
பள்ளியில் 6ம் வகுப்பு படித்தனர் பாலு, மாதவன், மாணிக்கம். மூவரும் உயிர் தோழர்கள். ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள். படிப்பிலும் கெட்டிக்காரர்கள்.
அன்று மாலை பள்ளியிலிருந்து திரும்பிய போது, ''ஒரு நாய்க்குட்டியை வளர்க்கிறேன். தீனி போட்டால், வாலை ஆட்டியபடி வரும். அதனுடன் பொழுதை கழித்து பின் வேலையை பார்ப்பேன்...'' என்றான் பாலு.
அதற்கு பதிலாக, ''பூனைக் குட்டி ஒன்று வளர்த்து வருகிறேன். அது வீட்டில் உலா வருவதால், எலித் தொல்லை கிடையாது. ரொம்ப அன்பாக எல்லாருடனும் பழகுது...'' என்றான் மாதவன்.
'நீ எதை வளர்க்கிற...'
இருவரும் மாணிக்கத்தை வினவினர்.
''பூனை, நாய் எல்லாம் வளர்க்கல. அதை விட, முக்கியமானதை வளர்க்க முயற்சித்து வருகிறேன்...'' என்றான் மாணிக்கம்.
'என்னவென்று சொல்...'
வியப்புடன் கேட்டனர்.
''நட்பு தான், நான் வளர்த்து வரும் நம்பிக்கை. செல்லப்பிராணிகளை விட எல்லா காலத்திற்கும் நிலைத்திருக்கும். அது உறுதியாயிருக்கணும். படிச்சு முடிச்சு, வேறு ஊர்களுக்கு போனாலும், நட்பு தொடரணும். எல்லாரும் பெருமைப்படணும். இது தான் என் வேண்டுகோள்...''
அதை ஏற்று, 'உன் எண்ணம் நிச்சயம் நிறைவேறும். அதற்கு உறுதுணையாக இருப்போம். நம் நட்பு என்றைக்கும் நிலைத்திருக்கும்...' என்று பெருமையுடன் கூறினர். நட்பின் வலிமையை அறிந்து பூரித்துப் போனான் மாணிக்கம்!
குழந்தைகளே... நட்பை சிறப்பாக பேணுவோம்.
- ஆர்.தனபால்