
புதுக்கோட்டை, ராணியார் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில், 1969ல், 10ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்...
காலாண்டு தமிழ்பாட தேர்வில், 'நான் விரும்பும் கவிஞர்' என்ற தலைப்பில் கட்டுரை எழுத கேள்வி அமைந்திருந்தது. எனக்கு மொழி மீது ஆர்வம் அதிகம். எதையும் புதுமையாக செய்ய விரும்புவேன். எனவே, கவிஞர் கண்ணதாசன் எழுதிய திரையிசைப் பாடல்களில் நயத்தை விளக்கி எழுதியிருந்தேன்.
தேர்வு முடிந்து தோழியருடன் கலந்துரையாடிய போது, 'சினிமா பாட்டுக்கு மார்க் கிடைக்காது; திட்டுதான் கிடைக்கும்...' என பயமுறுத்தினர்.
கண்டிப்பு மிக்க தமிழாசிரியை சுந்தராம்பாளை எண்ணிய போது, பயம் மேலும் அதிகரித்தது. திருத்திய விடைத்தாளுக்காக மிரட்சியுடன் காத்திருந்தேன்.
அன்று, விடைத்தாளை காட்டி, 'தேர்வில் இப்போது வாழும் கவிஞர்களின் எழுத்தை மதிப்பீடு செய்யக்கூடாது. பழைய கவிதைகளை தான் திறனாய்வு செய்ய வேண்டும். எனவே புதிதாக ஒரு கட்டுரையை நாளை காலைக்குள் தயார் செய்...' என கூறினார் தமிழாசிரியை.
அதை ஏற்று, பாவேந்தர் பாரதிதாசன் கவிதை நயம் பற்றி எழுதி கொடுத்தேன். வாசித்தவுடன், 'நீ எழுதிய முதல் கட்டுரையும் அருமை; இதுவும் சிறப்பாக உள்ளது. முயற்சி செய்தால் எழுத்துலகில் சாதிக்க முடியும். தொடர்ந்து பயிற்சி செய்...' என வாழ்த்தினார். அதை மந்திரமாக ஏற்றேன்.
எனக்கு, 69 வயதாகிறது. தமிழில், கதை, கட்டுரைகள் எழுதி வருகிறேன். பள்ளி தேர்வில் என் அறியாமையை சுட்டிக்காட்டி தண்டிக்காமல், திறனை மெச்சிய அந்த தமிழாசிரியை செயல் தான், என்னை எழுத்தாளராக்கியுள்ளது. அவரை நாளும் வணங்கி மகிழ்கிறேன்.
- சியாமளா வாசுதேவன், சென்னை.
தொடர்புக்கு: 94436 92744