தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/கற்ற தமிழ் காப்பாற்றும்!

கற்ற தமிழ் காப்பாற்றும்!

கற்ற தமிழ் காப்பாற்றும்!


PUBLISHED ON : ஜன 24, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 24, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மன்னார்குடி, தேசிய உயர்நிலைப் பள்ளியில், 1967ல், 10ம் வகுப்பு சேர்ந்தேன். அதே பள்ளியில், 11ம் வகுப்பும் படித்தேன். இரண்டு ஆண்டுகளும், எனக்கு தமிழாசிரியராக இருந்தவர், எழுத்தாளர் கரிச்சான் குஞ்சு.

வாரத்தில் மூன்று நாள், தமிழ் வகுப்புகள் நடக்கும். முதல் பெஞ்சில் அமர்ந்திருந்த நானும், என் நண்பர்களும் அவரது வகுப்பை கவனிக்க மாட்டோம். அவர், வெற்றிலையை வாயில் மென்றபடி பாடம் நடத்துவதை கிண்டல் செய்வோம்.

எங்கள் தெருவில் தான் அவரும் குடியிருந்தார். ஒருநாள் தெருவில் வந்த அவரை, வீட்டிற்குள் அழைத்து வந்து, என் அப்பா உபசரித்தார். அவரை வழியனுப்பிய பின், அவர் குறித்து பெரிதும் புகழ்ந்து பேசினார். 'அவர் பெரிய எழுத்தாளர்; தமிழ் புலமைமிக்கவர். அவரிடம், நீ தமிழ் படிப்பது மிகவும் புண்ணியம்...' என்றார், என் அப்பா.

'இவ்வளவு நாள் அவரது பெருமையை உணராமல், நண்பர்களோடு சேர்ந்து அவரை புறக்கணித்துவிட்டோமே...' என, வருத்தப்பட்டேன். மறுநாள் அவர் வீட்டிற்கு சென்று, சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தேன். வகுப்பை கவனிக்காமல் இருந்ததற்காக, அவரிடம் மன்னிப்பு கேட்டேன். 'நன்கு படி. கற்ற தமிழ், உன்னை என்றும் காப்பாற்றும்...' என, ஆசிர்வாதம் செய்தார்.

அன்று முதல், அவர் வகுப்பை கூர்ந்து கவனித்த எனக்கு, நல்ல பலன் கிடைத்தது. தமிழ் பாடத்தில், 75 சதவீத மதிப்பெண் பெற்றேன். அவரிடம் கற்றுக்கொண்ட தமிழ் தான், என்னை நுாற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுத வைத்தது. 'நீங்கள் கரிச்சான் குஞ்சு மாணவரா...' என, இலக்கிய நண்பர்கள் கேட்கும் போது, அவர் பெருமையை உணர்ந்து, அவரை மனதார வணங்குகிறேன்.



- ஏ.சீனிவாசன், சென்னை.

தொடர்புக்கு: 94449 58521


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us