
உறைபனி சூழ்ந்த ஆர்டிக் பிரதேசத்தில் வாழ்கின்றன பனிக்கரடிகள்.
உலகில் வாழும் ஊன் உண்ணிகளில் பெரிய விலங்கு. கரடி இனத்தை சேர்ந்த பாலுாட்டி. இதன் ரோமம் வெள்ளையாக தெரிந்தாலும் கண்ணாடி போன்று நிறமில்லாதது. உண்மையில் இதன் தோல் நிறம் கறுப்பு. நிலத்தில் பிறந்தாலும், வாழ்நாளில் பெரும் பகுதியை கடலில் கழிக்கும். கடல் வாழ் உயிரனமான சீல் தான் இதன் பிரதான உணவு.
இதற்கு, 42 பற்கள் உண்டு. தோலுக்கு அடியில், 10 செ.மீ., அடர்த்தியில் கொழுப்பு திரண்டு இருக்கும். அதனால் தான் குளிரிலும் இயல்பாக வாழ்கிறது.
ஒரு கி.மீ., துாரத்தில் உள்ள சீல்களையும் மோப்பத் திறனால் அறியும். மணிக்கு, 40 கி.மீ., வேகத்தில் ஓடும் திறன் பெற்றது. நீரில் மணிக்கு, 10 கி.மீ., வேகத்தில் நீந்தும். திமிங்கலம் போன்ற உணவு கிடைக்கும் போது மட்டும் பகிர்ந்து உண்ணும்.
உறை பனி காலமான ஏப்ரல், மே மாதங்களில் இனப்பெருக்கத்தில் ஈடுபடும். பிரசவ காலத்தில் பனிப்பரப்பில் பெண்கரடி வளை தோண்டிக் கொள்ளும். அதில், காற்று செல்லும் வசதியுடன் பல அறைகள் இருக்கும்.
அங்கு இரண்டு குட்டிகளை ஈன்று எடுக்கும். குட்டிகள் குறைந்தபட்ச ரோமத்துடன் கண்களை மூடியபடி பிறக்கும். ஆர்டிக் பிரதேசத்தில் இதை இரையாக்கும் விலங்கு எதுவும் கிடையாது. மனிதர்கள் வேட்டையாடுவதால் அருகி வருகிறது இந்த உயிரினம். புவி வெப்பம் அதிகரிப்பதால் வேகமாக அழிந்து வரும் இனங்களில் ஒன்றாக உள்ளது.
- கே.அரவிந்த லட்சுமி

