
திருவண்ணாமலை மாவட்டம், பெருங்கட்டூர், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், 2009ல், 8ம் வகுப்பு படித்த போது, கணித ஆசிரியராக இருந்தார் தெனாலிராமன். கணக்கு பாடத்தை எளிமையாக சொல்லிக் கொடுப்பார். தேவையான பயிற்சிகள் தந்து மனதில் பதிய வைப்பார்.
அன்று மாதந்திர தேர்வு துவங்கவிருந்தது. தேர்வு பாட அட்டவணையை சரியாக கவனிக்காமல் உடற்கல்வி தேர்வு என எண்ணியபடி சென்றேன். தேர்வு அறைக்கு நுழைந்த பின் தான் கணித பாடத்தேர்வு என அறிந்தேன். எப்படி எதிர்கொள்வது என பதற்றமாக இருந்தது.
இதை கவனித்த கணித ஆசிரியர் அருகே அழைத்து விசாரித்தார். என் கவனக்குறைவை எடுத்துக் கூறினேன். உடனே, 'இதற்கெல்லாம் கவலைப்படலாமா... சொல்லிக் கொடுத்த சூத்திரங்களையும், வழிமுறைகளையும் நினைவுபடுத்தி பதற்றமின்றி எழுது...' என்று கனிவுடன் அறிவுரைத்தார். அதன்படி முயன்று வெற்றிப் பெற்றேன். தொடர்ந்து நன்கு படித்து கல்லுாரியில் பட்டம் பெற்றேன்.
என் வயது 27; இல்லத்தரசியாக உள்ளேன். குடும்ப நிர்வாகத்தில் எந்த சூழ்நிலையையும் எதிர்கொண்டு சரியான முடிவுகளை எடுக்கிறேன். இந்த வழிமுறையில் செயல்பட வழிகாட்டிய பள்ளி கணித ஆசிரியர் தெனாலிராமனை வணங்கி மகிழ்கிறேன்.
- எஸ்.திவ்யா, சென்னை.
தொடர்புக்கு: 86676 50168

