
முன்கதை: சிறுமியர் ரீனாவும், மாலினியும் நெருங்கிய தோழியர். பள்ளி ஆண்டு விடுமுறையை கொண்டாட குடும்பத்தினருடன் லட்சத்தீவுக்கு சுற்றுலா சென்றனர். பல இடங்களையும் சுற்றிப் பார்த்தனர். ஒரு தீவுப்பக்கம் பயணித்த போது வினோத குட்டி மனுஷனைக் கண்டனர். வியப்புடன் நெருங்கினர். மகிழ்வுடன் வரவேற்ற அவன் திடீர் என யாரோ வருவதாக கூறி பயந்து ஓடி மறைந்தான். இனி -
தீவில் குட்டி மனுஷன் பதறியபடி சென்றதை பார்த்து, 'அவன் யாரையோ கண்டு பயப்படுகிறான். ஏதோ பிரச்னை இருக்கிறது' என்பதை உணர்ந்து கொண்டாள் ரீனா.
அவளுக்குள் இயல்பாக இருந்த மனிதாபிமானம் தலை துாக்கியது.
''யாரைப் பார்த்துப் பயப்படுகிறான்...''
புரியாமல் கேட்டாள் மாலினி.
''தெரியவில்லை. ஆனால், ஏதோ ஆபத்து இருக்கிறது என்பது மட்டும் புரிகிறது...''
''ஆபத்தா அல்லது பிரச்னையா...''
''ஆபத்தாகத்தான் இருக்க வேண்டும். யாரையோ பார்த்துப் பயப்படுகிறான் என்றால், அந்த யாரோவால் ஆபத்து என்று தானே பொருள்...''
''சரி வா... போகலாம்...''
''இல்லை மாலினி... எனக்கு என்னவோ அவனுக்கு உதவ வேண்டும் என்று தோன்றுகிறது...''
''ஆரம்பித்து விட்டாயா உன் சமூக சேவையை...''
''ஒரு வினோத மனிதன்; அதிலும் உயரம் குறைவானவன்; அவனுக்கு ஆபத்து என்று தெரிந்த பின், நாம் எப்படி விட்டு விட்டு போக முடியும்...''
''சரி வா, அப்பாவிடம் சொல்லலாம்...''
''வேண்டாம்...''
''ஏன் ரீனா... பெரியவர்களால் தானே உதவ முடியும்...''
''இல்லை மாலினி... இதை பெரியவர்கள் எப்படி எடுத்துக்கொள்வர் என்று தெரியவில்லை. வந்த இடத்தில் நமக்கு எதற்கு தேவையற்ற பிரச்னை என்று சொல்வர்...''
''சரி தானே...''
''என்னால் அப்படியெல்லாம் விட்டு போக முடியாது...''
ரீனா உறுதியாக சொல்ல, சலித்துக் கொண்டாள் மாலினி.
''என்ன செய்வதாக உத்தேசம்...''
''அவனுக்கு உதவியே ஆக வேண்டும்...''
''என்ன பிரச்னை என்பதும் யாரைக் கண்டு பயப்படுகிறான் என்பதும் தெரியாது. எப்படி உதவுவாய் நீ...''
''பிரச்னையை அவனிடம் கேட்க வேண்டும்...''
''அவன் தான் யாருக்கோ பயந்து ஓடி விட்டானே... இனி எங்கே போய் தேடுவது...''
''திரும்பவும் வருகிறானா என்று பார்க்கலாம் மாலினி...''
''நாம் இங்கே இருக்கப் போவது இன்னும் சில நிமிடங்கள் தான். படகு பழுது நீக்கப்பட்டதும் கிளம்பி விடுவோமே...''
''அதற்குள் அவனை சந்திக்க முயற்சிக்கலாம். யார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். பின், அவனுக்கு என்ன பிரச்னை என்பதை அறிந்து உதவ முடியுமா என்று பார்க்கலாம்...''
''அது தற்காலிக பிரச்னையா அல்லது நிரந்தர பிரச்னையா என்பது கூட தெரியாதே...''
''அதைத்தான் விசாரிக்க வேண்டும் என்கிறேன். தற்காலிகப் பிரச்னை என்றால் இப்போதே அதற்கு தீர்வு கண்டு விடலாம்...''
''அந்த வழிகாட்டியிடம் கேட்டு பார்க்கலாமா...''
''நல்ல யோசனை மாலினி. ஆனால், நேரடியாக கேட்க வேண்டாம். சற்று மறைமுகமாக கேட்கலாம்...''
அவர்கள் பேசிக்கொண்டிருந்த போதே, இடதுபுறம் இருந்த மரக்கிளையில் சலசலப்பு கேட்டது.
திரும்பி பார்த்தனர். அதே குட்டி மனுஷ இளைஞன் அங்கிருந்தான்.
மரக்கிளைகளில் லாவகமாக தாவியபடி வந்து கொண்டிருந்தான்.
சிறுமியர் நின்றிருந்த இடத்துக்கு அருகில் மரத்தின் உச்சிக்கு வந்தான்.
அவன் கையில் சிறுமியர் தந்த சிப்ஸ் பாக்கெட் இருந்தது.
''ரீனா திரும்பவும் வந்து விட்டான் பார்...'' என்றாள் மாலினி.
ரீனாவும் ஒருவித பரபரப்போடு அவனை பார்த்துக்கொண்டிருந்தாள்.
''மரக்கிளையில் தாவுவதைப் பார்த்தால் ஒரு குரங்கின் செயல்பாடு போலவே இருக்கிறது. கவனித்தாயா...''
''ம்...ம்... ஆளும் அப்படித்தான் இருக்கிறான்...''
மரத்தின் உச்சியில் இருந்து கீழ்நோக்கி தாவி கிளைகளைப் பிடித்தபடி சிறுமியரை நோக்கி வந்தவன், திடீரென்று உஷாரானான். பயத்துடன் திரும்பி பார்த்தவன் மீண்டும் மரக்கிளைகளில் தாவி மறைந்து போனான்.
''என்னாச்சு இவனுக்கு... யாரை பார்த்து பயப்படுகிறான்...''
கேட்டபடி, அவன் திரும்பி பார்த்த திசையை எட்டி நோக்கினாள் ரீனா.
அங்கே சிறு சலசலப்பு கேட்டதே தவிர கண்ணுக்கு எதுவும் புலப்படவில்லை.
ரீனாவும், மாலினியும் உற்றுப் பார்த்தனர். யாரோ அங்கே நடந்து செல்வது போல தோன்றியது.
''இரண்டு பேர் போறாங்க ரீனா...''
''இவர்களை பார்த்து தான் பயப்படுகிறானா, யார் இவர்கள்...''
''தெரியவில்லையே...''
நடந்து சென்ற அந்த நபர்களின் சத்தம் முழுமையாக குறைந்து போனது. குழப்பத்துடன் பார்த்தாள் ரீனா.
''இங்கே ஆள் நடமாட்டம் இருக்கத்தான் செய்கிறது...''
''ஆமாம் மாலினி. ஆனால், வெளியிலிருந்து பார்த்தால் எதுவும் தெரிவதில்லை. கவனித்தாயா...''
அவர்கள் பேசிக் கொண்டிருந்த போதே, மரக்கிளைகளில் மீண்டும் சலசலப்பு கேட்டது . அந்த குட்டி மனுஷன் மரத்திலிருந்து லாவகமாக தரையில் குதித்தான். அவனிடம் கொஞ்சம் பதற்றம் தெரிந்தது.
சிறுமியரை பார்த்து லேசாக சிரிப்பது போல தோன்றியது. அவனை நெருங்கினர்.
இருவரையும் நட்போடு பார்த்தான்.
''நான் ரீனா, இவள் மாலினி. நாங்க இருவரும் தோழியர்...''
தங்களை அறிமுகம் செய்து கொண்டனர்.
''நீ இதற்கு முன் இங்கே வந்திருக்கிறீர்களா...''
''இல்லை... நாங்கள் சுற்றுலாவாக வந்தோம். இப்போது தான் முதல் முறையாக இங்கு வருகிறோம்...''
''அப்படித்தான் இருக்கும். ஏனென்றால், உங்களைப் போன்ற சிறு வயதுள்ளோர் அவ்வளவாக இங்கே வருவதில்லை. எனக்கு இன்னும் இந்த உணவு தருவாயா...''
சிப்ஸ் பாக்கெட்டை எடுத்து காட்டி கேட்டான்.
''இப்போது இல்லையே... நாளை அல்லது நாளை மறுநாள் நிறைய கொண்டு வருகிறேன்...''
ரீனா சொல்ல, அவன் முகம் மலர்ந்தான்.
''சரி... சரி...''
''ஆனால், நீ எப்போதும் வருவாயா...''
''நான் இங்கே தான் மரத்தில் இருப்பேன்...''
''ஓ... அப்படியா முதலில் நீ யாரைப் பார்த்து பயந்து ஓடினாய்...''
ரீனா இப்படி கேட்டதும் அதுவரை மலர்ந்த நிலையில் இருந்தவன் முகத்தில் அச்ச உணர்வு வந்தது.
''அவர்கள் தீயவர்கள். எங்களை அடிமையாக வைத்து கொடுமைப்படுத்துகின்றனர்...'' மிகுந்த பயந்துடன் கூறினான்.
அவன் அப்படிச் சொன்னதும் ரீனாவிற்கு ஆச்சரியமும், ஆர்வமும் ஏற்பட்டது.
- தொடரும்...
நரேஷ் அருண்குமார்

