PUBLISHED ON : டிச 21, 2024

முன்கதை: ஆர்வத்தால், காவல்துறை புலனாய்வு பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்ற மோப்ப நாய் செங்கிஸ்கானை, தத்தெடுத்தான் சிறுவன் மகிழ். குடியிருப்பு வாசிகளின் அன்பை அது பெற்றது. அதை பிரிய மனமின்றி பயிற்சியாளராக இருந்த காண்டீபன் கடத்தி சென்றான். அது ஒத்துழைக்க மறுத்ததால் திறந்து விட்டான். மகிழ் வசித்த குடியிருப்புக்கு மீண்டும் வந்த செங்கிஸ்கானை, மர்மக் கண்கள் நோட்டமிட்டன. இனி -
பழைய குடோன் ஒன்றில், பழைய இரும்பு பொருட்கள் குவிந்து கிடந்தன; பிரதான வாசலில், மகேந்திரா ஆர்மெடா ஜீப்பும், நான்கு ஆடம்பரக்கார்களும் நின்றிருந்தன. கறுப்பு நிற ஜீன்சும், அதே நிறத்தில் டி - சர்ட்டும் அணிந்த தடியர்கள் நின்றிருந்தனர். முகங்களில், வெட்டுக் காயங்களும், தையலும் இருந்தன.
உள்ளே ஒரு நீண்ட மேஜை இருந்தது. அதை சுற்றி, 10 பேர் குழுமி இருந்தனர்.
சிம்மாசனம் போன்ற இருக்கையில் அமர்ந்திருந்தான் தலைவன். வயது, 67. உயரம், 182 செ.மீ., எடை, 105 கிலோ. வெளிநாடு ஒன்றை சேர்ந்தவன். பெயர் சினகா விஜய்காந்த்; போதை பொருள் கடத்தும் மாபியா கும்பல் தலைவன். சர்வதேச அளவில் நுாற்றுக்கும் மேற்பட்ட குற்றங்களில் தொடர்பு உடையவன். பலரைக் கொன்ற குற்றவாளி. சொந்தமாய் துப்பாக்கிகளை தயாரிக்கத் தெரிந்தவன். தமிழ், ஆங்கிலம் உட்பட, 12 மொழிகள் பேசுவான்.
''காலை வணக்கம் நண்பர்களே...''
'வணக்கம்... போதைப் பொருள் பிரபு...'
''அழைத்த அனைவரும் வந்திருக்கிறீர்களா...''
'வந்துள்ளோம்...'
''பக்கத்து நாட்டில் நமக்கு போட்டியாக ஒரு குழு இயங்கிக் கொண்டிருந்ததே... அதன் தலைவனை கொன்று விட்டீர்களா...''
'நேற்று தான் கதையை முடித்தோம்...'
''அண்டை நாட்டில் இருந்து, 200 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருள் வருகிறது. அதை பாதுகாப்பாக, எடுத்து வந்து சேருங்கள்...''
'சரி பிரபு...'
''கிழக்கு நாட்டின் கார்லோஸ் இப்போதும், நம்முடன் தொடர்பில் இருக்கிறானா...''
'அடிக்கடி பேசிக் கொள்கிறோம். மிகவும் நம்பிக்கையான ஆள்...'
''நம் போதை பொருள் கடத்தல்கள் நாட்டின் எல்லை வழியிலும், கடல் மார்க்கமாகவும் நடக்கின்றன; ஒரு ஆண்டு டர்ன் ஓவர், 5,000 கோடி இந்திய ரூபாய்... நம்மை எதிர்க்கும் சாதாரண குடிமகனாக இருந்தாலும், போதை பொருள் தடுப்பு அதிகாரியாக இருந்தாலும், நேர்மையான அரசியல்வாதியாக இருந்தாலும் உயிருடன் விட்டு வைப்பதில்லை...''
'உண்மை தான் பிரபு...'
''இதுவரை நம் போதை பொருள் கடத்தலில் குறுக்கிட்ட, 78 பேரை ஈவு இரக்கம் இன்றி சுட்டுக் கொன்றுள்ளோம்...''
அதை கேட்டதும், 'இறந்த அனைவரும் நரகத்தில் நின்று, நம்மை வசைபாடுவர்...' என சிரித்தனர்.
''நல்ல பாட்டாய் இருந்தால், நாமும் கேட்டு ஆடுவோம். இந்த மாநிலத்திலும் நம் நெட்வொர்க், 20 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது...''
'ஆமாம்...'
''ஆனால், இருவர் மட்டும் போதை பொருள் கடத்தலுக்கு தடங்கலாய் இருந்துள்ளனர். மோப்ப நாய் பயிற்சியாளர் காண்டீபனும், அவன் கட்டுப்பாட்டில் இருந்த மோப்ப நாய் செங்கிஸ்கானும்...''
'ஆமாம்...'
''கீழ்மட்டத்தில் இயங்கும் சில்வண்டுகள் தானே...''
'அந்த செயலை குறைத்து மதிப்பிடாதீர். எட்டு ஆண்டுகளாக, நம் நெட்வொர்க் ஒட்டு மொத்தமாக சிதறடிக்கப்பட்டது...'
''அப்படியா...''
'எட்டு ஆண்டுகளில், 20 போதை கடத்தல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதனால் ஏற்பட்ட நஷ்டம், 580 கோடி ரூபாய்...'
''அப்படியென்றால் ஏன் உயிருடன் விட்டு வைத்துள்ளீர்...''
'பல முயற்சிகளில் தப்பித்து விட்டனர். இரண்டு வாரங்களுக்கு முன், மோப்பநாய் செங்கிஸ்கான் பணி ஓய்வு பெற்றது. அதை சிறுவன் மகிழ் குடும்பத்தினர் தத்தெடுத்துள்ளனர்...'
''உண்மையா... எனக்கு, காண்டீபன் மீது கோபமில்லை. அவன் மனிதன்; அரசு சம்பளம் கொடுக்கிறது. வேலை செய்கிறான்; இந்த செங்கிஸ்கான் நாய்க்கும், நமக்கும் என்ன பகை. போலீஸ் துாக்கி போடும் ரொட்டிக்கும், எலும்புத் துண்டுக்கும் நம் குற்றங்களை கண்டு பிடிச்சு கொடுக்கிறதே... அதனால், அதன் மீது தான் கொலைவெறி...''
'உண்மையான பழி வெறி...'
''செங்கிஸ்கானுக்கு மரண தண்டனை விதிக்கிறேன். தண்டனையை அடுத்த, 96 மணி நேரத்திற்குள் நிறைவேற்ற வேண்டும்...''
'பிரபு... யாரை அனுப்பப் போகிறீர்...'
''ஹிட்மேன்... அவன் தான் செங்கிஸ்கானை கொல்லப் போகிறான்...''
'எப்படி கொல்லப் போகிறீர்...'
''அவன் விரும்பிய வண்ணம் செங்கிஸ்கானின் மரண தண்டனையை நிறைவேற்றலாம்...''
'காண்டீபன்...'
''அவனை பின்னர் பார்த்துக் கொள்ளலாம்...''
எழுந்து நின்றான் ஹிட்மேன். மஞ்சள் நிறம். உள்ளடங்கிய கண்கள். கராத்தே கலையில் நிபுணன்; துாரத்து இலக்கையும், துல்லியமாக சுடும் துப்பாக்கியை பயன்படுத்தும் கலைஞன்.
''நீங்கள் ஆணையிட்டபடி, செங்கிஸ்கானை சுட்டு வீழ்த்துவேன்...''
டெலஸ்கோபிக் துப்பாக்கியை வலது நெஞ்சுடன் இணைத்து எடுத்த ஹிட்மேன், ''என் துப்பாக்கிக்கு, அந்த செங்கிஸ்கான் பலியாகும்...'' என அகங்காரமாக சிரித்தான்.
கண் சிமிட்டினாள் மரண தேவதை.
- தொடரும்...
- ஆர்னிகா நாசர்