
முன்கதை: சிறுமியர் ரீனாவும், மாலினியும் லட்சத்தீவுகளுக்கு சுற்றுலா சென்றனர். அங்கு ஒரு தீவில் குட்டி மனுஷங்கள் அடிமையாக இருப்பதை அறிந்து, ஆசிரியை ஜான்வி உதவியுடன் மீட்க திட்டமிட்டனர். சுரங்கம் அமைந்திருந்த பகுதிக்கு சென்று, பழங்குடியின குட்டி மனுஷங்களின் தலைவர்களிடம் பேசினர். சுரங்கக்காரர்களிடம் இருந்து அவர்களை விடுவிக்கும் திட்டங்களை குட்டி மனுஷங்களில் ஒருவனான லியோவுடன் இணைந்து செயல்படுத்த துவங்கினர். இனி -
பழங்குடியின தலைவர்களில் ஒருவரான கோயாவுடன் ஆலோசித்து, வெளியில் வந்த மாலினியும், ரீனாவும் மரங்கள் நிறைந்த பகுதியின் மறைவான இடத்தில், லியோவை சந்தித்தனர்.
''உங்கள் இனத் தலைவர்களிடம் சொல்ல வேண்டிய விபரங்களை சொல்லி விட்டோம், லியோ. இனி, இந்த சுரங்கக்காரர்களின் தகவல் தொடர்பையும், தீவிலிருந்து அவர்கள் வெளியேற உள்ள வாய்ப்புகளையும் முடக்குவது பற்றி யோசிக்க வேண்டும்...''
''சொல்லு ரீனா... நான் என்ன செய்ய வேண்டும்...''
ஆர்வத்துடன் கேட்டான், லியோ.
''இவர்கள் மொபைல் போனை பயன்படுத்தித்தான் வெளியில் இருப்போருடன் பேசுகின்றனர். இந்த தகவல் தொடர்பை முதலில் முடக்க வேண்டும்...''
''தகவல் தொடர்புக்கு இங்கே ஒரு மொபைல் டவர் இருக்கிறது. அதை உடைத்து விடலாம்...''
லியோ உடனடியாக சொன்னான்.
''அதை உடைத்து விட்டால்...''
''அவர்களால் மொபைல் போனில் பேசிக் கொள்ள முடியாது, அல்லவா...''
''ஆமாம், பேசிக் கொள்ள முடியாது. ஆனால், அதேபோல அந்த டவர் இல்லை என்றால் நாமும், நமக்குள் பேசிக் கொள்ள முடியாதே...''
மாலினி கேள்வி எழுப்பினாள்.
''யோசிக்க வேண்டிய விஷயம் தான்... வேறு என்ன செய்வது...''
சிந்தனையில் ஆழ்ந்தாள் ரீனா.
''அவர்களிடம் இருந்து மொபைல் போனை எடுத்து விட வேண்டும்...''
ரீனா கூறியதும், ''அதை அவர்கள் கையிலேயே தான் வைத்திருப்பர்...'' என்று குறுக்கிட்டான் லியோ.
''கையில் வைத்திருந்தாலும் சார்ஜ் போடுவர், அல்லவா...''
யோசனையுடன் கேட்டாள் ரீனா.
''ஆமாம்... உபகரணங்கள் வைக்கும் கூடாரத்தின் பின்பகுதியில், பேட்டரியுடன் கூடிய சார்ஜர் அமைப்பு இருக்கிறது. அந்த ஒரே இடத்தில் தான், மூன்று பேரும் போனை சார்ஜ் போடுவர். நான் பலமுறை பார்த்திருக்கிறேன்...''
''எப்போது சார்ஜ் போடுகின்றனர் என்பதைக் கவனிக்க வேண்டும்...''
''ஏற்கனவே கவனித்திருக்கிறேன். மதிய நேரத்தில் மொபைல் போனை சார்ஜ் போட்டுவிட்டு தான் அவர்கள் சாப்பிடுவர்...''
தகவல் சொன்னான் லியோ.
''அந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவர்களது மூன்று போனையும் எடுத்து விட முடியுமா...''
சந்தேகத்துடன் கேட்டாள் மாலினி.
''அது என்ன பிரமாதம்... நான் அந்த மொபைல் போன்களை எடுத்து வந்து விடுகிறேன். ஆனால், அவர்கள் துப்பாக்கி வைத்திருக்கின்றனர். நான் எடுக்கும்போது பார்த்தால், ஒரே குண்டில் என்னை காலி செய்து விடுவர்...''
''அப்படியெல்லாம் நடக்காது. அவ்வளவு சுலபத்தில் அவர்கள் துப்பாக்கியை பயன்படுத்த மாட்டார்கள்..'' என்றாள் ரீனா, உறுதியாக.
''ஏன்...''
சந்தேகம் எழுப்பினான் லியோ.
''அவர்கள் இந்தத் தீவில் மிகவும் ரகசியமாகத்தான் தங்கியிருக்கின்றனர். அவர்கள் துப்பாக்கியைப் பயன்படுத்தினால், குண்டு சத்தம் மற்றவர்களின் கவனத்தை ஈர்த்து விடும். அது இவர்களுக்கு மிகப்பெரிய ஆபத்து லியோ...' '
''ஓ... இப்படி ஒரு சிக்கல் இருக்கிறதோ...''
'' சரி, அதை விடு... மொபைல் போன்களை எடுத்து வருவது உன் பொறுப்பு...''
ரீனாவின் திட்டத்திற்கு, உற்சாகமாய் ஒப்புக்கொண்டான் லியோ.
''அடுத்தது, அவர்களது போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் படகு...''
''அது ரொம்பவே பெரிதாக இருக்கும். அதை என்னால் எடுத்து வர முடியாது...'' என்றான் லியோ, கிண்டலாக.
''இதற்கெல்லாம் எனக்கு சிரிப்பு வரவில்லை. அந்தப் படகை அவர்கள் பயன்படுத்த முடியாதபடி தடுக்க வேண்டும்...''
''அவர்கள் படகை நங்கூரம் போட்டு நிறுத்தி விட்டு தீவுக்குள் வந்துவிடுவர். அந்தப் படகில் யாரும் இருப்பதில்லை. பாதுகாப்பு இல்லாமல் தான் அது நிற்கும். அதில் என்ன செய்ய வேண்டும் என்று சொல். நான் செய்கிறேன்...'' என்றான் லியோ.
''அவர்கள் படகைப் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும் என்றால், படகின் மோட்டார் இயங்காதபடி செய்ய வேண்டும்...''
ரீனா சிந்தனையில் ஆழ்ந்தாள்.
''அதற்கு படகின் மோட்டார் தொழில்நுட்பம் தெரிந்த நபர் வேண்டுமே... அப்படி ஒரு நபருக்கு எங்கே போவது...'' என்றாள், மாலினி.
''வேறு ஏதாவது ஐடியா தான் செய்ய வேண்டும். படகில் ஓட்டை போட்டு விடலாமா; தண்ணீர் உள்ளே வந்து படகு மூழ்கி விடும்...''
தன் எண்ணத்தில் தோன்றியதை கூறினான், லியோ.
''அவ்வளவு உறுதியான படகில் ஓட்டை போடுவது எல்லாம் நம்மால் முடியாது. அதற்குப் பதிலாக டீசல் டேங்கில் ஏதாவது செய்து, டீசலை காலி செய்ய முடியுமா என்று பார்க்கலாம்...''
மாற்று திட்டத்தை கூறினாள் மாலினி.
''டீசல் டேங்க் ரொம்ப உறுதியாக இருக்கும். அதில் ஓட்டை போடுவது சாத்தியமில்லாத செயல்... வேணும்னா, இன்ஜினுக்குப் போகிற டீசல் குழாயைக் துண்டித்து விடலாம்...'' என்றான், லியோ.
ஆளாளுக்கு யோசனை கூறினர்.
திடீரென பிரகாசமானாள் மாலினி.
''நம்மிடம் வெடி மருந்து இருக்கிறது. பூமிக்கு அடியில் புதைத்து வைத்திருக்கிறோமே... அதை பயன்படுத்தலாமே...'' என்றாள், மாலினி
''அதை வைத்து படகை தகர்த்து விடலாம் தான். ஆனால், அந்த வெடிச்சத்தம் துப்பாக்கி சுடும் சத்தத்தை விட அதிகமாக இருக்கும். இங்குள்ள அத்தனை தீவுகளில் இருப்போரின் கவனத்தையும் ஈர்க்கும். தேவையற்ற பிரச்னைகளை உருவாக்கும்...''
மாலினியின் யோசனையை நிராகரித்தாள், ரீனா.
''படகின் இன்ஜினில் உள்ள ஒயர்களையும், மோட்டாரின் ஒயர்களையும் வெட்டி விடுவதுதான் எளிதாக இருக்கும்...'' என்றாள், மாலினி.
''நல்ல ஐடியா. அந்த இருவரும் படகை நிறுத்திவிட்டு நகர்ந்ததும், அதன் ஒயர்களை துண்டித்து விடலாம்...''
ரீனா ஒரு முடிவுக்கு வந்தாள்.
- தொடரும்...
நரேஷ் அருண்குமார்

