
வேலுார் மாவட்டம், குடியாத்தம், கோபாலபுரம் ஆண்கள் ஆரம்பப் பாடசாலையில், 1972ல், 5ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்...
அன்று, வகுப்பாசிரியர் உபையதுல்லா திடீரென அழைத்தார். உடன் படித்த அப்துல்கரீமுடன் சென்று பார்சல் ஒன்றை அவரது வீட்டில் கொடுத்து வரக் கூறினார். அந்த பணியை முடித்து திரும்பிக் கொண்டிருந்தோம்.
உடன் வந்தவன் வழியில் ஒரு மாட்டு வண்டியின் பின்புறம் தொங்கினான். வண்டி ஓட்டியவர் எச்சரித்தும் கேட்கவில்லை. சாட்டையால், 'சுளீர்' என ஒரு அறை கொடுத்தார். அதை வாங்கியபடி வலியுடன் மவுனமாக வந்தான்.
வகுப்பறையில் நுழைந்ததும், 'ஐயா... மாட்டு வண்டியில் தொங்கச் சொல்லி வண்டிக்காரரிடம் அடி வாங்கித் தந்தான்...' என போட்டுக் கொடுத்தான். அதை நம்பியதால், பெஞ்சில் நிற்க வைத்து தண்டித்தார் ஆசிரியர். மனதில், 'பொய்யாய் சொன்னதை நம்பி விட்டாரே' என்ற வருத்தம் ஆழமாக பதிந்தது.
எனக்கு, 62 வயதாகிறது. மத்திய கிழக்கு நாடு ஒன்றில் பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றேன். பள்ளியில் நிகழ்ந்த அந்த சம்பவம் வடுவாக பதிந்துள்ளது. யார், எது கூறினாலும் ஆராய்ந்து, உண்மை அறிந்து செயல்படும் பக்குவத்தை வளர்க்க அது உதவியுள்ளது.
- மலர்மதி, சென்னை.
தொடர்புக்கு: 86674 17874