தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/நாடோடியின் சாகசங்கள்! (2)

நாடோடியின் சாகசங்கள்! (2)

நாடோடியின் சாகசங்கள்! (2)


PUBLISHED ON : பிப் 28, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 28, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முன்கதை: ஊர், ஊராக செல்லும் நாடோடி, ஆலமரத்தின் நிழலில் இளைப்பாறினான். அதற்கு நாடோடி நன்றி தெரிவித்ததால், ஆலமரம் மகிழ்ந்தது. 'அழைக்கும் போதெல்லாம், ஒரு தேவதை தோன்றி உதவி செய்யும்' என்று, வரம் அளித்தது. திடீரென ஆலமரம் தீ பற்றி எரிந்ததால், உடனே தேவதையை அழைத்து, தீயை அணைத்தான் நாடோடி. பின், பயணத்தை தொடர்ந்தான். இனி -

ஏ ழு நாட்கள் பயணம் செய்து, ஒரு நகரத்தை அடைந்தான், நாடோடி.

ரத்னபுரி நாட்டின் தலைநகர் அது. அந்த நகரமே செல்வச் செழிப்பாகக் காணப்பட்டது. மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தனர். அங்கு ஒரு பெரிய அரண்மனையும் இருந்தது.

வழியில் தென்பட்டவனிடம், 'இந்த நகரத்தின் பெயர் என்ன...' என்று கேட்டான், நாடோடி.

'இந்த நகரத்திற்குப் புதியவனா...' என்றான், வழிப்போக்கன்.

'ஆம்...' என்று கூறிய நாடோடியிடம், 'உன் பெயர் என்ன...' என்றான், வழிப்போக்கன்.

'தெரியாது...'

பதில் கூறிய நாடோடியை வியப்புடன் பார்த்தான், வழிப்போக்கன்.

'என்ன, தெரியாதா...'

'ஆம். எனக்கு யாரும் பெயர் வைக்கவில்லை. நான் பல ஊர்களைச் சுற்றி வருபவன். என்னை எல்லாரும் நாடோடி என்று அழைப்பர்... இந்த நகரில் சில நாட்கள் தங்கியிருக்க விரும்புகிறேன். இதற்கு யாரிடமாவது அனுமதி வாங்க வேண்டுமா...' என்றான், நாடோடி.

'அனுமதியெல்லாம் தேவையில்லை. தாராளமாகத் தங்கலாம். ஆனால், இங்கு இருப்போருக்கு எதிராக எந்த தீய செயலையும் செய்யக் கூடாது. அப்படிச் செய்தால் கடுமையான தண்டனை கிடைக்கும்...' என்று எச்சரித்தான், வழிப்போக்கன்.

'தீய செயலில் எப்போதும் ஈடுபட மாட்டேன்' எனக்கூறி, வழிப்போக்கனிடம் விடை பெற்றான், நாடோடி.

ஒ ரு நாள்-

நாட்டின் மன்னர் நந்திவர்மனின் அறிவிப்பை, காவலர்கள் தண்டோரா போட்டு தெரிவித்தனர்.

'மன்னருக்கு, குதிரையில் சவாரி செய்து இந்த நாட்டைச் சுற்றி வருவது சிரமமாக இருக்கிறது... அவர் பறந்து சென்று, நாட்டை சுற்றி பார்க்கும் வகையில் ஒரு கருவியை செய்து கொடுத்தால், ஒரு லட்சம் வராகன் சன்மானம் கொடுக்கப்படும்...' என்று, அறிவிக்கப்பட்டது.

ஒரு லட்சம் வராகன் என்பது, மிகப்பெரிய தொகை. ரத்னபுரி மக்களில் பலர், பறக்கும் கருவி குறித்து தீவிரமாக பேசினர். யாருக்கும் அப்படி ஒரு கருவியை, எப்படித் தயாரிப்பது என்று தெரியவில்லை.

நாடோடியும், இந்த விஷயத்தை அறிந்தான். அவனுக்கு ஆலமரம் கொடுத்த வரம், நினைவுக்கு வந்தது.

'தேவதையே வா...' என்று அழைத்தான்.

தேவதை அவன் முன் தோன்றியது. 'என்ன உதவி வேண்டும்...' என்று கேட்டது.

'பறப்பதற்கு ஒரு கருவி வேண்டும். உன்னால் அதை செய்து தரமுடியுமா...' என்றான், நாடோடி.

'இதோ, ஒரு நொடியில் தருகிறேன்...' என்றது, தேவதை.

அதன் கைகளை நீட்ட, தங்கத்தால் நெய்யப்பட்ட கம்பளம் வந்தது.

'இது, தங்கத்தாலான பறக்கும் கம்பளம். இதை தரையில் விரித்து, அதன் மேல் அமர்ந்து 'பற' என்றால், பறக்கும். நாம் விரும்பும் இடத்திற்கு செல்லலாம். 'இறங்கு' என்றால் தரையில் இறங்கும்...' என்று விளக்கியது, தேவதை.

தேவதையிடமிருந்து அந்த கம்பளத்தைப் பெற்றுக் கொண்டான், நாடோடி.

அந்த கம்பளம் இரண்டு பேர் அமரும் அளவிற்கு, அகலமாக இருந்தது. அதை சோதிக்க நினைத்தான், நாடோடி.

அதை மறைவான ஓர் இடத்திற்கு எடுத்துச் சென்று, அதன் மீது உட்கார்ந்து கொண்டான். 'பற...' என்று நாடோடி கூறியதும், தரையில் இருந்து எழும்பி, பறந்தது கம்பளம். சற்று துாரம் சென்று திரும்பி, 'இறங்கு...' என்றான். உடனே தரையில் இறங்கியது, கம்பளம்.

தங்கக் கம்பளத்தை சுருட்டி எடுத்துக் கொண்டு, அரண்மனைக்குச் சென்றான், நாடோடி. 'மன்னரை காண வேண்டும்...' என்றான்.

அவனுடைய உருவத்தைப் பார்த்த வாயில்காவலர்கள், அரண்மனைக்குள் அனுமதிக்க மறுத்தனர்.

தான் கொண்டு வந்த கம்பளத்தை தரையில் விரித்து, அதில் அமர்ந்தான், நாடோடி.

'பற...' என்றான்.

நாடோடியுடன், அரண்மனைக்குள் பறந்தது கம்பளம்.

அதைப்பார்த்து, அரண்மனைக் காவலர்கள் திகைத்து நின்றனர்.

அரண்மனை வளாகத்திற்குள் சென்று, கம்பளத்தில் இருந்து இறங்கினான், நாடோடி. அவனை சுற்றி வளைத்த வீரர்கள், கைது செய்து மன்னரிடம் அழைத்து சென்றனர்.

'மன்னா... இவன் அனுமதியின்றி அரண்மனை வளாகத்திற்குள் வந்துள்ளான்...' என்று, காவலர்கள் குற்றம்சாட்டினர்.

தன்னை மன்னர், தண்டித்து விடுவாரோ என்று பயந்து நின்றான், நாடோடி.



- தொடரும்...

- ஆர்.வி.பதி


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us