PUBLISHED ON : நவ 02, 2024

முன்கதை: வளர்ப்பு மிருகங்கள் மீது அன்பு கொண்ட சிறுவன் மகிழ் ஆர்வத்தை அறிந்து, காவல்துறையில் ஓய்வு பெற்ற மோப்பநாய் செங்கிஸ்கானை தத்தெடுத்தார் அவன் தந்தை. எதிர்ப்பை மீறி அடுக்குமாடி குடியிருப்பில் வளர்த்தனர். குடியிருப்பின் எல்லா பகுதிகளிலும் பாதுகாப்பை உறுதி செய்தது செங்கிஸ்கான். காவல்துறையில் அதன் பயிற்சியாளராக இருந்த காண்டீபன் பிரிய முடியாமல் தவித்து பார்க்க வந்தார். இனி -
பிரிய முடியாமல் செங்கிஸ்கானை பார்க்க வந்த காண்டீபனை கண்டதும், செங்கிஸ்கானுக்கு ஓடிச் சென்று, கட்டி முத்தமிட ஆசை கிளர்ந்தது.
'காவல்துறை பணியில் இருந்த வரை எனக்கும், காண்டீபனுக்கும் இடையே ஒரு அலுவலக ரீதியான பிணைப்பு, உறவு முறை இருந்தது. தற்போது, அது துண்டிக்கப்பட்டு, ஒரு வாரத்துக்கும் மேலாகிறதே... அவரும், நானும் அந்நியர்களாக மாறி விட்டோம்; தற்சமயம், நான் மகிழ் குடும்பத்து தத்து உறுப்பினன்'
காண்டீபனின் எதிரில், உணர்ச்சி வெள்ளத்தில், தத்தளித்தது செங்கிஸ்கான்.
''செங்கிஸ்கான்...''
'கிர்ர்...'
''என்னை அடையாளம் தெரியலையா... நான் தான் காண்டீபன். உன் ஞான தகப்பன்; எட்டு ஆண்டுகளாக, நீயும், நானும் சேர்ந்து, குற்றவாளிகளின் கண்களில் விரலை விட்டு ஆட்டினோமே... மறந்து விட்டாயா...''
'கிர்ர்...'
''டேய்... எந்த பேதமும், பார்க்காமல் ஒரே தட்டில், சோறு தின்றுள்ளோம். ஒவ்வொரு சோறு உருண்டையிலும், அன்பை பிசைந்து ஊட்டி இருக்கிறேன்...''
அது கேட்டு கண்ணீருடன், ஊளையிட்டது செங்கிஸ்கான்.
''நன்றி உள்ளது நாய்ன்னு சொல்லுவர்... மனிதர்களுடன் பழகி, அந்த நல்ல குணத்தை தலை முழுகிட்டியா...''
இரு முன்னங்கால்களை மடித்து சரிந்தது செங்கிஸ்கான்.
''ஏய்... துப்பறியும் கிழவா... நாலுகால் தாத்தா... முந்தைய பிறவியில் மங்கோலிய மன்னனாக பிறந்த மாவீரா... அழகனே... மிடுக்கனே... என் உயிரே... என்னை மறந்து நிற்கிறீயே கண்மணியே...''
வேகமாக காண்டீபன் மீது பாய்ந்து, முகத்தை நக்கி முத்த மழை பொழிந்தது. ஏதேதோ கூறி குரைத்து, உறுமி ஊளையிட்டது.
'குருவே... உன்னை மறப்பேனா...'
''அப்புறம் ஏன், என்னை தெரியாதவன் போல் நடித்தாய்...''
'தத்து விதிகள் நம் சந்திப்பை அனுமதிக்குமா என்ற சந்தேகம்...'
''என்ன புடலங்காய் விதிகள்... நம் அன்பு, காட்டாறு வெள்ளம் போல் அனைத்து தடுப்பணைகளையும் உடைத்து ஓடும்...''
'குருவே... சாப்பிட்டீரா...'
''முதலில் நீ சாப்பிட்டாயா...''
எடுத்து வந்திருந்த வறுத்த இறால்களை செங்கிஸ்கானுக்கு ஊட்டினான். அது, நக்கி கடித்தது கண்டு மனம் மகிழ்ந்தான்.
''நீ சுவையுடன் சாப்பிடுவது தித்திக்குது...''
இருவரும் கட்டிப் பிடித்து உருண்டனர். செங்கிஸ்கானை உப்பு மூட்டை துாக்கி அங்குமிங்கும் ஓடினான் காண்டீபன்.
''விளையாடியது போதும். அப்படியே, உன் வீட்டுக்கு செல்வோம்...''
உப்பு மூட்டை துாக்கியபடி, மகிழ் பிளாட்டுக்கு நடந்தான் காண்டீபன்.
வீட்டுக்குள் பிரவேசிக்கும் காண்டீபனையும், செங்கிஸ்கானையும் பார்த்தான் மகிழ்.
''வணக்கம் காண்டீபன் ஐயா...''
''அனைவருக்கும் வணக்கம்...''
'வாருங்கள்...'
வரவேற்றனர் மகிழின் பெற்றோர். செங்கிஸ்கானை இறக்கி விட்டு நின்றான்.
கலங்கிய கண்களுடன் முதலில் மகிழ், அடுத்து அவனுடைய பெற்றோரையும், முறையிடும் பார்வை பார்த்தான் காண்டீபன்.
''அமருங்கள் காண்டீபன்...''
அவன் எதிரில், மகிழின் தந்தை அமர்ந்தார். மகிழ் ஒரு ஓரமாக நின்றான்.
''காபி குடியுங்கள் காண்டீபன்...''
''நான் விருந்து சாப்பிட வரவில்லை. என் செங்கிஸ்கானை பார்க்க வந்தேன்; அந்த உரிமை உண்டா இல்லையா...''
''உங்களுடைய வளர்ப்பு தானே செங்கிஸ்கான். எப்போதாவது வந்து பாருங்கள். அடிக்கடி வந்து சென்றால், அது ஏங்கி நிற்கும்...''
''தத்தெடுத்த ஆணவத்தில் பேசுகிறீரா...''
''அதெல்லாம் இல்லை. நாங்கள், அதன் மீது வைத்திருக்கும் அன்பை கூறுகிறோம்; செங்கிஸ்கான் வந்த ஒரே வாரத்தில், எங்கள் குடும்பத்துடன் ஒன்றிணைந்து விட்டது...''
''நான், வெறும் கையுடன் செல்வதற்காக இங்கு வரவில்லை. உறவை, நிரந்தரமாக பிரித்து கூட்டி செல்ல வந்துள்ளேன். எனக்காக விட்டு தாருங்கள்...''
''மன்னிக்கணும். எங்களால் முடியாது...''
''லட்சம் ரூபாய் பணம் தருகிறேன். கொடுங்கள்...''
''எவ்வளவு கொடுத்தாலும், செங்கிஸ்கானை தர மாட்டோம். புறப்படுங்கள்...''
''என் மனைவியின், 20 சவரன் நகை, 30 லட்சம் ரூபாய் பணம், வீடு எல்லாத்தையும் தருகிறேன். செங்கிஸ்கானை என்னிடம் கொடுங்கள்...''
காண்டீபன் கதறி அழுத போது, ரத்த அழுத்தம் தலைக்கு ஏறியது.
''இந்த பூமியை தராசின் ஒரு தட்டிலும், இன்னொரு தட்டில் செங்கிஸ்கானையும் வைத்தால், அது தான் கனக்கும். என் உயிர், நிழல், நான்கு கால் ஹைக்கூ எல்லாமே அது தான்; கொடுத்து விடுங்கள்...''
மகிழின் தந்தையின் கால்களை பற்றி, கண்ணீர் ஓல மிட்டான் காண்டீபன்.
இது கேட்டு உணர்ச்சி பிரளயத்தில் தத்தளித்தது செங்கிஸ்கான்.
- தொடரும்...
- ஆர்னிகா நாசர்