தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/நாடோடியின் சாகசங்கள்! (11)

நாடோடியின் சாகசங்கள்! (11)

நாடோடியின் சாகசங்கள்! (11)


PUBLISHED ON : மே 02, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 02, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முன்கதை: ஊர், ஊராக செல்லும் நாடோடிக்கு, 'அழைக்கும் போதெல்லாம், ஒரு தேவதை தோன்றி உதவி செய்யும்' என்ற, வரம் கிடைத்தது. அணிந்தால் மறைய வைக்கும் ஒரு மாய மோதிரமும் கிடைத்தது. சிதிலமடைந்த மலைக்கோட்டையில் சிறை வைக்கப்பட்டு இருந்த மரகத நாட்டு மன்னருக்கு மாயமோதிரத்தை கொடுத்து, அங்கிருந்து விடுவித்தான். மன்னர் ஒளித்து வைத்த மாயமோதிரத்தை, தேவதையின் உதவியால் நாடோடி மீட்டான். இனி -

நா டோடி வழக்கம் போல பயணத்தைத் தொடர்ந்தான். வழியில் ஒரு பெரிய கிணற்றைப் பார்த்தான்.

அது, வழக்கத்தை விட சற்று பெரிய கிணறாக இருந்தது. பராமரிப்பில்லாத, மிகவும் பழைய கிணறு. அதில் தண்ணீர் நிறைந்து, கண்ணாடி போல பிரதிபலித்தது. சுவரைப் பிடித்தபடி, கிணறை எட்டிப் பார்த்த நாடோடி, அதிர்ச்சி அடைந்தான்.

கிணற்றில் அவன் முகம் தெரிவதற்கு பதிலாக, ஒரு ராட்சத முகம் தோற்றமளித்தது. அதிர்ச்சி அடைந்து, சட்டென பின் வாங்கினான்.

அப்போது, கிணற்றுக்குள் இருந்து ஒரு குரல் கேட்டது.

'ஐயா, எனக்கு உதவி செய்யுங்கள்... உங்களால் மட்டும் தான் என்னை காப்பாற்ற முடியும்...' என்று, அந்த குரல் ஒலித்தது.

நாடோடி திடுக்கிட்டான்.

மீண்டும் தைரியத்தை வரவழைத்து, கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தான்.

அப்போதும், அவன் உருவத்திற்கு பதிலாக ராட்சத உருவம் தெரிந்தது.

நாடோடியிடம் பேசியதும், அந்த ராட்சத உருவம் தான்.

'நான் தான் உங்களிடம் உதவி கேட்டேன். என்னைக் கண்டு பயப்பட வேண்டாம்...'

கிணற்றுக்குள் இருந்து அந்த உருவம் பேசியது.

'யார் நீ... எதற்காக, இந்த கிணற்றுக்குள் இருக்கிறாய்...' என்றான், நாடோடி.

'நான் ஒரு கந்தர்வன். முன்னொரு காலத்தில், ஒரு முனிவரால் சபிக்கப்பட்டு, இந்த கிணற்றில் ராட்சதனாக முடங்கியிருக்கிறேன். முனிவரிடம் சாபவிமோசனம் கேட்டபோது, 'இந்த கிணற்றில் எட்டிப்பார்ப்பவரின் சுய உருவம் தெரியாமல், உன் உருவம் தெரிந்தால், அவரே சாபவிமோசனம் அளிப்பார்' என்றார்...

'கிணற்றுக்குள் நீங்கள் எட்டிப் பார்த்த போது, உங்களின் உருவம் தெரியாமல், என் உருவத்தை கண்டு திடுக்கிட்டதை பார்த்தேன். எனவே, நீங்கள் தான் எனக்கு சாபவிமோசனம் அளிக்க வேண்டும்...' என்று கெஞ்சியது, அந்த ராட்சத உருவம்.

யோசித்தான் நாடோடி.

'நான் என்ன செய்ய வேண்டும், சொல்... முடியுமா என்று யோசிக்கிறேன்...' என்றான், நாடோடி.

'அருகே ஒரு மலை தெரிகிறதல்லவா... அதன் உச்சிக்குச் சென்றால், மலை முழுவதும் உள்ள செடிகள் சிவப்புநிற மலர்களுடன் காணப்படும். அதில், ஐந்து செடிகள் மட்டும் வெவ்வேறு நிற மலர்களோடு இருக்கும். அந்த மலர்களை எடுத்து வந்தால், நான் சாபவிமோசனம் அடைவேன்...' என்றது, அந்த ராட்சத உருவம்.

'இது ஒரு பெரிய விஷயமா...' என்று நாடோடி நினைத்தான்.

ஆனால், ராட்சத உருவத்தின் குரல் தொடர்ந்து ஒலித்தது...

'அந்த மலர்களை பறித்து, அந்திசாயும் நேரத்திற்குள் மலையை விட்டு கீழிறங்கி விட வேண்டும். இல்லாவிட்டால், மலையிலிருந்து இறங்கவே முடியாமல் போய்விடும்...' என்று, புதிய நிபந்தனையை கூறியது.

'நாம் எதற்காக இவ்வளவு சிரமப்பட்டு இதற்கு உதவ வேண்டும்' என்று யோசித்தான்.

'யோசிக்க வேண்டாம்... உங்களால் மட்டுமே என்னைக் காப்பாற்ற முடியும். பல நுாறு ஆண்டுகளாக நான் இந்த கிணற்றுக்குள்ளேயே இருக்கிறேன். என்னைக் காப்பாற்றுங்கள்...'

அழுகுரலில் கெஞ்சியது, ராட்சத உருவம்.

நாடோடிக்கு இரக்கம் பிறந்தது.

'சரி, முயற்சிக்கிறேன்...' என்றான், நாடோடி.

'விரைவாக புறப்பட்டு மலைக்குச் செல்லுங்கள்... ஐந்து செடிகளையும் கண்டுபிடித்து அந்திசாயும் நேரத்திற்குள் திரும்பி விடுங்கள்... பிறகு என்ன செய்ய வேண்டுமெனக் கூறுகிறேன்...' என்றது, ராட்சத உருவம்.

நாடோடி வேகமாகப் புறப்பட்டான்.

மலைமீது மிகவும் சிரமப்பட்டு ஏறினான். உச்சிப்பொழுதில், மலையுச்சியை அடைந்தான்.

அங்கு சிவப்பு நிற மலர்களுடன் பல்லாயிரக்கணக்கான செடிகள் பூத்து குலுங்கின. அவற்றில், வேறு நிற மலர்களை தேடுவது சிரமமாக இருந்தது.

பொழுது வேகமாக ஓடியது. மாலை வரை ஊதா, மஞ்சள், பச்சை என்ற மூன்று நிற மலர்களுடன் இருந்த செடிகளைக் கண்டுபிடித்து, பறித்து வைத்திருந்தான்.

இன்னும் சிறிது நேரத்தில் அந்திசாயப் போகிறது. அதற்குள் இன்னும் இரண்டு வண்ணங்கள் உடைய மலர்களின் செடிகளைக் கண்டுபிடித்து, மலையிலிருந்து இறங்கியாக வேண்டும்.

அப்போது நாடோடிக்கு பயம் தோன்றியது. அவன் இதயம், 'திக், திக்' என்று அடித்துக் கொண்டது.

- தொடரும்...

- ஆர்.வி. பதி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us