PUBLISHED ON : ஆக 17, 2024

முன்கதை: பள்ளியில் படித்து வந்தான் மகிழ். கனவுலகில் நாய்குட்டிகளுடன் சஞ்சாரம் செய்வான். இதை அறிந்து காவல்துறையில் மோப்ப நாய்களுக்கு பயற்சி தரும் பிரிவுக்கு அழைத்து சென்றார் அவன் தந்தை. நாய்களுக்கு, பயற்சி அளிப்பது குறித்த விபரங்கள் அவனுக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இனி -
காவல்துறையில் மோப்ப நாய் பயிற்சியாளராக, 10 ஆண்டுகளாக பணிபுரிகிறான் காண்டீபன். அவன் வயது, 36; கருத்த நிறம். 180 செ.மீ., உயரம். நாய்களின் மீது மிகுந்த அபிமானம் உடையவன்.
தான் பயிற்சி கொடுத்து வரும், 'செங்கிஸ்கான்' என்ற மோப்ப நாயின் பெயரை, இடது நெஞ்சுப் பகுதியில் பச்சைக் குத்தியிருந்தான்; அவனும், மோப்ப நாய் செங்கிஸ்கானும் உற்ற நண்பர்கள் போல பழகி இருந்தனர்.
தனக்கு நான்கு கால்களும், ஒரு வாலும் இருப்பதாக உணர்ந்து செயல்படுவான் காண்டீபன்.
அவன் கண்களில் இருந்து தாரை தாரையாய் கண்ணீர் பெருக்கெடுத்தது.
''ஐயா... அவர் ஏன் அழுகிறார்...''
காவல்துறை துணை அதிகாரியிடம் வினவினான் மகிழ்.
''அவரது கட்டுப்பாட்டில், எட்டு ஆண்டுகளாக பயிற்சி பெற்று வந்த மோப்ப நாய் செங்கிஸ்கான் இன்று, ஓய்வு பெறுகிறது. அந்த நாயைத் தான், நீங்கள் தத்தெடுக்கிறீர்...''
''அப்பா... அதிகாரி சொல்வது எல்லாம் உண்மையா...''
வியப்புடன் கேட்டான் மகிழ்.
''ஆமாம் கண்ணா...''
''நான், இது போன்ற நாயைக் கேட்டேனா...''
''ஒரு சாதாரண நாயை தத்தெடுத்து வளர்ப்பதில், என்ன சுவாரசியம் இருக்கிறது. காவல்துறையில் பணிபுரிந்த மோப்ப நாயை தத்தெடுப்பதில் பல விஷயங்கள் ஒளிந்துள்ளன...''
''அவை என்னென்ன...''
''ஒன்று, சமுதாயத்திற்காக ஓடி ஓடி அயராது உழைத்த மோப்ப நாயை கவுரவப்படுத்துகிறோம். இரண்டு, எட்டு ஆண்டுகள் காவல்துறை சூழலில் இருந்ததை திடீரென, வீட்டு சூழலுக்கு கொண்டு செல்லும் போது, தன்னை எப்படி மாற்றிக் கொள்ளும் என்பதை கண்கூடாய் பார்க்கப் போகிறோம். இந்த மோப்ப நாயின் பெயர் செங்கிஸ்கான்...
''செங்கிஸ்கான் என்ற பெயர் கி.பி., 1162 முதல், 1227 வரை உலகை மிரட்டிய மங்கோலிய மன்னனுக்கு உரித்தானது. அவன் பெயர் சூடிய இந்த நாய் எப்படி வீர தீரமாய் நடக்கும் என்பதை பார்க்க காத்திருக்கிறேன் அப்பா... ஒரு நாயின் ஆயுட்காலம் எவ்வளவு...''
''எட்டு ஆண்டுகள். நாயின் ஒரு ஆண்டு மனிதரின், 12 ஆண்டுகளுக்கு சமம்...''
''அப்படியென்றால், விரைவில் உயிரை விட போகும் ஒரு வயோதிக நாயை தத்தெடுக்கிறோம்...''
''போஷாக்காய் கவனித்தால் நாய்கள், 15 ஆண்டுகள் வரை உயிர் வாழும். இன்னும், எட்டு ஆண்டுகள் செங்கிஸ்கான் ராஜ வாழ்க்கை வாழட்டுமே...''
பெருமிதம் பொங்க சொன்னார் அப்பா.
காண்டீபனிடம் திரும்பினான் மகிழ்.
''செங்கிஸ்கானுக்கு இந்த பெயர் சூட்டியது யார்...''
''சில இடங்களில், மோப்ப நாய்க்கு பெயர் வைப்பதற்கு சட்ட திட்டங்களை காவல்துறை வகுத்துள்ளது. செங்கிஸ்கானை பொறுத்தவரை அந்த சட்ட திட்டம் எதுவும் இல்லை. அதற்கு நானே விரும்பி பெயர் சூட்டினேன்...''
''செங்கிஸ்கான் என்ற மன்னன் கொடுங்கோலன் இல்லையா...''
''வில்லனிடமும் சில கவர்ச்சிகரமான அம்சங்கள் இருக்கும். இன்றைய உலகின், 1.6 கோடி மனிதர்களின் டி.என்.ஏ.,வில் செங்கிஸ்கானின் குரோமோசோம் கலந்திருப்பதாக ஒரு ஆய்வு கூறுகிறது. அவன் வாழ்நாளில், 20க்கும் மேற்பட்ட போர்களில் ஈடுபட்டு வெற்றி பெற்றிருக்கிறான். எதிரிகளாக இருந்த பலரையும் மடை மாற்றி தான் படைத்தளபதியாக நியமித்திருந்தான். போர்களில், எதிரி நாட்டு வீரர்களில் நான்கு கோடி பேரை செங்கிஸ்கான் கொன்றதாக சரித்திரம் கூறுகிறது...''
''செங்கிஸ்கான் பெயரை தாங்கிய உங்கள் நாலுகால் நண்பரின் குணம் எப்படி...''
''கீழ்ப்படிதலும், அளவில்லா அன்பும், குற்றவாளிகளின் மீது தீராபகையும் உடையது செங்கிஸ்கான்...''
''பேச்சில் மட்டும் கூறினால் எப்படி... அந்த நாயை கண்ணில் காட்டினால் தானே...''
''தம்பி... தயவுசெய்து சற்று பொறுத்திருங்கள். அதற்கு முன் சில விஷயங்களை சொல்கிறேன். பொதுவாக, மோப்ப நாய்கள் குற்றவாளிகளை, 100 சதவீதம் கண்டுபிடித்து விடுமா என்று கேட்டால் இல்லை என்பதே பதில். மோப்பம் பிடிப்பதில், 60 சதவீதம் வரை தான் சக்சஸ் ரேட் இருக்கும். ஆனால், இந்த செங்கிஸ்கானின் சக்சஸ் ரேட், 95 சதவீதம் என்றால் இதன் திறனை கணித்துக்கொள்ளவும்...''
''ஊப்...''
''முதல் உலகப் போரில் பணியாற்றிய ரின்டின்டின், கே 9 ஜெத்ரோ, கே 9 சீக்கோ, கே 9 ஆக்செல் போன்ற மோப்ப நாய்கள் உலகப்புகழ் பெற்றவை. அவற்றிற்கு சிறிதும் சளைத்தது அல்ல இந்த செங்கிஸ்கான்...''
''மோப்ப நாய்களுக்கு ஓய்வூதியம் உண்டா...''
''உண்டு... ஒவ்வொரு நாளும், 45 ரூபாய்...''
''குறைவு தான்...''
''சிறிது நேரத்தில், பணி ஓய்வு பெறும் செங்கிஸ்கானுக்கு, பிரிவு உபச்சார விழா நடக்கப் போகிறது. வாருங்கள்... கான்பரன்ஸ் ஹாலுக்கு செல்வோம். அங்கு, தி கிரேட் செங்கிஸ்கானை நேரில் பார்க்கலாம்...''
கான்பரன்ஸ் ஹால் நோக்கி நடந்தனர் நால்வரும்.
உயரம், இரண்டு அடி, எடை, 35 கிலோ; துாய வெள்ளை நிற லேபரடார் ரிட்ரீவர் இனத்தை சேர்ந்த நாய் செங்கிஸ்கான் ஸ்டைலாய் நடந்து வந்தது.
- தொடரும்...
ஆர்னிகா நாசர்