PUBLISHED ON : மே 23, 2026

திருவாரூர் மாவட்டம், திருவீழிமிழலை அரசு நடுநிலை பள்ளியில், 8ம் வகுப்பு முடித்து, விஷ்ணுபுரம் ஜார்ஜ் உயர்நிலைப் பள்ளியில், 1988ல், 9ம் வகுப்பு சேர்ந்தேன். பள்ளி ஆண்டு விழாவையொட்டி, பல்வேறு போட்டிகளில் பங்கேற்க கூறினர். என் வகுப்பில் நான் மட்டும், பாட்டு போட்டிக்கு பெயர் கொடுத்தேன்.
9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்கள் என, 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போட்டியன்று, பதற்றத்துக்கு நடுவே பாடினேன். எனக்கு பரிசு கிடைக்கவில்லை என்பதால், வகுப்பறையில் கேலி செய்தனர். அச்சமயம் அங்கு வந்த, தமிழாசிரியர் சீனிவாசன், 'நீங்கள், 51 பேர் இருந்து என்ன பிரயோஜனம்... இவன் ஒருவன் மட்டும் போட்டியில் கலந்து கொள்ளவில்லை என்றால், போட்டிக்கான- பட்டியலில் நம் வகுப்பு இருந்திருக்காது. முயற்சி செய்து தோற்கலாம்; முயற்சி செய்யாதவர்கள் அதற்கு வெட்கப்பட வேண்டும்...' என்று கூறி, மாணவர்களை, கைத்தட்டி உற்சாகப்படுத்த கூறினார்.
பின் என்னை தனியே அழைத்து, 'அடுத்த ஆண்டு போட்டியில் வெற்றி பெற முயற்சி செய்...' என்றார். அடுத்த ஆண்டில் மூன்றாவது மாணவனாக நான் பாடி முடித்ததும், மற்ற மாணவர்கள் யாருமே பாட முன் வரவில்லை. என் பாடலுக்கு கரவொலி எழுந்தது. தமிழாசிரியர் என்னை கட்டி தழுவி, 'முதல் பரிசு உனக்கு தான்...' என்று பாராட்டினார்.
தற்போது என் வயது, 52-. மருத்துவக் கல்லுாரி ஒன்றில், மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றுகிறேன்; திரைப்பட பின்னணி பாடகராக, இசை அமைப்பாளராக, அகில இந்திய வானொலியில் அங்கீகரிக்கப்பட்ட கலைஞராகவும் உள்ளேன். எனக்குள் இருந்த இசை திறமையை வெளிக் கொண்டு வந்து, இசைத்துறையில் பிடிப்பு ஏற்படவும், அதில் பயணிப்பதற்கும் அடித்தளமிட்ட தமிழாசிரியர் சீனிவாசனுக்கு, என்றென்றும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.
வெ.கிருஷ்ணமூர்த்தி, புதுச்சேரி.தொடர்புக்கு: 99529 99933
