PUBLISHED ON : ஜன 04, 2025

முன்கதை: காவல்துறை புலனாய்வு பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்ற மோப்பநாய் செங்கிஸ்கானை, தத்தெடுத்தான் சிறுவன் மகிழ். அதன் பயிற்சியாளராக இருந்த காண்டீபன், பிரிய மனமின்றி அதைக் கடத்தி குளறுபடி செய்தான். அவனுடன் ஒத்துழைக்க மறுத்து மகிழுடன் சேர்ந்தது செங்கிஸ்கான். முன் விரோதத்தால் போதைப் பொருள் கடத்தல் கும்பல் அதை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டி, துப்பாக்கியால் குறி வைத்தான் கடத்தல்காரன் ஹிட்மேன். இதை அறிந்து தடுக்க வந்தான் காண்டீபன். இனி -
செங்கிஸ்கானுக்கு வைத்த குறி, ஒரு புள்ளி விலகி, ஆயிரம் மைக்ரோ தோட்டாக்களாய் சிதறியது.
ஹிட்மேன் மீது பாய்ந்தான் காண்டீபன்.
இருவருக்கும் அதிரடி சண்டை ஆரம்பித்தது. ஹிட்மேன் முகத்தில் தொடர்ந்து குத்துகள் விழுந்தன.
இறுதி குத்தில் அவன் முஷ்டியை முறித்தான் காண்டீபன்.
கைகளை திருகி காண்டீபனை தரையில் வீழ்த்தினான் ஹிட்மேன். தரையில் விழுந்த போது, பின்னங்காலை நெத்தினான். முன்னுக்கு மடங்கி விழுந்த காண்டீபன் முதுகில் தொடர்ந்து மொத்தினான்; இருவரும் கட்டிப் புரண்டனர்.
ஹிட்மேனின் இரு கைகளை பின்னுக்கு இழுத்து முறித்தான் காண்டீபன்.
வலி தாங்காமல் கதறி கூக்குரலிட்டு வசவு வார்த்தைகளை உதிர்த்தான் ஹிட்மேன்.
எதையும் காதில் வாங்காமல் அலைபேசியை இயக்கி, காவல் துறையை தொடர்பு கொண்டு, ''பிரபல போதைக்கடத்தல் மாபியா ஹிட்மேனை உயிருடன் பிடித்து வைத்துள்ளேன்; விரைந்து வாருங்கள்...'' என கூறி, இடத்தை குறிப்பிட்டான் காண்டீபன்.
சிறிது நேரத்திற்கு பின் -
காவல்துறை ஜீப் வந்து நின்றது. காவல்துறை கமிஷனரும், துணை அதிகாரிகளும் இறங்கினர்.
ஹிட்மேனுக்கு கைவிலங்கு பூட்டினர் அதிகாரிகள்.
''என்னை கைது செய்தால், எல்லா உயிராபத்துகளும் உங்களுக்கு நீங்கி விடுமா... திகிலுடன் காத்திருங்கள்...''
கத்தினான் ஹிட்மேன்.
''போடா டேய்... உன்னை மாதிரி ஆயிரம் பேரை பார்த்துட்டேன்...''
ஹிட்மேனை காவல் வாகனத்தில் ஏற்றினர் அதிகாரிகள். அவன் துப்பாக்கிகள் அடங்கிய, 'கிட் பேக்' கைப்பற்றப்பட்டது.
'டிவி' செய்திகளில் அது தொடர்பான ஒளிப்படங்கள் ஒளிபரப்பாயின.
தகவல் அறிந்து செங்கிஸ்கானுடன் ஓடி வந்தான் மகிழ்.
காண்டீபனை கட்டிக் கொண்டது செங்கிஸ்கான்; முத்த மழை பொழிந்து ஆனந்தக் கூத்தாடினான் காண்டீபன்.
'நீங்கள் தான் செங்கிஸ்கானை காப்பாற்றியவரா...'
''ஆமாம்...''
சுற்றியிருந்தோர் ஆரவாரித்தனர்.
''செங்கிஸ்கான் மீதான உங்கள் அன்பு பிரமிப்பூட்டுகிறது. நீங்கள் வில்லன் அல்ல; எப்போதுமே ஹீரோ தான்...''
''நன்றி மகிழ்...''
''செங்கிஸ்கானை கொல்ல சதித்திட்டம் தீட்டியிருந்தது உங்களுக்கு எப்படி தெரிந்தது...''
''உள் மன பறவை என்னை எச்சரித்தது...''
''ஹிட்மேனை உங்களுக்கு தெரியுமா...''
''போலீஸ் விசாரணை அறிக்கையில் பலமுறை ஒளிப்படங்களை பார்த்திருக்கிறேன். இவன் பயன்படுத்திய 'டெவாஸ்டேட்டிங் புல்லட்' மிக ஆபத்தானது மகிழ்...''
''எப்படி...''
''இந்த தோட்டா இலக்கை முத்தமிட்டதும், ஆயிரம் துண்டுகளாய் வெடித்து சிதறும். துாரத்தை கணித்து சுட டெலஸ்கோப்பும், தோட்டா சத்தம் பெரிதாய் கேட்காமல் இருக்க, சைலன்சரும் துப்பாக்கியில் பொருத்தப்பட்டிருக்கிறது...''
''அப்படியா...''
''இந்த ஹிட்மேன் அம்பு தான்; இவனை நாணேற்றி செலுத்திய வில் மறைவிடத்தில் கூட்டத்தில் ஒளிந்திருக்கிறது. அங்கு உள்ளோர் தொடர்ந்து நம்மை தாக்க முயற்சி செய்வர்...''
அப்போது காவல்துறை கமிஷனர் குறுக்கிட்டார்.
''காண்டீபன்... கவலைப்பட வேண்டாம்... விரைவில் கும்பலை கைது செய்து விடுவோம்...''
''நன்றி சார்...''
''இன்றைய உங்கள் சாகசம் ஆச்சரியமூட்டுகிறது. துப்பாக்கி ஏந்தியிருந்தவனை தனி ஆளாக நின்று சமாளித்துள்ளீர்...''
''துறை விசுவாசமும், செங்கிஸ்கான் மீதான அன்பும், என்னை இயக்குகிறது. உடலில் உயிர் இருக்கும் வரை மக்கள் நலனுக்காக உழைப்பேன்...''
''நீங்கள் கோவை காவல்துறை கிரீடத்தின் கோகினுார் வைரம்...''
''என்னை போன்ற பல வைரங்கள் காவல்துறையில் சத்தம் போடாமல் வேலை பார்க்கின்றன. நான் ஆயிரத்தில் ஒருவன்...''
செங்கிஸ்கானை மகிழிடம் ஒப்படைத்தான் காண்டீபன்.
''இது உங்களுக்குரியது மகிழ். பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்...''
''வீட்டில் ஒரு காப்பி சாப்பிட்டு போகலாம்; வாருங்கள்...''
பாற்கடல் அடுக்குமாடி குடியிருப்பில் சிறுவர்கள், காண்டீபனை சூழ்ந்தனர்.
இரண்டு வயது குழந்தை தான் சூப்பிய லாலி பாப்பை காண்டீபனிடம் நீட்டியது.
''எங்கள் செங்கிஸ்கானை காப்பாற்றியதற்கு லாலி பாப் தரேன்...''
''நன்றி குட்டீஸ்...''
ஹிட்மேன் கைது, -'டிவி'யில் நேரலையாக காட்டப்பட்டது. காவல் நிலையத்துக்கு அவனை அழைத்து சென்றதை நாடே பார்த்தது. இதை கண்டதும் வெறியால் ரிமோட்டை வீசி, 'டிவி'யை உடைத்தான், போதை பொருள் கடத்தல் மாபியா தலைவன் சினகா விஜய்காந்த்.
''முட்டாள்களா... மகிழ்ச்சியில் ஆடாதீர். அடுத்த தாக்குதலில், அனைவரும் காணாமல் போவீர்; நான் எப்போதும் ஓய்வெடுப்பதில்லை...''
கொக்கரித்தான் சினகா விஜய்காந்த்.
வானம் கறுத்து, ஒளி சாட்டையாய் மின்னல் சொடுக்கியது.
சிறிது நேரம் தாமதித்து, 'டிஸ்யூங்... டீரடாங்...' என இடி முழங்கியது.
- தொடரும்...
- ஆர்னிகா நாசர்