
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை, எஸ்.பி.கே., ஆண்கள் உயர்நிலை பள்ளியில், 1967ல் எஸ்.எஸ்.எல்.சி., படித்தபோது தலைமை ஆசிரியராக இருந்தார் சுந்தரம். மாணவர்கள், 100 சதவீதம் தேர்ச்சி பெற உழைத்தார். ஆங்கில துணை பாடம், கணித பாடங்களை அவர் நடத்தும் விதம் அற்புதமாக இருக்கும்.
வகுப்பை கவனிக்காதோர் அவரிடம் இருந்து தப்ப முடியாது. அருகில் அழைத்து, குட்டி பிரம்பை வளைத்து அடி தந்து உணர்த்துவார். இந்த தண்டனைக்கு பயந்து நடுங்குவோம்.
கணித பாடத்தில், ஆல்ஜிப்ரா தியரம்ஸ் ஒவ்வொரு வகுப்பின் போதும் தவறாமல் சொல்ல வேண்டும். முதல் பெஞ்சு ஆரம்பித்து, கடைசி மாணவர் வரை உன்னிப்பாக கவனிப்பார். இடையில் எந்த தடையும் இருக்கக்கூடாது. தெரியாமல் முழிப்போருக்கு பிரம்படி நிச்சயம்.
இவ்வாறு கண்டிப்பு காட்டியதால் ஆண்டு இறுதித் தேர்வில் அனைத்து மாணவரும் வெற்றி பெற வாய்ப்பு ஏற்பட்டது. பொது தேர்வில், 400 மதிப்பெண்களுக்கும் அதிகம் வாங்கியோரை தங்க பதக்கம் கொடுத்து கவுரவித்தது பள்ளி நிர்வாகம்.
இப்போது எனக்கு, 74 வயதாகிறது. இந்திய கடற்படையில் பணியாற்றினேன். அப்போது பாகிஸ்தானுடன் நடந்த போரில் பங்கேற்றேன். பின், ஜெனரல் இன்சுரன்ஸ் நிறுவனத்தில் மண்டல அதிகாரியாக பணியில் சேர்ந்து ஓய்வு பெற்றேன். பள்ளியில் கண்டிப்பான நடவடிக்கையால் மாணவர்களை, மருத்துவர், பொறியாளர் என உருவாக்கி வெற்றி பாதையில் நடைபோட காரணமாக இருந்தார் தலைமையாசிரியர் சுந்தரம். அவரது நினைவை போற்றுகிறேன்.
- பி.சி.வசந்த் சிங், சென்னை.
தொடர்புக்கு: 94443 10115

