
விழுப்புரம் மாவட்டம், அனந்தபுரம், அரசு உயர்நிலைப் பள்ளியில், 1965ல் படித்த போது தாயார் மறைவால் அமைதி இழந்தேன். ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்று மன உளைச்சலுக்கு உள்ளானேன். அடுத்த ஆண்டு சிதம்பரம், நந்தனார் ஆண்கள் பள்ளியில், 10ம் வகுப்பில் சேர்த்தார் தந்தை.
அங்கு கட்டாய பாடமாக இருந்தது ஹிந்தி மொழி. முதல் நாள் வகுப்பில் பண்டிட் சாரங்கபாணி சொற்களை படிக்க கூறினார். சரியாக படிக்காதவர்களை, சட்டை காலரை பிடித்து துாக்கி கழுத்துப் பட்டையில் அறை விட்டார். பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தேன்.
என்முறை வந்த போது, 'முந்தைய பள்ளியில், ஹிந்தி கற்றுத் தரவில்லை. முயன்று பிழையின்றி ஒப்பிக்க கால அவகாசம் தாருங்கள்...' என கெஞ்சியதை ஏற்றார். வகுப்பு தலைவன் அய்யாக்கண்ணு உதவியால், ஒரே இரவில் எழுத்துக்களை வாசிக்கக் கற்றேன்.
மறுநாள் வகுப்பில் எழுத்துக் கூட்டி வாசித்தேன். சரியாக படிக்காத மற்றொருவனிடம் என்னை சுட்டிக் காட்டி, 'நேற்று வந்தவன் ஒரே நாளில் பயின்றுள்ளான். உனக்கு இன்னுமா தெரியவில்லை...' என கண்டித்தார். நன்றாக கற்று ஹிந்தி கவிதை போட்டிகளில் பங்கேற்று தேறினேன்.
தற்போது, என் வயது, 73; மின்வாரியத்தில் பணி செய்து ஓய்வு பெற்றேன். மனவளக்கலை போராசிரியராகவும், நுகர்வோர் சங்கத்திலும் சேவைகள் செய்து வருகிறேன். கூடுதலாக ஒரு மொழியை கற்க துாண்டிய ஆசிரியரை நன்றியுடன் போற்றுகிறேன்.
- துரை.கருணாநிதி, விழுப்புரம்.
தொடர்புக்கு: 84285 32037