்கு, 62 வயதாகிறது; புதுச்சேரி மாநில பள்ளி கல்வித்துறையில், துணை ஆய்வாளாராக பணி உயர்ந்து ஓய்வு பெற்றேன். பள்ளியில் கம்பீரம் குறையாமல் பாடம் நடத்திய வகுப்பாசிரியை பச்சையம்மாளின் குரல் என் காதில் இன்றும் ஒலித்து கொண்டிருக்கிறது.
- மல்லிகா கோபால், புதுச்சேரி.
தொடர்புக்கு: 96594 46716