தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/நாடோடியின் சாகசங்கள்! (13)

நாடோடியின் சாகசங்கள்! (13)

நாடோடியின் சாகசங்கள்! (13)


PUBLISHED ON : மே 16, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 16, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முன்கதை: ஊர், ஊராக செல்லும் நாடோடிக்கு, 'அழைக்கும் போதெல்லாம், ஒரு தேவதை தோன்றி உதவி செய்யும்' என்ற, வரம் கிடைத்தது. அணிந்தால் மறைய வைக்கும் ஒரு மாய மோதிரமும் கிடைத்தது. பயணத்தின் போது தென்பட்ட ஒரு கிணற்றை பார்த்தான், நாடோடி. அதில் முடங்கியிருந்த ராட்சத உருவத்திற்கு சாப விமோசனம் அளிக்க, கிணற்றுக்குள் ஐந்து நிறங்களில் உள்ள பூக்களை போட்டான். உடனே கிணற்றில் இருந்து பெரும் புகை எழுந்தது. இனி -

பெரும்புகையிலிருந்து, ஓர் அழகான கந்தர்வ இளைஞன் தோன்றினான்.

அவனைக் கண்ட நாடோடி, பிரமித்துப் போனான். அப்படி ஓர் அழகான இளைஞனை, அவன் இதுவரை கண்டதில்லை.

'மிக்க நன்றி, நண்பரே... எனக்கு சாப விமோசனம் கொடுத்த உன்னை வணங்குகிறேன்...' என்று, தலை வணங்கி கூறினான், கந்தர்வ இளைஞன்.

மகிழ்ச்சியிலும், வியப்பிலும் வாயடைத்து நின்றான், நாடோடி.

'உனக்கு ஒரு வரத்தை நான் தருகிறேன். அதன்படி, நீ இந்த கணத்திலிருந்து நினைத்த உருவத்தை அடையலாம்; மீண்டும் சுயஉருவத்திற்குத் திரும்பலாம்...' என்றான், கந்தர்வ இளைஞன்.

'நான், என் உலகிற்குப் புறப்படுகிறேன்...' என்று கூறி, நாடோடியிடம் விடை பெற்ற அந்த கந்தர்வன், விண்ணில் பறந்து, மறைந்து போனான்.

இந்த புதிய அனுபவம், நாடோடிக்கு வியப்பாக இருந்தது.

சற்று நேரம் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு, பயணத்தைத் தொடர்ந்தான், நாடோடி.

வழியில், ஓர் அழகான பெரிய நீர்வீழ்ச்சியைக் கண்டான். நீர்வீழ்ச்சியிலிருந்து கொட்டும் நீர், ஆறாக வடிவெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. களைப்பு நீங்க நீராடினான், நாடோடி.

நீராடி கரை திரும்பிய போது, தன் காலை ஏதோ பிடித்து இழுப்பதைப் போல உணர்ந்தான், நாடோடி. உதறிப் பார்த்தான்; பிடி இறுகுவதை உணர்ந்தான்.

அப்போது தான் தன் காலைப் பிடித்து இழுப்பது, ஒரு முதலை என்பதை உணர்ந்தான்.

உடனே, கந்தர்வன் கொடுத்த வரம் நினைவுக்கு வந்தது.

ஒரு சிறிய மீனாக மாற வேண்டும் என்று, மனதிற்குள் நினைத்தான், நாடோடி. உடனே, அவன் ஒரு மீனாக மாறி, முதலையின் வாயிலிருந்து வெளியே வந்தான்.

மீண்டும் சுய உருவத்தை அடைய வேண்டும் என்று நினைத்தான். உடனே சுயரூபம் பெற்றான், நாடோடி.

இந்த அனுபவம், அவனுக்கு மிகவும் வியப்பாக இருந்தது.

பிறருக்கு தன்னலம் கருதாது செய்யும் உதவியின் பயனை, அவன் இன்று அனுபவப்பூர்வமாக உணர்ந்தான்.

கரையில் வைத்திருந்த உடைகளை அணிந்து, அங்கிருந்து புறப்பட்டான். நடந்தவற்றையெல்லாம் நினைத்துப் பார்த்து வியந்தபடி, நடைபயணத்தைத் தொடர்ந்தான்.

இரண்டு நாள் பயணத்தில், ஒரு ஊரை அடைந்தான். அந்த ஊரின் எல்லையில் ஒரு பெரிய நீர்நிலை இருந்தது. எதிரில் ஒல்லியான தேகத்தோடு, ஒருவன் முதுகில் மிகப்பெரிய துணி மூட்டையை சுமந்து வந்தான்.

'இவ்வளவு பெரிய மூட்டையை முதுகில் சுமந்து வருவானேன். பொதி சுமக்கும் கழுதையை பயன்படுத்தக் கூடாதா...' என்று, பரிதாபப்பட்டான், நாடோடி.

அந்த ஒல்லி மனிதன், முதுகில் இருந்த துணிமூட்டையை கஷ்டப்பட்டு ஆற்றின் கரையில் இறக்கி வைத்தான்.

'இவ்வளவு பெரிய மூட்டையை துாக்க முடியாமல், துாக்கிட்டு வர்றீங்களே... ஒரு கழுதை கிடைக்கவில்லையா...'

ஒல்லிமனிதனிடம் பேச்சு கொடுத்தான், நாடோடி.

இயலாமையில் சற்று நேரம் மவுனமாக இருந்த ஒல்லி மனிதன், 'உங்களுக்கு தான், நான் மனுஷன். என் முதலாளிக்கு நானே ஒரு கழுதை தான்...' என்றான், விரக்தியாக.

'என்ன சொல்றீங்க...' என, அதிர்ச்சியடைந்தான், நாடோடி.

பொதி சுமந்து வந்த ஒல்லி மனிதன், தன் கதையை விவரித்தான்...

'இந்த ஊர் தனவந்தர் கண்ணாயிரம், என் முதலாளி. 'கருமி கண்ணாயிரம்'ன்னு சொன்னா எல்லாருக்கும் தெரியும்... அவரிடம், மூன்று பேர் அடிமை போல வேலை பார்க்கிறோம். கழுதை வாங்கினா, அதுக்கு தீனி போடணும், பராமரிக்கணும்; நிறைய செலவாகும். அதனால், எங்களையே எல்லாத்துக்கும் பயன்படுத்திக்கிறாரு. எங்களையே, 'கழுதை'ன்னு தான், அவர் கூப்பிடுவார்...' என்று வேதனையுடன் கூறினான், ஒல்லி மனிதன்.

'கூலி எவ்வளவு தர்றார்...'

ஒல்லி மனிதனிடம் விசாரித்தான், நாடோடி.

'மூணு வேளை சோறு போடுறாரு... அதுவும் மீந்து போன பழைய சோறு தான்...'

ஒல்லி மனிதனின் குரல் கம்மியது.

'ரொம்ப அநியாயமா இருக்கே...' என்று, கோபப்பட்டான், நாடோடி.

- தொடரும்...

- ஆர்.வி. பதி


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us