
இயற்கையை போற்றி நன்றி செலுத்தும் திருநாள் பொங்கல். ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் கொண்டாடப்படுகிறது.
கரும்பு இன்றி இந்த பண்டிகை கொண்டாடப்படுவதில்லை. கரும்பு குறித்த இனிப்பான தகவல்களை பார்ப்போம்...
புல் வகையைச் சேர்ந்தது கரும்பு. இதன் தாவரவியல் பெயர் ஸக்காரம் அபிசினரம். இது, 20 அடி உயரம் வரை வளரும். அந்தந்த பகுதியில் நிலவும் வெப்பநிலையைப் பொறுத்து உயரம் மாறுபடும். கரும்பின் கணுப் பகுதியை வெட்டி நட்டால், புதிய தாவரம் உருவாகிவிடும்.
இந்தியாவில் கி.மு.4000ம் ஆண்டில் கரும்பு பயிரிடப்பட்டதாக குறிப்புகள் உள்ளன. சங்க இலக்கியமான அகநானுாறுவில் கரும்பு பயன்பாடு பற்றி வித்தியாசமான நிகழ்வு ஒன்று கூறப்பட்டுள்ளது.
அதன்படி, பழந்தமிழகத்தில், பொதி ஏற்றி செல்லும் மாட்டு வண்டிகள் பயன்பட்டன. அவை சேற்றில் மாட்டிக் கொள்வது அடிக்கடி நடக்கும். அப்படி சிக்கும் போது, வண்டி சக்கரங்களுக்கு அடியில் கரும்பை போட்டு, பிடிமானம் ஏற்படுத்தி மேட்டுப் பகுதிக்கு தள்ளி விடுவர். இதை தெளிவாக குறிப்பிட்டு உள்ளது இலக்கியம்.
கரும்பு பயிரின் தண்டில்...
சர்க்கரை 16 சதவீதம்
நார்ப் பகுதி 16 சதவீதம்
மீதம் இருக்கும் அனைத்தும் நீர்.
கரும்பில் உள்ள சர்க்கரை வகையை, 'சுக்ரோஸ்' என்பர்.
கரும்பு தாவரத்தில், பாய், பேனா, திரைச்சீலை போன்றவையும் உருவாக்கப்படுகின்றன.
கரும்பில் இருந்து சர்க்கரை உருவாக்குவது பற்றி பார்ப்போம்...
கரும்பை சுத்தம் செய்து பிழிந்து சாறு எடுப்பர். அதை நன்கு கொதிக்க வைத்து அசுத்தங்கள் நீக்கப்படும். பின், நன்கு குளிர வைக்கும் போது சர்க்கரையின் மூல வடிவம் கிடைக்கும். இது சுத்திகரிக்கப்படுகிறது. சர்க்கரை அடங்கிய உணவை அளவுக்கு அதிகமாக உட்கொள்வது உடல் நலனுக்கு உகந்தது அல்ல.
நம் நாட்டில் லட்சக்கணக்கான விவசாயிகள் கரும்பு உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர். சர்க்கரை ஆலைகளும் ஏராளம் உள்ளன. அவற்றில் பல லட்சம் பேர் வேலை செய்து சர்க்கரை உற்பத்தி செய்கின்றனர். வெல்லம், அச்சு வெல்லம், நாட்டு சர்க்கரை போன்றவையும் கரும்பில் இருந்தே தயாரிக்கப்படுகிறது.
உலகில், மிக அதிகமாக கரும்பு உற்பத்தி தென் அமெரிக்க நாாடன பிரேசிலில் நடக்கிறது. இரண்டாம் இடத்தில் இந்தியா உள்ளது. இங்கு தயாரிக்கப்படும் சர்க்கரையில் பெருமளவு உள்நாட்டிலே பயன்படுகிறது. தேவைக்காக சர்க்கரையை இறக்குமதி செய்ய வேண்டி இருக்கிறது.
யானையின் விருப்ப உணவு கரும்பு. அவை போதிய சக்தி பெற கரும்புச்சாறு மிகவும் பயன்படுகிறது.
பெட்ரோலுக்கு மாற்றாக உள்ளது எத்தனால் என்ற எரிபொருள். இது கரும்பிலிருந்து பெறப்படுகிறது.
இயற்கைக்கு நன்றி செலுத்தும் திருநாளாக பொங்கல் கொண்டாடப்படுகிறது. இனிய வாழ்த்துகள்.
- ஜி.எஸ்.எஸ்.