sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

சிறுவர் மலர்

/

ஓடி ஒளியாதே பூஞ்சிட்டே! (15)

/

ஓடி ஒளியாதே பூஞ்சிட்டே! (15)

ஓடி ஒளியாதே பூஞ்சிட்டே! (15)

ஓடி ஒளியாதே பூஞ்சிட்டே! (15)


PUBLISHED ON : நவ 09, 2024

Google News

PUBLISHED ON : நவ 09, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முன்கதை: வளர்ப்பு மிருகங்கள் மீது அன்பு கொண்ட சிறுவன் மகிழ் ஆர்வத்தை அறிந்து, காவல்துறையில் ஓய்வு பெற்ற மோப்பநாய் செங்கிஸ்கானை தத்தெடுத்தார் அவன் தந்தை. எதிர்ப்பை மீறி அடுக்குமாடி குடியிருப்பில் வளர்த்தனர். குடியிருப்பின் எல்லா பகுதிகளிலும் பாதுகாப்பை உறுதி செய்தது செங்கிஸ்கான். காவல்துறையில் பயிற்சியாளராக பணியாற்றிய காண்டீபன், அதை பிரிய முடியாமல் தவித்தான். அதை அழைத்து செல்லும் எண்ணத்துடன் வந்து தீவிரமாக மன்றாடினான். இனி -

கால்களை கட்டிய காண்டீபன் கைகளை உதறினார் மகிழின் தந்தை.

''என்ன காரியம் செய்கிறீர். காவல்துறையில் வேலை பார்ப்பவர் என் பாதங்களில் விழலாமா... எழுந்து உட்காருங்கள்...''

''முடியாது... செங்கிஸ்கானை, என்னிடம் ஒப்படைப்பதாக உறுதியாக கூறுங்கள்...''

காண்டீபனை நெட்டித் தள்ளி, விலகி நின்றார் மகிழின் தந்தை.

காண்டீபனின் கவனம் மகிழ் பக்கம் திரும்பியது.

''தம்பி... அப்பாவிடம் கூறி, செங்கிஸ்கானை என்னிடம் ஒப்படையுங்கள்...''

''தயவுசெய்து அதை மறந்து, வேறு வேலையை பாருங்கள்...''

இந்த பதிலை கேட்டதும் மகிழின் அம்மாவை நோக்கினான் காண்டீபன்.

''தாயீ... உங்க கணவருக்கும், மகனுக்கும் அறிவுரை கூறி, செங்கிஸ்கானை தாருங்கள். உங்க குடும்பம் நல்லா இருக்கும்...''

ஆணி அடித்தாற் போல அப்படியே நின்றார் மகிழின் அம்மா.

''குடும்பமே அசைந்து கொடுக்காமல், கல்லுளி மங்கன்களாக நிற்கிறீர்களே... இது நியாயமா...''

''நீங்கள் ஒரு காவல்துறை ஊழியர்; உங்கள் மேலதிகாரிகளிடம் முறையிட்டு தத்து ஆவணத்தை ரத்து செய்து, செங்கிஸ்கானை கைப்பற்றுங்கள்; எங்களிடம் என்ன தான், அழுது புலம்பினாலும் தர மாட்டோம்...''

''செங்கிஸ்கானுடன் ஒரு வாரம் தான் இருந்துள்ளீர். அதற்குள், அதனிடம் எதை கண்டு, விட்டுக் கொடுக்காமல் ஒற்றைக்காலில் நிற்கிறீர்...''

''ஒரு ரகசியம் கூறினால், கேட்டு சிரிக்கக் கூடாது...''

''நான் சிரிக்கும் நிலையில் இல்லை. கூறுங்கள் கேட்கிறேன்...''

''செங்கிஸ்கானின் பிறந்த நாளும், என் தாத்தாவின் இறந்த நாளும் ஒரே தேதி. என் தாத்தா தான், செங்கிஸ்கானாக பிறந்து இருக்கிறார் என நம்புகிறேன். அதனால், அதை விட்டு தர முடியாது...''

''மகிழ்... கடைசியாக ஒரு எச்சரிக்கை. செங்கிஸ்கானை என்னிடம் தரவில்லையேல் நானும், என் குடும்பமும், தற்கொலை செய்து கொள்வோம். இறப்புக்கு, உங்கள் குடும்பம் தான் காரணம் என, எழுதி வைத்து விடுவோம்...''

''ஒரு மோப்பநாய்க்கு கூட்டு தற்கொலையா... நாங்கள் பயப்பட மாட்டோம்...''

''காவல்துறையில் எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கின்றனர். உங்கள் குடும்பத்தின் மேல், பொய் குற்றங்கள் சுமத்தி தொல்லை தருவேன்; நிம்மதியாக வாழ முடியாது; நீங்களே என் காலை பிடித்து கதறி, செங்கிஸ்கானை ஒப்படைப்பீர்...''

''மன நிலை பாதிக்கப்பட்டது போல் பிதற்றுகிறீர். எதை செய்தாலும், சட்டப்படி, எதிர் கொள்கிறோம். இதுவரை பேசியதை மறந்து சமாதானமாய், காப்பி குடித்து புறப்படுங்கள்...''

''என் செங்கிஸ்கான், இந்த குடியிருப்பில் மகிழ்ச்சியுடன் இருக்கிறானா...''

''நீங்களே பாருங்கள். அழகு நிலையம் எல்லாம் சென்று, பள...பள...ன்னு இருக்கான்; இந்த பாற்கடல் அடுக்குமாடி குடியிருப்பின் மன்னனே அது தான்...''

''செங்கிஸ்கான்... இங்கு, நீ மகிழ்ச்சியாக இருக்கிறாயா...''

காண்டீபனின் கேள்விக்கு தலையாட்டியது செங்கிஸ்கான்.

''உன்னை வளர்த்து உருவாக்கியவன் நான். இவர்கள் உன் மீது, அன்பை செலுத்துவதாக நடிக்கும் அந்நியர்கள். இதயத்தை தொட்டு பதில் கூறு; யார் வேண்டும்...''

செங்கிஸ்கான் காதுகளில், இந்த கேள்வி பேய் தனமாக அறைந்தது. கெஞ்சி நிற்கும் காண்டீபன்; இயல்பாய் நிற்கும் மகிழின் குடும்பம்; நொடிகள் கரைந்தன. ஒளி வேகத்தில், மகிழ் மீது பாய்ந்து கட்டியது செங்கிஸ்கான்.

பற்களை, 'நற... நற...'வென கடித்து, தரையை ஆங்காரமாக உதைத்தான் காண்டீபன்; திடீரென மயக்க மருந்து, 'ஸ்ப்ரே' எடுத்து கொண்டு பாய்ந்தான்.

முதலில் செங்கிஸ்கான், அடுத்து மகிழ், அடுத்தடுத்து மகிழ் பெற்றோர் மீது ஸ்ப்ரே செய்தான். அனைவரும் மயங்கினர்.

ஒரு சாக்குப் பையில் செங்கிஸ்கானை போட்டு கட்டினான் காண்டீபன். அதை அவசரமாக துாக்கியபடி வேனுக்கு ஓடினான். மூட்டையை பின் பக்கம் போட்டு, வேனில் ஏறினான். அடுத்த நொடி வேன் சீறிப் பாய்ந்தது.



- தொடரும்...

ஆர்னிகா நாசர்







      Dinamalar
      Follow us