தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/நாடோடியின் சாகசங்கள்! (12)

நாடோடியின் சாகசங்கள்! (12)

நாடோடியின் சாகசங்கள்! (12)


PUBLISHED ON : மே 09, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 09, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முன்கதை: ஊர், ஊராக செல்லும் நாடோடிக்கு, 'அழைக்கும் போதெல்லாம், ஒரு தேவதை தோன்றி உதவி செய்யும்' என்ற, வரம் கிடைத்தது. அணிந்தால் மறைய வைக்கும் ஒரு மாய மோதிரமும் கிடைத்தது. பயணத்தின் போது ஒரு கிணற்றை பார்த்தான், நாடோடி. அதில் முடங்கியிருந்த ராட்சத உருவத்திற்கு சாப விமோசனம் அளிக்க, ஐந்து நிறங்களில் மலர் செடிகளை பறித்து வர மலைக்கு சென்றான். நேரம் ஓடிக் கொண்டிருந்தது; நாடோடிக்கு பயம் ஏற்பட்டது. இனி -

வேக வேகமாக, மற்ற இரண்டு செடிகளை தேட துவங்கினான், நாடோடி.

அதோ, ஒரு செடி கிடைத்து விட்டது. இன்னும் ஒரே ஒரு செடி தான் பாக்கி.

சற்று நேரத்தில் அந்தி சாய்ந்து, இருட்டத் துவங்கிவிடும். வேக வேகமாக இங்கும் அங்கும் அலைந்து, ஐந்தாவது செடியைத் தேடிக் கொண்டிருந்தான், நாடோடி.

அவன் மனதில் ஒரு வித பயம் தோன்றியது. அந்த ஐந்தாவது செடி கிடைக்காமல் போனால், மலையில் இருந்து இறங்க முடியாது என்ற நினைப்பே, அவனுடைய பயத்திற்கு காரணம்.

நல்லவேளையாக, ஐந்தாவது செடி அவன் கண்களில் பட்டது. உடனே பாய்ந்து சென்று அந்த செடியைப் பிடுங்கி, பத்திரப்படுத்திக் கொண்டான். மின்னல் வேகத்தில் மலையிலிருந்து இறங்கத் துவங்கினான்.

இப்போது அவன் மனதில் நம்பிக்கை பிறந்தது .

சில மணி நேரத்தில், மலை அடிவாரத்தை அடைந்தான்.

அங்கே, தான் எடுத்து வந்திருந்த ஐந்து செடிகளுடன் அமர்ந்து, சற்று நேரம் ஓய்வெடுத்தான்.

பின், அங்கிருந்து வேகமாக நடக்கத் துவங்கி, கிணற்றை அடைந்தான்.

நாடோடி செடிகளுடன் வந்ததை அறிந்த ராட்சதன், பெருமகிழ்ச்சி அடைந்தான்.

'மிக்க நன்றி. அதோ, அங்கே ஒரு கோவில் தெரிகிறது அல்லவா... அங்குள்ள நந்தவனத்தில் இந்த ஐந்து செடிகளையும் நட்டு, தண்ணீர் ஊற்றி வரவேண்டும்... பிறகு என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறேன்...' என்றது, ராட்சதனின் குரல்.

கோவிலுக்கு விரைந்த நாடோடி, அங்குள்ள நந்தவனத்தைக் கண்டுபிடித்து, ஐந்து செடிகளையும் நட்டு, தண்ணீர் ஊற்றினான். செடிகளைச் சுற்றி பாதுகாப்பிற்காக ஒரு வேலியும் அமைத்தான்.

பின், மீண்டும் கிணற்றை அடைந்தான்.

கிணற்றுக்குள் இந்த ராட்சதனின் குரல் ஒலித்தது...

'நான் மீண்டும் சுயஉருவத்தைப் பெற்று விடுவேன் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இங்கேயே சில நாட்கள் தங்கியிருந்து, அந்த செடிகளை வளர்த்து, அதில் புதிதாகப் பூக்கும் ஐந்து நிறப்பூக்களையும் எடுத்து வந்து இந்த கிணற்றிற்குள் போட்டால், எனக்கு சாப விமோசனம் கிடைக்கும். நான் சுய உருவத்தை அடைந்து விடுவேன்...' என்றது, ராட்சதனின் குரல்.

'என்ன... இன்னும் சில நாட்கள் இங்கேயே தங்க வேண்டுமா... இதை ஏன் முன்பே என்னிடம் கூறவில்லை. என்னால் இங்கே தங்க முடியாது...' என்றான், நாடோடி.

'நண்பரே... எனக்காக நீங்கள் இந்த உதவியைச் செய்து தான் ஆக வேண்டும். இவ்வளவு சிரமப்பட்ட நீங்கள், இன்னும் சில நாட்கள் ஒதுக்கி, எனக்கு உதவி செய்ய கூடாதா...' என்று, கெஞ்சியது, ராட்சதனின் குரல்.

நாடோடிக்கு மீண்டும் இரக்கம் பிறந்தது.

'சரி, சரி... உனக்கு உதவுகிறேன்...' என்றான், நாடோடி.

கிணற்றுக்கு அருகிலேயே தங்க வசதி செய்து கொண்டான். தினமும் காலை நேரத்தில், கோவிலுக்கு சென்று, அங்குள்ள நந்தவனத்தில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிப் பாதுகாத்து வந்தான்.

இப்படியே, ஐந்து நாட்கள் கடந்தன.

ஆறாவது நாள், ஐந்து செடிகளிலும் வண்ணப் பூக்கள் பூத்திருந்தன.

அதைப் பார்த்ததும், உடனே கிணற்றிற்கு திரும்பினான், நாடோடி. கிணற்றை எட்டிப் பார்த்து, ஐந்து செடிகளிலும் புதிய பூக்கள் பூத்த விஷயத்தைத் தெரிவித்தான்.

இதைக் கேட்டதும், 'அப்படியா...' என்று, ராட்சதனின் குரல் மகிழ்ச்சி பொங்க ஒலித்தது.

'உடனே அங்கே சென்று, ஐந்து செடிகளில் இருந்தும் ஒரு பூவைப் பறித்து, ஐந்து வண்ண பூக்களையும், இந்த கிணற்றில் எடுத்து வந்து போடுங்கள்...' என்றது, ராட்சதனின் குரல்.

நாடோடி வேகமாக கோவிலுக்குச் சென்றான்.

நந்தவனத்தில் இருந்த ஐந்து செடிகளிலிருந்தும், ஒவ்வொரு பூவைப் பறித்தான். ஐந்து வண்ண பூக்களையும், பத்திரமாக எடுத்து, கிணற்றுக்கு திரும்பினான்.

கிணற்றை எட்டிப்பார்த்து, ஒவ்வொரு பூவாக உள்ளே போட்டான்.

சற்றுநேரம் அமைதியாக இருந்த அந்த கிணற்றில், திடீரென பெரும்புகை தோன்றியது.

ஆளையே மறைக்கும் அளவுக்கு எழுந்த புகை மண்டலத்தை பார்த்து, நாடோடி திகைத்தான்.



- தொடரும்...

- ஆர்.வி.பதி


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us